அங்குசம் பார்வையில் ‘லாந்தர்’ பட விமர்சனம் –
அங்குசம் பார்வையில் ‘லாந்தர்’ பட விமர்சனம் – தயாரிப்பு: ‘எம் சினிமா புரொடக்ஷன்’ ஸ்ரீ விஷ்ணு. டைரக்டர்: சாஜி சலீம். ஆர்ட்டிஸ்ட்ஸ் : விதார்த், ஸ்வேதா டோராத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன். டெக்னீஷியன்கள்—ஒளிப்பதிவு: ஞான செளந்தர், இசை: எம்.எஸ்.பிரவீன், எடிட்டிங்: பரத் விக்ரமன், ஸ்டண்ட் டைரக்டர்: விக்கி, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: ஜி.பாஸ்கர், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
தலையை மூடியபடியே ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதன் ஒருவன், இரவில் கோவை நகர வீதிகளில் கண்ணில்படுவோரையெல்லாம் திடீர் திடீரென தாக்குகிறான். இவனைப் பிடிப்பதற்காக ஏசிபி விதார்த் தலைமையிலான போலீஸ் படை களம் இறங்குகிறது. அந்த மர்ம மனிதன் யார்? அவனை போலீஸ் பிடித்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘லாந்தர்’.
படத்துக்கு லாந்தர்னு டைட்டில் வச்சதாலோ என்னவோ, இடைவேளை வரை படம் ரொம்பவே லாந்திக்கிட்டு அலையுது. அதுவும் முழுக்க முழுக்க நைட் சீன் என்பதால் லாந்தல் அதிகாமகவே இருக்கு. போலீஸ் அதிகாரிக்கான விரைப்பு, முறைப்பு, சுறுசுறுப்பு இல்லாட்டியும் போலீஸ் உடுப்புக்கு ஓரளவு மேட்ச் ஆகியிருக்காரு விதார்த். அதுக்காக சம்பளமே கிடைக்காத போலீஸ் மாதிரி சவச்சவன்னா வந்து போறது.
தமிழ் சினிமாக்களில் போலீஸ்னா சர்சர்ன்னு இன்னோவா கார்ல வந்து இறங்குறது, சிமெண்ட் தரையே வெடிக்குற அளவுக்கு தடதடன்னு ஷூ சத்தத்துடன் நடந்து வந்து அக்யூஸ்டுகளை போட்டுப் பொளக்குறதுன்னு ரெகுலரான ஃபார்முலா நமக்கு வேண்டாம்னு யோசிச்சிருப்பார் போல டைரக்டர் சாஜிசலீம்.
அதனால் க்ரைம் ஸ்பாட்டுக்கு ஸ்லோ மோஷன் எஃபெக்ட்ல தான் வர்றாரு விதார்த். மர்ம மனிதனால் கடுமையாக தாக்கப்பட்ட போலீஸார் கூட இவர் வரும் வரை ரோட்டில் அப்படியே படுத்துக்கிடக்கிறார்கள். இவர் வந்த பின் ஆம்புலன்சை வரவைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறார். அதனால தான் படம் லாந்தர் மாதிரி லாந்திக்கிட்டு அலையுதுன்னு சொல்றோம்.
விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோராத்தி. மிக்ஸி திடீர்னு சவுண்ட் அதிகமானாலே பயந்த சுபாவம் கொண்டவர் தான் ஓகே. அதுக்காக புருஷனை, அதுவும் ஏசிபியைத் தேடிக்கிட்டு நட்ட நடுராத்திரில தனியா போற அளவுக்கு குறைந்தளவு புத்திசுபாவம் இல்லாதவரா? ஏன் டைரக்டரே இப்படி? மத்தபடி நல்ல வளத்தியா, பளிச்சுன்னு இருக்கார் ஸ்வேதா.
இடைவேளைக்குப் பிறகு, சஹானா—விபின் ஃப்ளாஷ்பேக்கில் தான் லாந்தர் ஓரிடத்தில் நின்னு கதையைச் சொல்லிப் புரிய வைக்கிறது. மர்ம மனிதன் யார்? என்பதற்கான விடையும் கிடைக்கிறது. இந்தப் புரிதல் தான் க்ளைமாக்சை ஓரளவு நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது.
–மதுரை மாறன்