அமைச்சர் கொடுக்கும் உத்தரவு ! காற்றில் பறக்க விடும் அதிகாரிகள் ! பரிதவிக்கும் ஆசிரியர்கள் !
அமைச்சர் கொடுக்கும் உத்தரவு ! காற்றில் பறக்க விடும் அதிகாரிகள் ! பரிதவிக்கும் ஆசிரியர்கள் !
”நவம்பர் 1 முதல் ஆசிரியர்கள், ஆசிரியர் வருகைப்பதிவு & மாணவர்கள் வருகைப் பதிவு தவிர வேறு எந்த பதிவுகளும் செய்ய வேண்டாம்.” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்மொழியாக கொடுத்த உத்தரவாதத்தை நம்பி அதன்படி செயல்பட்ட ஆசிரியர்கள் தற்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.
அமைச்சர் சொன்னது ஒன்று, அதிகாரிகள் செய்வது வேறொன்று என வேதனை தெரிவிக்கிறார்கள் ஆசிரியர்கள். இந்த விவகாரம் தொடர்பாக, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் …
“12-10- 2023 அன்று டிட்டோஜாக் உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக தாங்கள் உறுதியளித்துள்ளீர்கள். இரண்டு மாத காலம் முடிவடைந்த இந்த நிலைமையிலும் இணையதள EMIS பிரச்சனை போன்ற எதற்குமே தீர்வு காணாமல் இருப்பதை வேதனையுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நவம்பர் 1 முதல் ஆசிரியர்கள், ஆசிரியர் வருகைப்பதிவு & மாணவர்கள் வருகைப் பதிவு தவிர வேறு எந்த பதிவுகளும் செய்ய வேண்டாம் என உறுதிபட தெரிவித்தீர்கள்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உறுதிமொழியினை ஏற்று சிலர் உறுதிபட இன்றைய தேதி வரை மற்ற பதிவுகள் இடாமல் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடைபெறக்கூடிய அரும்பு ,மொட்டு, மலர் அரையாண்டு தேர்வில் எந்த மாணவர்களையும் Assessment FA (b) வைக்காமல் அவர்கள் எப்படி அரையாண்டு தேர்வு எழுத வேண்டும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த அரையாண்டு தேர்வு 4 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் எவ்வித தேர்வும் இல்லாமல் மாணவர்கள் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அப்படியிருக்கையில் மாணவர்களுக்கு Assessment FA ( b) போடவில்லை என்பதற்காக ஆசிரியர்களுக்கு எவ்விதமான நெருக்கடியும் தரக்கூடாது. வேண்டுமானால் நான்கு & ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாளை டவுன்லோட் செய்து தேர்வு வைப்பது போல ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் online தேர்வினை தவிர்த்து பயிற்சித்தாளில் தேர்வு வைப்பதையே ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் விரும்புகிறார்கள். தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் அப்படித்தான் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.
அதனால் Assessment FA ( b) போடாதவர்களுக்கு எவ்விதமான நெருக்கடியும், அழுத்தமும் தரக்கூடாது என்பதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு தாங்கள் SCERT இயக்குநர் அவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்துவது, அனைத்து பயிற்சிகளுக்கும் ஆசிரியர்களை ஏதுவாளராக கருத்தாளராக பயன்படுத்துவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மற்றும் CRC பயிற்சி வகுப்பில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பை அனுமதித்திட வேண்டும். அதைத் தவிர்த்து அவர்களுக்கு EL LEAVE போட கட்டாயப்படுத்துவது என்பது அதிகார வரம்பை மீறிய செயல். ஆசிரியர்களை உச்சம் தொட்ட வெறுப்புக்கு ஆளாக்கி வருகிறது.
CRC பயிற்சியில் அப்படி என்ன நடைபெறுகிறது? எங்கள் ஆசிரியரை வைத்தே பாடம் நடத்த வைப்பது, அவர்களை வைத்து கருத்துக்களை சொல்ல வைப்பது போன்ற இவை தவிர வேறு என்ன அங்கு நடைபெறுகிறது.
CRC பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு கட்டாயம் EL விடுப்பு தான் போட வேண்டும் என எந்த வட்டார கல்வி அலுவலர் கூறினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் மிகவும் ஆர்வமாக செயல்படக் கூடியவராக இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை என்பது ஒரு பரந்துபட்ட பெரிய துறை. அதற்கு செயலாளராக இருப்பவர் அறநிலையத்துறைக்கும் செயலாளராக இருக்கிறார், நிதித்துறைக்கும் செலவினத்துறை செயலாளராக இருக்கிறார்.
இது தமிழ்நாட்டு சரித்திரத்தில் நடைபெறாத நடைமுறையாகும். எனவே இவற்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அவரை பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மட்டும் செயல்படுவதற்கு ஆவன செய்து தருமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
உச்சம் தொட்ட வெறுப்பில் இருந்து வரும் ஆசிரியர் சமுதாயத்தை ஒப்பு கொண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் அரசுடன் இணக்கமான உறவுக்கு கொண்டு வர வேண்டுமாய் பெரிதும் வேண்டுகிறோம்.” என்ற வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.
மாணவர்களின் நலனிலிருந்து போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?
– அங்குசம் செய்திப்பிரிவு.