அங்குசம் பார்வையில் ‘ஸ்டார்’ திரைப்படம் !

0

 அங்குசம் பார்வையில் ‘ஸ்டார்’  தயாரிப்பு: ‘ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்’ & ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ பி.வி.எஸ்.என்.பிரசாத் & ஸ்ரீநிதி சாகர். டைரக்‌ஷன்: இளன். ஸ்டார்ஸ்—கவின், லால், அதிதி பொஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், ‘காதல்’ சுகுமார், தீப்ஸ், ‘ராஜா ராணி’ பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ். டெக்னீஷியன்ஸ்—இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: கே.எழில் அரசு, எடிட்டிங்: பிரதீப் ஈ.ராகவ். வெளியீடு: எஸ்.எஸ்.ஐ.புரொடக்‌ஷன்ஸ். பி.ஆர்.ஓ. யுவராஜ்

சினிமா ஸ்டாராக வேண்டும் என்பதற்காக மதுரையிலிருந்து கிளம்பி, சென்னைக்கு வந்து குலைபட்டினியுடன் கோடம்பாக்கத்தில் போராடியும் ஜொலிக்க முடியாமல் போனதால் போட்டோகிராபராகிறார்  பாண்டியன் [ லால் ]. ஆனாலும் தன்னுடைய மகன்  கலை [ கவின் ]யை சினிமா ஸ்டார் ஆக்கியே தீரவேண்டும் என்பதற்காக அவனது பள்ளிப்பருவத்திலிருந்தே நாடகங்களில் நடிக்க வைக்கிறார் பாண்டியன்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அப்பா கற்றுத்தந்த சினிமாப்பாடம் என்ற கலையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறான் சிறுவன் கலை. தாய் கமலாவின் [ கீதா கைலாசம் ] கண்டிப்பால் பள்ளிப்பாடத்திலும் ஓரளவு கவனம் செலுத்தி, குடும்ப சூழ்நிலையால் இன்ஜினிரியங் கல்லூரியில் சேர்கிறான். அப்பாவோ மகனின் சினிமா ஆசைக்குத் துணையாக இருக்கிறார். இளைஞன் கலை, சினிமாக்கலையில் கற்றுத் தேர்ந்து பெரிய ஸ்டார் ஆனானா? என்பதைப் பற்றி இரண்டரை மணி நேரம் நான்கு நிமிடங்கள் பேசுவது இந்த “ஸ்டார்’-ன் கதைப் பயணம்.

கவின் - ஸ்டார் திரைப்படம்
கவின் – ஸ்டார் திரைப்படம்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

விளிம்புநிலையிலோ அல்லது நடுத்தர வர்க்கத்திலிருந்தோ ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு துறையில் சாதனை மனிதனாக உயர்ந்து ஜொலித்த, ஜொலிக்கும் கதைகள் அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் ஜெயிக்கும் கதைகளாக இருக்கின்றன. இங்கே சினிமாவை ரசிப்பவர்கள் பெரும்பான்மையோர் அந்த வர்க்கத்திலிருப்பவர்கள் என்பதாலேயே இத்தகைய தன்னம்பிக்கைக் கதைகள் தொடர்ந்து ஜொலிக்கின்றன, ஜெயிக்கின்றன.

இந்தக் கதை 1989-ல் ஆரம்பிக்கிறது. கதைக்களம் சென்னை.

இந்த ‘ஸ்டார்’-ன் முதல் காட்சியே, பள்ளி நாடகத்திற்காக  பாண்டியன் தனது மகனுக்கு வீட்டில் பாரதியார் வேடம் போடுவது தான். உடை அலங்காரம், முக அலங்காரமெல்லாம் முடிந்த பிறகு மீசையைத் தேடினால் காணவில்லை. ‘மீசை இல்லாமல் பாரதி எப்படி?’ என மகன் தவிக்கிறான். ”மீசையை மறக்கடிப்பது தான் நடிப்பு, அதை நீ செய்.. செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு” என்கிறார் பாண்டியன். அப்பா சொன்னது போலவே நடித்து கைதட்டல் வாங்குகிறான் கலை. இந்த பாலபாடம் கல்லூரியிலும் தொடர்கிறது. சினிமாக் கம்பெனிகளில் மாறி மாறி ஏறி இறங்குகிறார்கள் அப்பாவும் மகனும்.

ஸ்டார்
ஸ்டார்

கல்லூரியில் மீராவுடன் [ ப்ரீத்தி முகுந்தன் ] காதல், ஆட்டம், கொண்டாட்டம், வழக்கம் போல் லவ்வருக்காக சண்டை என போகிறது கவினின் வாழ்க்கை. இதற்கிடையே பம்பாயில் பிரபல டைரக்டர் ஒருவர் நடத்தும் ‘ஆக்டிங்க் ஒர்க்‌ஷாப்பிற்கு’ செலக்டாகிறார் கவின். இவரின் நடிப்பை ரிஜெக்ட் பண்ணுகிறார் அந்த டைரக்டர். கடுமையான விடாமுயற்சியால் டைரக்டரின் கருணைப் பார்வை இவர் மீது விழுகிறது. நடிப்பில் தேர்ச்சி பெற்று சென்னை திரும்புகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரு சினிமாக் கம்பெனியில் வாய்ப்புக் கிடைத்து ஹைதரபாத் போகும் போது கொடும் விபத்தில் சிக்கி, கவினின் முகமே மாறிவிடுகிறது. தொடர்ந்து போராட வழியில்லை, மீராவும் விலகிப்போய்விட்ட நிலை. அதன் பின் அதே கல்லூரியில் படித்த சுரபியைச் சந்திக்கிறார், காதல் கொள்கிறார், இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம் கவினுக்கு.

சும்மா சொல்லக் கூடாது, சகல ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் கவின். ப்ரீத்தி முகுந்தனை ஃபோர்ஸ் பண்ணி லவ் பண்ண வைக்கும் சாக்லேட் முரட்டுத்தனம், பம்பாயிலிருந்து அப்பா லாலுக்குப் போன் பண்ணிக் கதறுவது, இரவு நேரம்.  மொட்டை மாடியில் ஒரு கட்டிலில் அமர்ந்தபடி கொஞ்சம் நீளமான வசனத்தை அப்பாவிடம் பேசிக் காட்டுவது, முகத்தில் தையல் இருப்பதால் டைரக்டர் ரிஜெக்ட் பண்ணியதும் “என்னதாண்டா உங்க பிரச்சனை? இதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?” என ஆவேசமாவது, க்ளைமாக்சில் கதறிக் கண்ணீர்விடுவது என படம் முழுவதும் கவின் ராஜ்யம் தான்.

படத்தின் ஹீரோ கவின் என்றாலும் அந்த ஹீரோவின் ஆதர்ஷ ஹீரோவாக இருக்கும் லால் நடிப்பு இருக்கே நடிப்பு.. நம்மை அசர வைக்கும் பிரமிப்பு. பம்பாயிலிருந்து கவின் பேசும் போது, “என்னால ஜெயிக்க முடியலப்பா” என கேவி அழும் போது, “தன்னம்பிக்கை இல்லாதவன் என் மகனே இல்ல. அதனால நீ  இங்க வரவேண்டாம்” என விசும்பலுடன் கலங்குவது, க்ளைமாக்ஸுக்கு முன்பாக, “ நீ தோத்துட்டா” என வெடித்து அழுவது என மனுசன் பொளந்துகட்டிட்டாரு. அவரது மனைவியாக வரும் கீதா கைலாசம் மட்டும் சும்மாவா? எழவு வீட்டில் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் போது  மகனுக்கு சினிமா சான்ஸ் கிடைச்சிருச்சு என்ற நல்ல சேதி கேட்டதும் லேசாக சிரித்து, அதன் பின் ஆவேசமாக ஒப்பாரி வைத்து என தூள் கிளப்பிவிட்டார் மனுஷி.

ஸ்டார்- கவின்
ஸ்டார்- கவின்

இந்த சீனை வடிவமைத்திருப்பதற்காகவே டைரக்டர் இளனை ஸ்பெஷலாக பாராட்டலாம். இந்த சீனை மட்டுமல்ல, படத்தின் முக்கால்வாசி சீன்கள் ரொம்பவே ஃப்ரஷ்ஷாக, உணர்வுகளை நமக்குள் இலகுவாக கடத்த வைத்ததில் இளன் 100% மார்க் வாங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஸ்டாரில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நிச்சயமாக நம்ம யுவன் சங்கர் ராஜா தான். பாடல்களில் மட்டுமல்ல, நாம் மேலே சொன்ன சீன்கள் உட்பட அனைத்து சீன்களிலும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருப்பது யுவன் தான். இளன் என்றாலே யுவனின் இசைக்கருவிகள் மாயாஜாலம் காட்டுகின்றன.

ஹீரோயின்களில் ப்ரீத்தி முகுந்தன் பவுண்ட்ரிகளாக அடித்தார் என்றால், சிஎஸ்கே.வின் சிவம் துபே போல சிக்ஸர்களாக அடித்து நடிப்பில் வான வேடிக்கை காட்டிவிட்டார் அதிதி பொஹன்கர்.

காதல் சுகுமாரும் மாறனும் சில சீன்களே வந்தாலும் இந்த வானத்தில் அவர்களும் தனியாகத் தெரியும் நட்சத்திரங்கள் தான்.

“கருப்பா இருக்குறவனெல்லாம் வடிவேலு மாதிரி ஆகிடமுடியுமா?” என்ற வசனமும் சிறுவயதில் ரஜினி கட்-அவுட்டுடன் கலை [கவின்] நிற்கும் போட்டோ ஆல்பமும் டைரக்டர் இளனின் நம்பிக்கைக் குறியீடுகள். தன்னம்பிக்கையாளர்களின் அடையாளங்கள்.

-மதுரை மாறன்               

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.