அங்குசம் பார்வையில் ‘அக்கரன்’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘அக்கரன்’ படம் எப்படி இருக்கு ! தயாரிப்பு: ’குன்றம் புரொடக்ஷன்ஸ்’ கே.கே.டி. டைரக்ஷன்: அருண் கே.பிரசாத். நடிகர்—நடிகைகள்: எம்.எஸ்.பாஸ்கர், ‘கபாலி’ விஷ்வந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம்குமார், பிரியதர்ஷினி, கார்த்திக் சந்திரசேகர். தொழிநுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: எம்.ஏ.ஆனந்த், இசை: எஸ்.ஆர்.ஹரி, எடிட்டிங்: பி.மணிகண்டன், புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ்: சொக்கலிங்கம், வெளியீடு: தமிழ் சினிமாஸ். பி.ஆர்.ஓ.சதிஷ் [ எய்ம் ]
மதுரை திருப்பரங்குன்றத்தில் இரண்டு மகள்களுடன் [ வெண்பா, பிரியதர்ஷினி ] வசிக்கிறார் வீரபாண்டி [ எம்.எஸ்.பாஸ்கர் ]. மூத்த மகள் வெண்பாவுக்கும் ‘கபாலி’விஷ்வந்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஒரு வழக்கில் சிக்கி, விஷ்வந்த் ஜெயிலுக்குப் போய்விட்டுத் திரும்பியதால், திருமணத்தை நிறுத்திவிடுகிறார் வீரபாண்டி.
மாஜி எம்.பி.பரந்தாமனின் [ நமோ நாராயணன் ] மச்சினன் ஆகாஷ் பிரேம்குமார் நடத்தும் நீட் கோச்சிங் செண்டரில் படிக்கிறாள் வீரபாண்டியனின் இளையமகள் பிரியதர்ஷினி. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தனது நம்பிக்கைக்குரிய கார் டிரைவர் செல்வத்தை[கார்த்திக் சந்திரசேகர்] நிறுத்துகிறார் பரந்தாமன். ஆனால் பரந்தாமனின் மனைவியின் நச்சரிப்பால், தனது மச்சினனையே வேட்பாளராக்கும் கட்டாயம் பரந்தாமனுக்கு.
டிரைவர் செல்வத்திற்கு இது கடுப்பைக் கிளப்பினாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ஆகாஷுக்கு வேலை பார்க்கிறார். தேர்தல் செலவுக்காக கோச்சிங் செண்டரில் படிப்பவர்களிடம் “பத்து லட்ச ரூபாய் கொடுத்தால் நீட் தேர்வில் பாஸ் பண்ண வைத்து மெடிக்கல் சீட்டும் வாங்கித் தருவதாக, பேரம் பேசுகிறார் ஆகாஷ். இந்த பேரத்தை செல்போன் வீடியோவில் எடுத்துவிடுகிறார் பிரியதர்ஷினி.
இதை தனது அக்கா வெண்பாவிடமும் போனில் சொல்லிவிடுகிறார். அதன் பின் காணாமல் போகிறார் பிரியதர்ஷினி. தனது சூழ்ச்சியால் ஆகாஷை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, கவுன்சிலராகிவிடுகிறார் செல்வம். மகளைத் தேடி அலையும் வீரபாண்டியன் தடாலடி காரியங்களில் இறங்கி, ஆகாஷையும் கார்த்திக் சந்திரசேகரையும் தூக்கிக் கொண்டு வந்து, பொளந்து கட்டுகிறார். பிரியதர்ஷினியின் கதி என்ன? இதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘அக்கரன்’.
இதுவரை காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் ஜொலித்த எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தில் தனது வயதுக்கேற்ற அதிரடி ஆக்ஷனில் கலக்க்கியிருக்கார். வில்லன்கள் இருவரையும் தூக்கிவந்து தனித்தனியே அடைத்து வைத்து, தனது மகளுக்கு என்னாச்சு என விசாரிக்கும் ஸ்டைல் நல்லாத் தான் இருக்கு. சில நிமிடங்களே வரும் எம்.எஸ்.பாஸ்கரின் ஸ்டண்ட் சீன்கூட நம்பும்படியாத்தான் இருக்கு.
அவரிடம் சிக்கிய இருவரும் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கை வெவ்வேறு விதமாகச் சொல்லி பல சீன்களில் ட்விஸ்ட் வைத்து அசத்திவிட்டார் டைரக்டர் அருண் கே.பிரசாத்.
ஆறேழு வருடங்களுக்கு முன்பு வந்த ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் அறிமுகமான வெண்பாவை இந்த ‘அக்கரனில்’ தான் பார்க்க முடிகிறது. கொஞ்சம் அக்கறையாகத் தான் நடித்திருக்கிறார். அதே போல் ‘கபாலி’ விஷ்வந்துக்கும் இது முக்கியமான படம்.
திருப்பரங்குன்றத்தை சில ட்ரோன் ஷாட்களில் காட்டியிருக்கிறார் கேமராமேன் ஆனந்த். மற்றபடி முக்கால்வாசி சீன்கள் இரண்டு வீடு, ஒரு இருட்டுப் பங்களா அவ்வளவு தான். மியூசிக் டைரக்டர் ஹரியின் பங்களிப்பும் இந்த அக்கரனுக்கு உதவியிருக்கிறது.
பல சந்தேகங்கள், லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மீடியமான பட்ஜெட்டில் நல்ல க்ரைம் சப்ஜெக்டை, க்ளைமாக்சில் பெரிய ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் அருண் கே.பிரசாத்.
நீங்கள் வசிக்கும் ஏரியாவில் உள்ள தியேட்டர்களில் இந்த ‘அக்கரன்’ ரிலீசாகியிருந்தால் போய்ப்பாருங்கள்.
–மதுரை மாறன்