பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி நீட்டிப்பு சர்ச்சை – கடும் எதிர்ப்பில்  கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

0

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் உள்ள முனைவர் செல்வத்திற்கு ஜனவரி முதல் வாரத்தில் 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவருடைய பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.இரவி, துணைவேந்தர் செல்வத்திற்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கடந்த 05.02.2024ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஓராண்டு பதவி நீடித்து ஆளுநர் வழங்கிய உத்தரவுக்குப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளின் ஆசிரியர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன்
முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன்

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“துணைவேந்தர் பதவிக்குத் திறமையான, தரமான மற்றும் தகுதி வாய்ந்த பல பேராசிரியர்கள் இருக்கும்போது முனைவர் செல்வத்திற்குப் பணி நீடிப்பு வழங்கியுள்ளது மற்ற பேராசிரியர்களுக்கான வாய்ப்பைத் தட்டி பறிக்கும் செயலாகும். இந்தப் பணி நீடிப்பு பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் தரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும்.

சென்னை, கோவை பாரதியார், மதுரை காமராசர் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்குரிய காலம் முடிந்த பின்பு அவர்களுக்கெல்லாம் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் செல்வத்திற்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளதற்கு ஏதாவது உள்நோக்கம் உள்ளதா?” என்று ஆளுநருக்குக் கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், துணைவேந்தர் செல்வத்தின் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியதை இரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கையும் வைத்துள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) மாநிலப் பொருளாளர் பேராசிரியர் சேவியர் செல்வக்குமார்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) மாநிலப் பொருளாளர் பேராசிரியர் சேவியர் செல்வக்குமார்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி பேராசிரியருமான முனைவர் சேவியர் செல்வக்குமார் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது,“துணைவேந்தர் பொறுப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ள முனைவர் செல்வம் அவர்களுக்கு, ஆளுநர் ஓராண்டு காலம் பொறுப்பை நீட்டித்து உத்தரவு வழங்கியுள்ளார். ஆளுநர் வழங்கியுள்ள இந்த உத்தரவு திரும்பப்பெறப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம், மாணவர் நலன், ஆசிரியர் நலனில் துளியளவுகூட அக்கறையில்லாத ஒரு கல்வியாளர்தான் முனைவர் செல்வம். இவருடைய காலத்தில் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் படும் இன்னல்களும், துயரங்களும் அளவிடமுடியாதவை. பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு அவரிடம் இல்லை. இது குறித்து, பலமுறை எம் சங்கம் துணைவேந்தரிடம் நேரில் எடுத்துக்கூறியும் தன்னை மாற்றிக் கொள்ளமுடியாதவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். முனைவர் செல்வத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு நீட்டிப்பு திரும்பப்பெறப்பட வேண்டும். புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் உடனே தொடங்கப்படவேண்டும்”என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சகாய சதீஷ்
தமிழ்நாடு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சகாய சதீஷ்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழ்நாடு தனியார் உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கப் பொதுச்செயலாளரும், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரிப் பேராசிரியருமான முனைவர் எஸ்.சகாயசதீஷ் அங்குசம் இதழிடம் பேசிய போது,“முனைவர் செல்வம் பல்கலைக்கழக நலனில் அக்கறையோடு இருந்ததில்லை. மாணவர் நலனில், ஆசிரியர்கள் நலனில் அக்கறையோடு இருந்ததில்லை குறிப்பாக முனைவர் பட்ட ஆய்வாளர்களை இவர் படுத்தி வைத்தப்பாடுகள் வார்த்தைகளால் சொல்லிமாளாது. இப்படிப்பட்டவர் துணைவேந்தர் பொறுப்பில் மேலும் ஓராண்டு காலம் இருக்கலாம் என்று ஆளுநர் நீட்டிப்பு வழங்கியிருப்பதை எம் சங்கம் ஏற்க மறுக்கின்றது. முனைவர் செல்வத்திற்கு ஏன் நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பதற்கு ஆளுநர் மாளிகை இதுவரை பதில் அளிக்கவில்லை. முனைவர் செல்வத்திற்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுநர் திரும்பப்பெறவேண்டும் என்பதை எம் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகின்றோம். இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர்கள் நலன், மாணவர்கள் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மேனாள் தலைவர் (JCC-BARD), ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியருமான முனைவர் தி.நெடுஞ்செழியன் முனைவர் செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துணைவேந்தர் பணி ஓராண்டு நீட்டிப்பு குறித்துக் கருத்து தெரிவிக்கும் போது,“தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அலுவல் முறையில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ளார். வேந்தருக்குப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்க விதிகள் வகை செய்கின்றது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களின் பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 தேதியுடன் நிறைவடைந்தது. புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது.

துணைவேந்தர் சுதா சேஷய்யன்
துணைவேந்தர் சுதா சேஷய்யன்

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.இரவி சுதா சேஷய்யனுக்கு ஓராண்டு துணைவேந்தர் பொறுப்பை நீட்டித்து உத்தரவு வழங்கினார். புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அப்போது இந்தப் பணி நீட்டிப்பு பிரச்சனையானது. தற்போது ஆளுநர் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வத்திற்குத் துணைவேந்தர் பொறுப்பில் ஓராண்டு நீட்டிக்க உத்தரவு வழங்கியுள்ளார். ஓராண்டு நீடிக்க உத்தரவு வழங்க ஆளுநருக்கு விதிகள் வகை செய்கிறது என்றால், சென்னை, பாரதியார், மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பணிகாலம் முடிந்தபோது அவர்களுக்கு ஏன் பணிநீட்டிப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதால் பணி நீட்டிப்பு கிடைத்துள்ளது என்றால், மற்ற 3 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சிறப்பாகச் செயல்படவில்லையோ என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுகின்றது. முனைவர் செல்வத்திற்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்புக்கு உரிய விளக்கத்தை ஆளுநர் மாளிகை உடனே வெளியிடவேண்டும். இல்லையென்றால் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பைத் திரும்பப்பெறுவதே முறையாக இருக்கும்” என்று கூறினார்.

ஆளுநர் Vs முதல்வர் மோதல் போக்கு உச்சநீதிமன்றத்தின் தலையீட்டில் கொஞ்சம் குறைந்திருந்தாலும், ‘மழை விட்டாலும் தூவானம் விடாது’ என்பதுபோல மோதல் போக்கு ‘துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு’ என்பதில் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.