தனி நம்பர் பிளேட் தரமான சரக்கு – குடிகார சங்க த’லீ”வர் குபீர் பேட்டி !
தனி நம்பர் பிளேட் தரமான சரக்கு – குடிகார சங்க த’லீ”வர் குபீர் பேட்டி !
துப்புறவு பணியாளர்கள் தொடங்கி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரையில் சங்கம் இருக்கிறது. போலீசுக்கும் இராணுவத்துக்கும்தான் சங்கம் இல்லை என்பது பெரும்குறையாக இருக்கிறது. அட, இவர்களுக்கும்கூட, சங்கம் இருக்கிறதா? என நம்மையெல்லாம் மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யபட வைத்தவர், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன்.
”பகல் 12 மணி முதல் இரவு 10 வரை யாரெல்லாம் சரக்கு மூடியை திறக்கிறார்களோ அவர்கள் மட்டுமே எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். குடிச்சுட்டு கீழே போடும் காலி பாட்டில்களை பொறுக்கி அதில் விற்று வரும் வருமானத்தை கொண்டு வந்து கொடுத்தால் அவரிடம் நிதி வாங்குகிறோம். 5 கிலோ கோதுமைக்கு பதிலாக ஒரு கோதுமை பீர் வழங்கிட வேண்டும். பொத்துக்கிட்டு கவிதை எழுத முடியும். பொத்து பொத்துனு பொத்துனாதான் இசை அமைக்க முடியும். முடியாவிட்டால் ஓடி போங்கள் நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் …” என மிக ஸ்டெடியாகவே பேசுகிறார், செல்லபாண்டியன்.
த’லீ”வரே வணக்கம்! தெளிவாகதான் இருக்கிறீர்களா என பேச்சு கொடுத்தோம் ?
இப்ப என்ன டைம் என கேட்க , பகல் 12 மணி என சொல்ல நான் ஸ்டெடியா இல்லைனா பேட்டி கொடுக்க முடியாமா ? ஆரம்பத்தில் இருந்தே நான் ஸ்டடியாகத்தான் இருக்கிறேன். என தடாலடியாக ஆரம்பித்தார் பேட்டியை.
விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு என்ற சங்கத்தின் தலைவர். மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மது குடிக்கும் நபர்களை மீட்டு சிகிச்சை கொடுத்து மீட்டெடுத்தும் வருகிறார்.
தரமான மது வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறீர்கள். அதே நேரத்தில் மது ஒழிப்போர் சங்கம் என்றும் கூறுகிறீர்கள். முரண்பட்ட கருத்தாக இல்லையா ?
2021 ஆகஸ்ட் 11 அன்று போதை ஒழிப்பு நாள் அறிவித்தது தமிழ்நாடு அரசு. அன்றைய தினம் அரசு டாஸ்மாக் கடை மூடியதா? இது முரணாக இல்லையா? அரசாங்கம் கொடுப்பதால் தான் நாங்கள் குடிக்கிறோம். இல்லை என்றால் மூடிட்டு இருப்போம். கவிஞர் வைரமுத்து படையப்பா படத்தில் ஓ… ஓ.. கிக்கு ஏறுதே என்று எழுதியதால்தான் ஓ.. ஓ… கிக்கு ஏறுதே என்று குடித்தோம். இப்ப படிக்காத பக்கங்கள் படத்தில் குபீர் என குடிக்க கூடாதுன்னு எழுதி உள்ளார். இது எங்கள் குடிமக்களின் மனசு புண்படுத்திவிட்டது. மதுவுக்கு எதிரான பாட்டு வந்ததில்லை. சரக்கு பிரியர் மனசை புண்படும் படியாக மதுவுக்கு எதிராக பாட்டை எழுதி உள்ளார் வைரமுத்து.
சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
பகல் 12 மணி முதல் இரவு 10 வரை யாரெல்லாம் சரக்கு மூடியை திறக்கிறார்களோ அவர்கள் மட்டுமே எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். மற்ற நேரத்தில் மூடியை திறப்பவர்கள் எங்கள் சங்கத்திற்கும் நாட்டிற்கும் எதிரானவர்கள்.
சங்கத்திற்கு வருமானம்?
சாதி மதம் சங்க போல் நாங்கள் நிதி வாங்குவதில்லை குடிச்சுட்டு கீழே போடும் காலி பாட்டில்களை பொறுக்கி அதில் விற்று வரும் வருமானத்தை கொண்டு வந்து கொடுத்தால் அவனிடம் நிதி வாங்குகிறோம் அந்த நிதிகளில்தான் மது ஒழிப்போர் சங்கம் செயல்படுகிறது
இசை பிரியர்களின் சண்டையை மது பிரியர்கள் கண்டித்து ?
படிக்காத பக்கங்கள் திரைப்பட விழாவில் வைரமுத்து பேசியது சரியே. இளையராஜா, கங்கை அமரன் மட்டுமே இசை அமைத்துள்ளார்களா? எப்படி பொத்துக் கிட்டு இருக்கனும் என்று சொல்ல முடியுது ? இந்த வார்த்தை எங்கள் குடி’மக்களின் மனசை புண்படுத்திவிட்டது. பழைய இசை அமைப்பாளர்களுக்கு அரசியல் சாயம் இல்லை. அதுபோல் கங்கை அமரன், இளையராஜா, வைரமுத்து ஆகியோர் அரசியல் சாயம் இல்லாமல் இருக்கவேண்டும். கலைஞர் இருந்திருந்தால் கங்கை அமரன் வாயில் இருந்து இந்த வார்த்தை வராது. வைரமுத்து பொத்துக்கிட்டு கவிதை எழுத முடியும். இளையராஜா பொத்து பொத்துனு பொத்துனாதான் இசை அமைக்க முடியும். நாங்கள் மூடியை திறக்கும் வரைதான் மொழி. இறுதி ஊர்வலம் வரைதான் இசை.
மதுவிலக்கு சாத்தியமா?
8 முதல்வர்கள் மது இல்லாமல் ஆட்சி நடத்தியவர்கள். அதன் பிறகு வந்த 8 முதல்வர்கள் மதுவோடுதான் ஆட்சி நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளுமே மதுவிலக்கை வலியுறுத்தியவைதான். ஆட்சிக்கு வந்தால் முதல் கையொப்பம் பூரண மதுவிலக்கு என்று கூறிவந்த பா.ம.க, இன்று அ.தி.மு.க-வுடன் கைகோத்திருக்கிறது. மதுவிலக்குக்காகப் போராடிய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தி.மு.க கூட்டணியில் உள்ளன. சில்லரை விற்பனைக்கு முன்புவரை, மதுப் பிரியர்கள் ஒன்றரை சதவீதம், இரண்டு சதவீதம்தான் இருந்தோம். அப்போது, எங்களுக்கு அரசியல் கட்சிகள் குவார்ட்டர், பிரியாணி வாங்கிக் கொடுத்தனர். நாங்கள் அவர்களுக்காகக் கோஷம் போட்டோம். இப்போது, எந்தவொரு அரசியல் கட்சியின் வாக்கு வங்கியும், எங்கள் மதுப் பிரியர்களின் 61.4 சதவீதத்துக்கு நிகராக இல்லை. திமுக மதுவிலக்கு அளிப்போம் என்று கூறியதாலே கடந்தமுறை ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, மதுவிலக்கு சாத்தியமில்லை.
மது பிரியர்களின் பிரியமான கோரிக்கைகள்?
1. எப்படி வெள்ளை நிறத்தில் நம்பர் பிளேட் இருந்தால் சொந்த வண்டி , மஞ்சள் நிறத்தில் இருந்தால் வாடகை வண்டி அடையாளம் காண்பதுபோல் எங்கள் குடி”மக்களுக்கு சரக்கு கலரான ப்ரௌன் கலரில் வண்டி நம்பர் பிளேட் வேண்டும். அப்பதான் இந்நாட்டின் “குடி”மகன் இவரிடம் (போலீஸ்) , விசாரிக்க கூடாது, இவருக்கு பெண் தரலாமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்க முடியும். ஒருவேளை மாமனார் அதே கலரில் வண்டி வச்சு இருந்தா நாமெல்லாம் இந்நாட்டின் “குடி”மகன்கள் என இரண்டு பேருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு பெண் தருவார்கள்.
2. உல்லா நகரம் வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தேன். இதை கேலி செய்தனர். ரெட் லைட் ஏரியா, அப்படி எல்லாம் சொல்லவில்லை. தூய தமிழில் மனமகிழ் மன்றம். கோவளம் கடற்கரை போல் எங்களுக்கென்று (குடிகாரர்களுக்கு) தலைநகரில் மன மகிழ்மன்றம் வேண்டும்.
3. குடிக்கவும், விவசாயம் செய்யவும் இனி நல்ல தண்ணீர் பயன்படுத்த வேண்டும். மது ஆலையில் கடல்நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால், குடிநீர் விலை குறையும்.
4. அரசுக்கு 8 லட்சம் கோடி கடன் இருப்பதாலே நாங்கள் குடிக்கிறோம். அதனால் எங்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும். குடிக்கிறது எங்கள் வேலை. வேலைக்கு போவது வாரிசுகள் வேலை. சாதி மதம் ரீதியா கணக்கு எடுக்காமல் “சரக்கு” ரீதியாக கணக்கு எடுத்து இதுவரை இறந்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். மேலும், மூத்த குடி”மக்களுக்கு மாதம் 5000 வாழ்வுரிமை தொகையாக கொடுக்க வேண்டும் .
5 .இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி உணவு ,இருப்பிடம் , சுகாதாரம் கொடுப்போம் என்று சொல்லித்தான் பதவி பிரமாணம் செய்கிறார்கள். பிறகு ஏன் நாங்கள் கேட்பதை கொடுக்க மறுக்கிறீர்கள்? ஆட்சி நடத்த முடியவில்லை என்றால், மூடிட்டு விலகி கொள்ளுங்கள். 61.4% பேர் எங்கள் “குடி”மக்கள்.
கோதுமை பீர் வழங்க வேண்டும் என்கிறீர்கள் இந்த அளவில்தான் குடிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்ட நடைமுறைகள் இல்லாதது ஏன் ?
அன்று 47 வகை சரக்குகள் மட்டுமே அறிமுகம் செய்தனர். இன்று 437 வகை மது வகைகள் உள்ளது. 2006 ல் மன்மோகன் சிங் ஆட்சியில் மது வகைகளை குடியுரிமை பொருள் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவுகள் செய்யப்பட்டது. இதை எதிர்த்து மது ஆலை முதலாளிகள் தடை வாங்கி விட்டனர். தற்போது மது குடிக்கும் அளவை இவ்வளவுதான் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பிராந்தி, விஸ்கி, ரம் பெருவாரியாக பயன்படுத்துவோர் அவற்றின் வித்தியாசங்கள் மற்றும் அளவீடுகளை அறிந்துகொண்டு குடிக்க வேண்டும் என ஒரு அளவீட்டு முறையை சங்கத்தின் சார்பில் முதல்முறையாக உங்கள் அங்குசம் செய்தி வாயிலாக விளக்குகிறேன் .
வோட்கா உள்ளிட்ட ஆல்கஹாலை பரிந்துரைக்கப்பட்ட அளவு குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இங்கே நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய வார்த்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு என்பதாகும்.
பெண்கள் 1 டிரிங்க் அளவு , ஆண்கள் 2 டிரிங்க் அளவு ஆல்கஹாலை நாளொன்றுக்கு எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இங்கே 1 டிரிங்க் அளவு என்பது பீர் என்றால் 12 அவுன்ஸ் அதாவது 355 மிலி, ஒயின் என்றால் 5 அவுன்ஸ் அதாவது 148 மிலி, மது என்றால் 1.5 அவுன்ஸ் அதாவது 44.3 மிலி அடங்கும்.
பிராந்தி- பழங்களில் இருந்தும் விஸ்கி- தானியங்களில் இருந்தும் ரம்- கரும்பு சக்கையில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது .
பிராந்தி என்பது நடுத்தர மற்றும் எங்களை போன்ற ஏழை எளிய மக்களின் பானம். பிராந்தி பெரும்பாலும் திராட்சையில் இருந்தே பிரிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வேறு சில பழங்களை பயன்படுத்தியும் தயாரிக்கின்றனர். பாட்டிலில் பெரும்பாலும் vsop, xo, vs, ac, neppolion , horse de age என எழுதப்பட்டிருக்கும்.
Vsop-Very Special/Superior Old Pale நான்கு முதல் ஐந்து வருடங்கள் பழமையான பழச்சாறு வகை பாட்டில்கள் இவை.
V.O. (Very Old): என குறிப்பிட்டு இருந்தால் நான்கு வருடங்கள் அதற்கும் குறைவான மதுவகை .
V.S. (Very Special): இரண்டு வருடங்களுக்கு குறைவான மதுவகை என அர்த்தம் .
Napoleon: மாவீரன் நெப்போலியன் பலரின் ஃபேவரைட் டிரிங்க். ஆறு வருடங்கள் பழமையான மது இவை .
X.O. (Extra Old): என குறிப்பிட்டு இருந்தால் பத்து வருடங்கள் வரை பழமையான மது பாட்டில்கள் இவைகள்.
Varietal: ஒரே ஒரு குறிப்பிட்ட திராட்சையில் இருந்தே தயாரிக்கப்படும் மது என அர்த்தம்.
Hors d’Age : 35-50 வருடங்கள் பழமையான மது. ரொம்ப காஸ்ட்லியானது.
ஆனா, நம்ம ஊருல, விற்கும் VSOP- “Very Special Old Pale” போன வாரம் பாட்டில்ல அடைச்சி இந்த வாரம் கடைக்கு வந்த சரக்கு. இவை ஓல்ட் கீல்ட் மதுவில் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அம்புட்டும் ஸ்பிரிட். விலையை கூட்டி எங்களை ஏமாற்ற அரசாங்கமும் , மது ஆலைக்காரங்களும் கடைப் பிடிக்கும் ஏமாற்று யுக்தி. இது எதுவுமே தெரியாமல்தான் நம் குடி”மக்கள் எதோ ஒரு குவாட்டர் குடுங்கனு எது கிடைத்தாலும் குடித்து தள்ளுகிறார்கள்.
மணிகண்டன்.கா