தமிழ்நாடு அரசுக்கு 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சாலை மறியல் செய்த கல்லூரி ஆசிரியர்கள் கைது !தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் மதுரை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (MUTA) இணைந்து, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC – ACT)
சார்பில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் 18.2.2024ஆம் நாள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அலுவலகம் முன்பு கல்லூரி ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் காலை 11.00 மணியளவில் நடத்தினர். இப் போராட்டத்திற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் சேவியர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் சுமார் 200 பேர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 அம்சக் கோரிக்கைகள்
1. உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு, பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். 2. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி M.Phil., Ph.D. பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். 3. புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிகளுக்கான கால நீட்டிப்பினை 31.12.2023ஆம் நாள் உடனடியாக வழங்கிட வேண்டும். 4. இணைப்பேராசிரியர் பணி நிலையில் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, முனைவர் பட்டமும் பெற்றிருக்கும் அனைவருக்கும் பேராசிரியர் பணிய மேம்பாடு வழங்கவேண்டும். 5. இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு முனைவர் பட்டம் நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். 6. அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்குக் கணக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். 7.சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் மொழி தேர்வு தேர்ச்சியை ஏற்கவேண்டும்.
College professor protest arrested
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் பேசும்போது, “தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் பிரச்சனையில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்றது. தற்போது நாம் வலியுறுத்தும் 7 அம்சக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்திவிட்டது. அவர்கள் அனைவரும் பணப்பலன்களையும் பெற்றுவிட்டார். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக உதவிபெறும் கல்லூரிகளுக்கு இந்த 7 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
இது தொடர்பாக நாம் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் அனைவரிடமும் முறையிட்டும் எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கையும் இதுவரை ஏற்படவில்லை. இதன் காரணமாகவே நாம் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டம் வெற்றிகரமாக அமையவேண்டும். காவல்துறை கைது செய்தால் நாம் அனைவரும் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கவேண்டும். போராடினால்தான் நம் கோரிக்கைகளை வென்றெடுக்கமுடியும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மாநிலப் பொருளாளர் சேவியர் செல்வக்குமார்,“தமிழ்நாடு அரசிடம் நாம் வலியுறுத்தும் இந்த 7 அம்சக் கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள்தான் நிதிப்பயன் உடையது. மற்ற 5 கோரிக்கைகள் நிதிப் பயன்அற்றது. ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் வழங்கவேண்டியது அரசின் கடமை. கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு ஊக்கவூதியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அதை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்திவிட்டு, உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்த மறுக்கின்றது. அல்லது தகவல் திரட்டுகிறோம் என்ற பெயரில் காலம் கடத்தி, தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்கின்றது. இப் போக்கைக் கண்டித்துத்தான் நாம் இன்று போராட்டம் நடத்துகின்றோம். அரசு ஊழியர் ஆசிரியர் சமூகங்கள் 2004ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40/40 இடங்களைப் பெற உதவியாக இருந்தது என்பதைத் திமுக தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போதைய முதல்வருக்கும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40/40 இடங்களில் வெற்றிபெற எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
College professor protest arrested
இதனையடுத்து, தஞ்சை மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை கணக்கின்படி 66 பெண் பேராசிரியர்+ 86 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணிக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அனைவரும் விடுக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இம் மறியல் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்ந்த தஞ்சை மண்டலத் தலைவர் கோகுல் கிருஷ்ணா, செயலாளர் பிரகாஷ்ராஜ், திருச்சி மண்டலம் சார்ந்த தலைவர் லீமாரோஸ், செயலாளர் சார்லஸ், ஈரோடு மண்டலம் சார்ந்த சரவணன், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் இரமேஷ் மற்றும் முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் நெடுஞ்செழியன், பேராசிரியர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
தஞ்சையிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending