அங்குசம் பார்வையில் ‘குரங்கு பெடல்’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘குரங்கு பெடல்’ தயாரிப்பு: ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ & ’மோண்டேஜ் பிக்சர்ஸ்’ சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன். இணைத் தயாரிப்பு: சஞ்சய் ஜெயக்குமார், கலையரசு. டைரக்ஷன்: கமலக்கண்ணன். நடிகர்—நடிகைகள்: காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், நீதிமாணிக்கம், தக்ஷனா, சாவித்ரி, பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், செல்லா, குபேரன். தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: சுமீ பாஸ்கரன், இசை: ஜிப்ரான் வைபோதா, வசனம்: பிரபாகர் சண்முகம். வெளியீடு: ஆருத்ரா பிலிம்ஸ். பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா
கொங்கு மண்டலம் தான் கதைக்களம். தொடக்கப்பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து லீவு விடுகிறார்கள். உற்சாகத்துடன் ஓடிவருகிறார்கள் பள்ளிக்குழந்தைகள். அதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள், இந்த லீவில் என்னவெல்லாம் பண்ணலாம் என ஜாலியாகப் பேசியபடியே வருகிறார்கள். அவர்கள் பேசியபடியே கிணற்றில் குதித்து விளையாடுகிறார்கள், ஆற்றில் குதித்து உற்சாக நீச்சலடிக்கிறார்கள் வயல்வெளிகளில் ஓடித்திரிகிறார்கள்.
சிலம்பம் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர், சைக்கிளில் வருவதைப் பார்த்ததும் அவர்களுக்கும் சைக்கிள் ஓட்ட ஆசை வருகிறது. ஆளுக்கு ஐந்து பைசா, பத்து பைசா சேர்த்து, ஒரு மணி நேரத்திற்கு எட்டணா வாடகையில் மிலிட்டரி ( பிரசன்னா ) சைக்கிள் கடையில் சைக்கிளை எடுக்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் சைக்கிள் பழகும் போது வாடகை நேரம் முடிந்துவிடுகிறது.
இதில் காளிவெங்கட்டின் மகன் மாரியப்பன் [ சந்தோஷ் வேல்முருகன் ] என்பவன் வீட்டு உண்டியலில் கைவைத்து, நாட்டுக் கோழி முட்டையை விற்று ஒரு சைக்கிளை தனியாக வாடகைக்கு எடுக்கிறான். வாத்தியார் செல்லா கற்றுக் கொடுக்க, குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டப் பழகுகிறான், சீக்கிரமே சீட்டில் உட்கார்ந்து ஓட்டவும் பழகிவிடுகிறான்.
க்ளைமாக்ஸ் எப்படி முடிகிறது என்பது தான் இந்த ‘குரங்கு பெடல்’.
1980-களில் கோடை விடுமுறையில் பள்ளிக்குழந்தைகள் எப்படி எப்படியெல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்பதை இக்காலத்து ஆண்ட்ராய்டு போன் ‘அடிக்ட்’ குழந்தைகள் மனதில் நல்லவிதமான ஏக்கத்தையும் ஆசையையும் விதைத்த வகையில் டைரக்டர் கமலக்கண்ணனையும் படத்தை தனது பேனரில் ரிலீஸ் பண்ணி, வெகுஜனங்களின் பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய கமர்ஷியல் ஹீரோ சிவகார்த்திகேயனையும் மனதார பாராட்டலாம்.
ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை நாம் வாசிக்கவில்லை என்றாலும் வாசித்தவர்கள் சிலரிடம் கேட்ட போது, சுமாரான கதை தான் எனச் சொன்னார்கள். அந்த சுமாரான கதையை சீரான சினிமாவாக எடுக்க முயற்சித்திருக்கிறார் கமலக்கண்ணன். ஆனால் அந்த முயற்சியில் முழு வெற்றி கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
இதை ஆர்ட் ஃபிலிமா எடுப்பதா? கமர்ஷியல் சினிமாவாக எடுப்பதா? பேரலல் சினிமாவாக எடுப்பதா? என்ற சிந்தையில் சிறிது குழப்பம் ஏற்பட்டு, மூன்றையும் மிக்ஸ் பண்ணிவிட்டதால், படத்தின் இடைவேளை வரையான காட்சிகள், வசனங்கள் எல்லாமே ஒருவித செயற்கைத்தனமாக அமைந்துவிட்டது தான் பரிதாபம்.
சிறுவன் மாரியப்பனின் தகப்பனாக வரும் காளிவெங்கட்டின் பாத்திரப் படைப்பும் சரி, அவரது நடிப்பும் சரி, நமக்குள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது, மேலே நாம் சொன்ன செயற்கைத்தனத்தின் விளைவு தான். இதே போல் தான் மற்ற கேரக்டர்களும் உள்ளன.
அதிலும் அந்த சிறுவர்கள் அடிக்கடி பழமொழி பேசுவதெல்லாம் கொஞ்சம்கூட ஒட்டவில்லை. அதிலும் கூட ஒரு பணக்கார சிறுவன், அவனின் காலுக்கடியில் உட்கார்ந்திருக்கும் ஏழைச் சிறுவன், சைக்கிளுக்கு வாடகை நேரம் முடிந்துவிட்டதால், மிலிட்டரி அதிக காசு கேட்பாரே என்பதற்காக கட்டை உருட்டும் சூதாட்டத்தில் மாரியப்பன் காசு வைத்து விளையாடுவது, சந்தையில் தனி ஆளாக நின்று இரண்டு கோழி முட்டைகளை விற்பது, இந்த மாதிரி காட்சிகளையெல்லாம் கமலக்கண்ணன் ஏன் வைத்தார் என்பது தான் நமக்குப் புரியவில்லை.
இருந்தாலும் இப்போது வரும் எந்த சினிமாவையும் குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியாத அளவுக்கு வன்முறைக் குப்பைகளாகவும் ரத்தச் சகதியாகவும் இருக்கும் கொடூரமான சூழலில் இந்த ‘குரங்கு பெடல்’ குழந்தைகளுக்கான சினிமாவாக இருப்பதில் ரொம்பவே ஆறுதல்.