அங்குசம் பார்வையில் ‘ரசவாதி’— தி அல்கெமிஸ்ட்
அங்குசம் பார்வையில் ‘ரசவாதி’— தி அல்கெமிஸ்ட் தயாரிப்பு: டி.என்..ஏ. மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ். இயக்கம் & தயாரிப்பு: சாந்தகுமார். வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி. நடிகர்—நடிகைகள்; அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த், ரம்யா சுப்பிரமணியன். தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு & சிவா ஜி.ஆர்.என்., எடிட்டிங்: சாபு ஜோசப், இசை: தமன் எஸ்., ஆர்ட் டைரக்டர்: சிவராஜ் சமரன், சண்டைப் பயிற்சி: ‘ஆக்ஷன் பிரகாஷ், நடனம்: சதீஷ் கிருஷ்ணன், காஸ்ட்யூம் டிசைனர்: மினு சித்ராங்கனி, பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா.
கொடைக்கானலில் போகர் சித்த வைத்தியசாலை நடத்துகிறார் சதாசிவ பாண்டியன் ( அர்ஜுன் தாஸ் ). மலையின் மீதும் இயற்கையின் மீதும் அக்கறை கொண்ட பாண்டியன், ஒரு நாள் இரவு பஸ்ஸின் ஜன்னலோரம் கண்ணீரில் நனைந்திருக்கும் சூர்யா [ தான்யா ரவிச்சந்திரன் ]வை எதேச்சையாக கவனிக்கிறார். கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுமாறு சைகை செய்கிறார். தான்யாவும் பாண்டியனைக் கவனிக்கிறார்.
மறுநாள் ஒரு ரெஸ்டாரெண்டுக்குப் போகும் போது தான்யா அங்கே மேனேஜராக இருக்கிறார். மறுநாள் அர்ஜுன் தாஸின் வைத்தியசாலைக்குச் செல்கிறார். பின் அடிக்கடி சந்தித்து அன்பை பறிமாறிக் கொள்கின்றனர். அம்மா-அப்பாவை இழந்த நிலையில் கோவையிலிருந்து பெங்களூருவுக்குச் சென்று பின் அங்கிருந்து இங்கே[ கொடைக்கானல்] உள்ள ரிசார்ட்டின் மேனேஜராக வந்த கதையைச் சொல்கிறார் தான்யா. அதே கொடைக்கானலில் சைக்கியாட்ரிஸ்டாக இருக்கும் டாக்டர் ஷைலஜாவை [ ரம்யா சுப்பிரமணியன் ] சதாசிவ பாண்டியன் சந்திக்கும் சூழல் வருகிறது.
இந்த நேரம் கடலூர் மாவட்டம் பிச்சாவரத்திலிருந்து கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் பரசுராஜ் [ சுஜித் சங்கர் ] அர்ஜுன் தாஸும் தான்யாவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தாலே எரிகிறது சுஜித் சங்கருக்கு. இருவரையும் தனித்தனியே மிரட்டுகிறார். இவருக்கு ஏன் இவர்களைப் பார்த்தாலே எரிச்சலாகிறது என்பதன் கதைப் போக்கு தான் இந்த ‘ரசவாதி’.
அர்ஜுன் தாஸ் இதுவரை நடித்த படங்களில் பெருமாபாலும் போதை, சரக்கு பாட்டில் சகிதம் தான் வருவார். ஆனால் இந்த ரசவாதியில் சித்த மருத்துவராக, போதைக்கு எதிரானவராக, இயற்கைவளம் மீது காதல் கொண்டவராக என முப்பரிமாணங்களில் தனது கேரக்டரை கச்சிதமாக கேட்ச் பண்ணி, அளவான, நிறைவான நடிப்பைக் கொடுத்து ரசவாதியாக பார்வையாளனை பெரிதும் வசப்படுத்துகிறார்.
கரண்ட் வயரில் அடிபட்டு கீழே விழும் புறாவுக்கு உயிர் கொடுக்கும், அவரின் முதல் சீனிலேயே அந்த கேரக்டரின் அடிப்படை குணமே மனிதாபினம் தான் என்பதை நிரூபித்துவிடுகிறது. அதே போல் நான்கு வகை குடிகாரர்களைப் பற்றி, அவர்களின் நடவடிக்கை பற்றி பேசும் வசனமும் சீனும் பொளேர் ரகம். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் ஃப்ளாஷ்பேக்கும் அதில் வரும் ரேஷ்மாவுடனான டீசண்ட் லவ் எபிசோடும் க்யூட் & பியூட்டி என்றால், சூழ்ச்சி வலையில் சிக்கி, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் போய் இடது கால் உடைக்கட்ட நிலையில், ரேஷ்மாவுக்கு வேறொருவனுடன் கல்யாணம் ஆன செய்தி கேட்டு கலங்கி நிற்கும் சீனிலும் அர்ஜுன் தாஸ், அபாரா தாஸாக மாறிவிட்டார்.
அந்த ரேஷ்மாவின் கணவன் தான் கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக வரும் சுஜித் சங்கர். அப்பாவின் கொடுமை தாங்காமல் அம்மா தீக்குளித்துச் சாவதை நேரில் பார்த்ததும் மாறும் மனநிலை, இதனாலேயே வேறு யார் மகிழ்ச்சியாக இருந்தாலும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரனாக மாறுவது, சைக்கியாட்ரிஸ்ட் ரம்யாவின் கள்ளக் காதலைத் தெரிந்து கொண்டு தனது துணிகளைத் துவைக்க வைத்து பிளாக்மெயில் பண்ணுவது என சுஜித்தின் கேரக்டரை செம காரமாக வடிவமைத்திருக்கிறார் டைரக்டர் சாந்தகுமார்.
தான்யாவின் பெர்ஃபாமென்ஸ் ஒருவித ரசனை என்றால் ரேஷ்மாவின் பெர்ஃபாமென்ஸ் வேறொரு லைனில் ரசனை கொட்டுகிறது. அதிலும் ஃபேனில் தூக்கில் தொங்குவதற்கு முன்பு சுஜித்தைப் பார்த்து ஆவேசமாகப் பேசி காரித்துப்பும் சீன் செமத்தியான சீன். இரண்டு ரசனைகளும் ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல.
டைரக்டர் சாந்தகுமாரின் நேர்த்தியான கதை சொல்லலுக்கும் ஸ்லோ & ஸ்டெடியான திரைக்கதைக்கும் பெரிதும் துணை நின்றவர்களில் முதல் இடம் இசையமைப்பாளர் தமனுக்குத் தான். அதற்கடுத்து கேமராமேன்களும் எடிட்டரும் காஸ்ட்யூம் டிசைனரும் உள்ளனர்.
மலைகளை உடைக்கும் கல்குவாரி கொள்ளையர்கள், யானை வழித்தடத்தை சேதமாக்கும் போதை மாஃபியாக்கள் என சமூக அக்கறையையும் சரிவிகிதத்தில் கலந்து இந்த ‘ரசவாதி’யை நல்ல சினிமா ரசிகர்களுக்கு ரசனையாக படைத்திருக்கிறார் டைரக்டர் சாந்தகுமார்.
–மதுரை மாறன்