அங்குசம் பார்வையில் ‘இங்க நான் தான் கிங்கு’
அங்குசம் பார்வையில் ‘இங்க நான் தான் கிங்கு’ தயாரிப்பு: ‘கோபுரம் ஃபிலிம்ஸ் ‘ சுஸ்மிதா அன்பு செழியன் & ஜி.என்.அன்புசெழியன். டைரக்டர்: ஆனந்த் நாராயணன், கதாசிரியர்: எழிச்சூர் அரவிந்தன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பாலசரவணன், விவேக் பிரசன்னா, சேஷு, மனோபாலா, முனீஸ்காந்த், மாறன், கூல் சுரேஷ். டெக்னீஷியன்கள்- ஒளிப்பதிவு: ஓம் நாராயணன், இசை: டி.இமான், எடிட்டிங்: எம்.தியாகராஜன், காஸ்ட்யூம் டிசைனர்: நவதேவி ராஜ்குமார், நடனம்: பாபா பாஸ்கர், கல்யாண், ஸ்டண்ட்: மிராக்கிள் மைக்கேல். பிஆர்ஓ: நிகில் முருகன்.
34 வயதாகியும் கல்யாணம் நடக்கவில்லை சந்தானத்திற்கு . சென்னையில் சொந்த வீடு இருந்தால் தான் பொண்ணு கிடைக்கும் என்ற கண்டிஷனால் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஃப்ளாட் வாங்குகிறார் சந்தானம். கடனை அடைப்பதற்காகவே ஏகப்பட்ட பெண் பார்த்தும் எதுவும் செட்டாகாததால் தனது நண்பன் விவேக் பிரசன்னா நடத்தும் மேட்ரி மோனியல் ஆபீஸிலேயே வேலைக்கு சேர்கிறார். அப்போது கல்யாண புரோக்கர் மனோபாலா, ரத்னபுரி ஜமீன் தம்பி ராமையா மகள் இருப்பதாக சொல்கிறார்.
கடனை அடைக்க இதான் வழி என்ற முடிவுடன் ஜமீன் மகளை( ஹீரோயின் பிரியா லயா) பெண் பார்க்கச் செல்கிறார் சந்தானம். பெண் பார்த்து முடித்த பத்தாவது நிமிடத்தில் கல்யாணமும் முடிந்துவிடுகிறது. தாலி கட்டிய ஐந்தாவது நிமிடத்தில் தான் சந்தானத்திற்கு தெரிகிறது, ஜமீனே திவாலான கதை. வேறு வழியே இல்லாமல் மனைவி பிரியா லயா, ஜமீன் தம்பி ராமையா, அவரது மகன் பாலசரவணன் ஆகியோருடன் சென்னைக்கு வருகிறார் சந்தானம்.
அதன் பின்னர் நடக்கும் காமெடி சரவெடி தான் ‘இங்க நான் தான் கிங்கு’. டைட்டில் கார்டு போட்டது தான் தெரிந்தது, சர்ர்…ன்னு இடைவேளை வந்துருச்சு. சந்தானத்தின் டைமிங் காமெடி எக்ஸ்பிரஸ் அம்புட்டு ஸ்பீடு . மனோபாலாவுக்கு மீன் முள்ளுன்னு பேர் வச்சு சந்தானம் கூப்பிடும் ஸ்டைலே அள்ளுது போங்க. “ஏன்டா அம்சமான பொண்ணு பாருடான்னா.. ஜீவனாம்சம் வாங்குற பொண்ணை பார்த்திருக்க” என மனோபாலாவை கடிப்பது, திவாலான ஜமீன் என தெரிந்ததும் அங்கிருக்கும் கிழவியிடம், “நீ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினச்சேன், கேரக்டர் ஆர்ட்டிஸ்டா” என டைமிங் கா போட்டுத் தாக்கும் போது தியேட்டரே அதிரும் அளவுக்கு சிரிப்பு.
பிணத்தை மறைக்க தம்பி ராமையா பல சினிமாக்களை சொல்லும் போது “இதெல்லாம் போலீசும் பார்த்திருக்கும்டா ” என கவுண்டமணி பாணியில் வெளுத்துக் கட்டுகிறார் சந்தானம். நிஜத்தில் நடிகர் அர்ஜுனுக்கு தம்பி ராமையா சம்மந்தியானதைக்கூட விட்டு வைக்கவில்லை சந்தானம். நடுத்தெருவுக்கு வந்த பிறகும் ஜமீன் கெத்தை விடாமல் தம்பி ராமையா செய்யும் அலப்பறைகள் அட்டகாசம். பால சரவணனும் பட்டையைக் கிளம்பிவிட்டார்.
ஹீரோயின் பிரியா லயா, ஒரு சாயலில் ரம்யா நம்பீசன் மாதிரி இருக்கார். நல்ல முக அமைப்பு, அளவான உடல்வாகு, நடிப்பும் டபுள் ஓகே. “குலுக்கு குலுக்கு” , ” மாயோனே” பாடல்களை ரொம்பவே ரசிக்க வைத்த மியூசிக் டைரக்டர் இமானுக்கும் அதை கலர் ஃபுல்லாக படம் பிடித்த கேமராமேன் ஓம் நாராயணனுக்கும் சபாஷ் . சந்தானத்தை ஸ்மார்ட் & பியூட்டியாக காட்டி ரசிக்க வைக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நவதேவி ராஜ்குமார்.
சந்தானம் பிரியாலயா தம்பி ராமையா பாலசரவணன் விவேக் பிரசன்னா ஆகியோரின் கலர்புல் கனவுப் பாடலின் டான்ஸ் மூவ்மெண்ட் மனசை அள்ளுகிறது. மொத்தத்தில் 100% காமெடிக்கு கியாரண்டி இந்த ‘கிங்கு’. தயாரிப்பாளராக முதல் அடி எடுத்து வைத்திருக்கும் சுஸ்மிதா அன்பு செழியனுக்கு 100% குஷியைக் கொடுக்கும் இந்த ‘கிங்கு’
–மதுரை மாறன்.