கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி காட்டிய மத்திய மண்டல ஐ.ஜி!
கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி காட்டிய மத்திய மண்டல ஐ.ஜி! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக திடீர் சோதனை நடத்துமாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாராயம் விற்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களை முடுக்கி விட்டிருக்கிறார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், இ.கா.ப.
இது தொடர்பாக, மத்திய மண்டல காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களில் கடந்த 01.01.24 முதல் 20.06.24 வரை மது சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய மண்டலத்தில் 17528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17757 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 145111 லிட்டர்கள் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக திருச்சி மாவட்டத்தில் 1232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1237 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 2672 லிட்டர் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1763 வழக்குகளும், 1766 எதிரிகளும், 3379 லிட்டர் மது வகைகளும், கரூர் 2910 வழக்குகளும், 2914 எதிரிகளும், 2666 லிட்டர் மது வகைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 809 வழக்குகளும், 829 எதிரிகளும், 2575 லிட்டர் மது வகைகளும், அரியலூர் மாவட்டத்தில் 1395 வழக்குகளும், 1418 எதிரிகளும், 2699 லிட்டர் மது வகைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2781 வழக்குகளும், 2838 எதிரிகளும், 6501 லிட்டர் மது வகைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 3289 வழக்குகளும், 3325 எதிரிகளும், 11624 லிட்டர் மது வகைகளும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 1306 வழக்குகளும், 1372 எதிரிகளும், 54907 லிட்டர் மது வகைகளும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2043 வழக்குகளும், 2058 எதிரிகளும், 58448 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் (19.06.24 மற்றும் 20.06.24) மட்டும் மொத்தமாக 342 வழக்குகள் செய்யப்பட்டுள்ளது (திருச்சி 41, புதுக்கோட்டை 49, கரூர் 50, பெரம்பலூர் 38, அரியலூர் 15, தஞ்சாவூர் 60, திருவாரூர் 48, நாகப்பட்டிணம் 20 மற்றும் மயிலாடுதுறை 21) மேலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுப்பட்ட 13 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இரவு பகல் எல்லா நேரங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் மது சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், இ.கா.ப தக்க அறிவுரைகள் வழங்கியுள்ளார்.” என்பதாக செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
அங்குசம் செய்திப்பிரிவு.