அரபு நாட்டில் ஆடு மேய்க்கப் போன அடிமைகள் போல அல்லல்படும் கௌரவ விரிவுரையாளர்கள் !
அரபு நாட்டில் ஆடு மேய்க்கப் போன அடிமைகள் போல அல்லல்படும் கௌரவ விரிவுரையாளர்கள் ! மக்கள் கல்வி கூட்டியக்கம் அறிக்கை !
அரசுப் பள்ளிகளில் மழலையர் பிரிவு தொடங்கவேண்டும்; கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்; கலை அறிவியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை வசூல் செய்ய அரசு பறக்கும் படை உருவாக்க வேண்டும்; கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர், மக்கள் கல்வி கூட்டியக்கத்தினர்.
பேரா.இரா.முரளி , பேரா.வீ. அரசு , பேரா.ப.சிவகுமார், கண குறிஞ்சி , சு.உமா மகேஸ்வரி ஆகியோர் சார்பில் வெளியான கூட்டறிக்கையில்,
* தமிழ் நாட்டில் அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கெளரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்குச் சாதகமாக மூன்று நீதிமன்றத் தீர்ப்புகள் வந்துள்ளன. ஒரு அரசாணையும் அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கு அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இவற்றை எல்லாம் புறம் தள்ளி புதிதாக 4000 ஆசிரியர்களைப் புதிய விதிமுறைகளின் படிTRB தேர்வு எழுதி வர வேண்டும் என்று அறிவித்திருப்பதை மக்கள் கல்விக் கூடியக்கம் கண்டிக்கின்றது.
* சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ளத் தீர்ப்பை தமிழக அரசு மதித்து 1146 பணி இடங்களை நிரப்பும் வகையில் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோருகின்றோம்.
* மீதம் உள்ள ஆயிரக்கணக்கான கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்காகப் பல ஆண்டுகளாக அவர்கள் சொற்ப ஊதியத்தில் அரசு கல்லூரியில் ஆற்றிய சேவைகளைக் கணக்கில் எடுத்து, சிறப்பு நடவடிக்கை மூலம் அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு மதிப்பெண்கள் வழங்கி,( இந்த மதிப்பெண்கள் கணக்கீட்டு முறையை நம்பித்தான் அவர்கள் குறைவான ஊதியத்தில் இது காறும் பணிபுரிந்தனர்) பல்கலைக்கழக மானிய குழு, அந்தந்தக் காலத்தில் வரையறுத்த கல்வித் தகுதிகளையும் அவர்களுக்கு சரிபார்த்து, அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசை வலியுறுத்துகின்றோம்.
* ஏற்கெனவே தேசிய அளவிலான கல்லூரி ஆசிரியர் பணிக்கானத் தகுதித் தேர்வு NET மற்றும் மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்வுகளில்SET தேர்ச்சி பெற்றவர்கள்,மற்றும் முனைவர் பட்டம் பெற்றோர், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கல்லூரி ஆசிரியர்களாகத் தகுதி பெற்றவர்கள் ஆதலால் மீண்டும் தனியாக அவர்களுக்கும் டி.ர்.பி. தேர்வு வைப்பது நியாயமல்ல என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்புக்காக ஏங்கித் தவித்து தெடர்ந்து பணி செய்து வரும் கௌரவ விரிவுரையாளர்களை மீண்டும் ஒரு தேர்வை எழுதச் சொல்லுவது நியாயம் அல்ல என்று கருதுவதாலும், நெட் ,செட் ,பிஎச்டி உள்ளவர்களை டிஆர்பி தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டுமென தமிழக அரசைக் கோருகின்றோம்.
* மேலும் பல்கலைக்கழக மானியக் குழு வரையறுத்துள்ள தகுதிகள் பெற்றுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதி கல்லூரிகளிலும் நிர்வாகங்கள் தனிப்பட்ட முறையில் நியமித்து பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கும், அவர்கள் அரசுக் கல்லூரிகளுக்குப் பணி வாய்ப்பு கோரும் போது டி.ஆர்.பி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோருகிறோம். இவர்களுக்கும் அரசுக் கல்லூரி பணி வாய்ப்பில் இவர்களின் பணிக் காலத்தைக் கணக்கில் எடுக்கப்பட்டும் அதற்குரிய உரிய மதிப்பெண்கள் முன்பு போல வழங்கவும்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.
* பணி வாய்ப்பு எதிர்நோக்கியிருக்கும் NET, SET, Ph.D. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் டி.ஆர்.பி. தேர்விகளிலிருந்து விலக்களிக்கவேண்டும்.
* ஆயிரக்கணக்கான கெளரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் மிக மிக குறைந்த ஊதியத்தில், அரபு நாட்டில் ஆடு மேய்க்கப் போன அடிமைகள் போல இப்படி அல்லல் படவைத்தமைக்குக் காரணம் அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளே. ஒவ்வொரு ஆண்டும் கெளரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கும் அது தான் காரணம்.
வாழ்க்கையையே பணயம் வைத்து அவல நிலையில் வாழும் கெளரவ விரிவுரையளர்களின் இந்நிலைக்கு அரசின் முடிவுகளே காரணம். எனவே காலிப் பணியிடங்களில் பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள முறையான ஊதியத்தில் நிரந்தரமாகப் பேராசிரியகளை மட்டுமே நியமிக்கும் கொள்கை முடிவை அரசு உடனடியாக எடுக்கக் கோருகின்றோம்.இனி கெளரவ விரிவுரையாளர்கள் என்ற பணியில் யாரையும் நியமிக்க வேண்டாம் என்றும் கோருகின்றோம். கெளரவ விரிவுரையாளர்கள் என்ற பணி இனி அரசு கல்லூரிகளில் இல்லாமல் செய்ய கோருகின்றோம்.
* சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் சுயநிதிப் பிரிவு ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு வரையறுத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை (₹.57000) நிர்வாகங்கள் வழங்க வலியுறுத்தித் தீவிர நடவடிக்கை எடுக்க அரசை வேண்டுகிறோம்.
கல்விக் கட்டணக் கொள்ளை
* கல்லூரிகளில் அரசு விதித்த கட்டணங்களை விட அதிகமாக, விதிகளை மீறிக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க அரசைக் கோரியும், அரசு ஆணைப்படி கலை அறிவியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை வசூல் செய்ய அரசு பறக்கும் படை ஒன்றை உருவாக்கித் தீவிர கண்காணிப்பு செய்து விதி மீறல்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறோம்.
* அரசு நிர்ணயித்த கல்லூரி கல்விக் கட்டணங்களை பொது வெளியில் வெளியிடுவதோடு, அனைவரும் பார்க்கத் தக்க வகையில் அவற்றை அந்தந்தக் கல்வி நிறுவனகளில் அறிவிப்புப் பலகையில் வெளியிடவேண்டும். அதிக கட்டணம் வசூம் செய்யும் கல்லூரிகள் மீது புகார் கொடுக்க ஏதுவாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்.
கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை
* எல்லா கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை மதிப்பெண்களின் அடிப்படையிலும், இடஒதுக்கீட்டை பின் பற்றியும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இது அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உதவி பெறும் மற்றும் உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது கட்டணக் கொள்ளைக்கும், விதி மீறிய மாணவர்கள் சேர்க்கைக்கும் வழி செய்யும் என்பதால் விலக்கு அளிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அரசு கண்காணிப்பின் கீழ் ஒற்றை சாரள முறையில் நடை பெற நடவடிக்கைகள் எடுக்க கோருகின்றோம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
* அரசுப் பள்ளிகளில் மழலையர் பிரிவு தொடங்கவேண்டும் என்றும், பகுதிவாரியாக மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அரசைக் கோருகின்றோம்.” என்பதாக அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
அங்குசம் செய்திப்பிரிவு.