உள்ளே, வெளியே போக்கு காட்டும் நியோமேக்ஸ் நிர்வாகிகள்!
உள்ளே, வெளியே போக்கு காட்டும் நியோமேக்ஸ் நிர்வாகிகள்!
நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்ட அசோக் மேத்தா; மற்றொரு துணை நிறுவனமான டிரிடாஸ் நிறு வனத்தின் இயக்குநர் மதிவாணன் ஆகிய இருவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குநர்களாக செயல்பட்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைமை பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரும் இன்னும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.
ஒருபக்கம் போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் ஏற்கெனவே கைதானவர்கள் அடுத்தடுத்து நிபந்தனை பிணையில் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, முன்னணி இயக்குநர்களான கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
நீதிபதி தண்டபாணி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ” இதுவரை சுமார் 51 இலட்ச சதுர அடி நிலங்களும்; 78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் கண்டறியப்பட்டிருப்பதாக” அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. ” சொத்துக்களை முடக்கி, அரசிதழில் வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார், நீதிபதி.
தேவை அரசின் தனி கவனம் !
”போலீசுக்கு போனால் பணம் கிடைக்காது; சுமுகமாக முடித்து தருகிறோம்” என்று நியோமேக்ஸ் நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்தவர்கள் அடுத்த சுற்று புகார் கொடுக்க படையெடுத்து வருகிறார்கள். வழக்கை கையாளுவதற்கு ஏதுவாக, உரிய வழிமுறைகளோடு புகார் பெறுவதை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். புகார் பெறும் பிரிவில் இரண்டு பேர்தான் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களை கொண்டு அதிகபட்சம் நாளொன்றுக்கு 20 பேரிடமிருந்துதான் புகாரை பெற்றுவருகிறார்கள். தற்காலிக அடிப்படையிலாவது கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை வைக்கிறார்கள்.
முற்றுகையில் முன்னணி நிர்வாகிகள் !
தேனி மாவட்டத்தில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் என்ற பெயரில் சங்கமாக அணிதிரண்டிருக்கிறார்கள், நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள். தங்களது பகுதியில் முக்கிய நிர்வாகிகளாக செயல்பட்டுவந்த பாபு, சுடலை முத்துராஜா, தொட்டுசிக்கு, பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகிய ஐந்து நபர்களையும் குறிவைத்து அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சங்கத்தின் தலைவர் சங்கர், துணைத்தலைவர் பொம்மையசாமி, செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் அணிதிரண்டு தேனி மண்டல நிர்வாகியாக செயல்பட்ட கம்பத்தைச் சேர்ந்த தொட்டுசிக்கு என்பவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசாரின் உதவியோடு, போராடியவர்களை அனுப்பி வைக்க பெரும்பாடு பட்டிருக்கிறார், தொட்டுசிக்கு.
மேலும், தேனி – உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் 2 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து கட்டிவரும் வீட்டையும் முற்றுகையிட்டனர். மேற்படி நிர்வாகிகளை அணுகினால், உரிய முறையில் பதில் சொல்லாததோடு, போட்ட பணத்தை திருப்பி கேட்கும் எங்கள் மீதே போலீசில் புகாரும் கொடுக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறார்கள்.
– அங்குசம் புலனாய்வுகுழு, ஷாகுல் படங்கள்: ஆனந்த்
வீடியோ லிங்:
Nice write up reg Neomax