தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – 2021,22,23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் இடைவெளியில்லாமல் கொண்டாடுவோம் – துணைவேந்தரின் உணர்ச்சிமிகு கருத்து
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – 2021 ,22, 23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் இடைவெளியில்லாமல் கொண்டாடுவோம் – துணைவேந்தர் ம.செல்வம் அவர்களின் உணர்ச்சிமிகு கருத்து
பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், துணைவேந்தர் அவர்களை நேற்று (10.07.2024) மாலை தமிழர் அறிவியக்கப் பேரவை மற்றும் குண்டூர் வடக்குக் கிழக்குக் கிராமக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா 2023க்கும் மட்டும் கொண்டாடடினால் மட்டும் போதாது, விடுபட்டுப்போன 2021, 22 ஆம் ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கோரிக்கை மனுவை வழங்கினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
, 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இன்று (11.07.2024) காலை 9.00 மணியளவில், துணைவேந்தர் தரப்பிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், “பெரியார் உயராய்வு மைய இயக்குநருடன் கலந்து பேசிப் பெரியார் பிறந்தநாளை 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடும் வகையில் முடிவெடுக்கத் தாங்கள் கலந்துகொள்ளவேண்டும்” என்று வாய்மொழியாகக் கூறப்பட்டது. பல்கலைக்கழகத் தரப்பின் அழைப்பை ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனைவர் தி.நெடுஞ்செழியன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்றார்.
பகல் 11.00 மணியளவில், துணைவேந்தர் அறையில், முனைவர் தி.நெடுஞ்செழியன், பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) கோவிந்தராசன் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. உடன் பல்கலைக்கழகப் பதிவாளரும் உடன் இருந்தார். பேச்சுவார்த்தையில் இயக்குநர் கோவிந்தராசன்,“2023. 2024ஆம் ஆண்டுகளுக்குப் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட ஆட்சிக்குழுவின் ஒப்புதலைப் பெற்றுச் செலவினங்களுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு கொரோனா என்னும் பெருந்தொற்றுக் காலம். இந்தக் காலத்தில் எந்த விழாவும் நடைபெறவில்லை. இப்போது நடத்தினால் அந்த ஆண்டுக்கான செலவினங்களுக்காக ஆட்சிக்குழுவின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்ற சிக்கல் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதில் அளித்த முனைவர் தி.நெடுஞ்செழியன்,“2021ஆம் ஆண்டு இயக்குநர் குறிப்பிடுவதுபோல் பெருந்தொற்றுக் காலம்தான். 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 2020-21, 21-22, 22-23ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுத் தொகையை வழங்கியுள்ளது. இதில் உள்ள பிரச்சனையின் மையம் என்னவென்றால், பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா, இடைவெளி இல்லாமல் கொண்டாடப்பட்டது என்றிருக்கவேண்டும்.
இடைவெளி இருந்தால் அது ஏன்? சமூக மாற்றத்திற்கு வித்திட்ட பெரியாருக்கு 2021ஆம் ஆண்டு ஏன் விழா கொண்டாடப்படவில்லை என்று வருங்கால இளை தலைமுறையின் கேள்வி எழுப்புவார்கள். அப்போது நம்மிடம் இதற்கான பதில் இருக்காது என்பதால் பொதுமக்கள் கோரிக்கை என்பது பெரியார் பிறந்தநாள் இடைவெளியில்லாமல் கொண்டாடப்படவேண்டும் என்பதுதான்” என்றார்.
இயக்குநர் கோவிந்தராசன் நிதி பெறுவதில் உள்ள சிக்கல்களையும் ஆட்சிக்குழு முடிவுகளையும் எடுத்துக்கூறினார். இறுதியில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் அவர்கள்,“பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு மேனாள் தலைவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் கோரிக்கை ‘சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் ஆண்டு இடைவெளி இல்லாமல் கொண்டாடப்பட வேண்டும். அந்தந்த ஆண்டுகளில் பெரியார் சிந்தனையாளர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படவேண்டும்’ என்பதுதான். இது முறையான கோரிக்கை.
தந்தை பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடப் பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்று சொல்லக்கூடாது. 2021ஆம் ஆண்டுக்கும் பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். செலவு செய்யப்படும் நிதிகளுக்கு ஆட்சிக்குழுவிடம் பின்னேற்பு ஒப்புதலைப் பெற்றுக்கொள்வோம். பேராசிரியர் நெடுஞ்செழியன் சொன்னதுபோல் சமுதாய மாற்றத்திற்கு வித்திட்ட பெரியாரின் பிறந்தநாளை ஆண்டு இடைவெளி இல்லாமல் 2021, 22, 23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடுவோம்” என்று கூறினார்.
துணைவேந்தரின் உணர்ச்சிமிகு உரையைக் கேட்ட பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) கோவிந்தராசன், “தங்களின் அறிவுரைப்படி பெரியார் பிறந்தநாளை ஆண்டு இடைவெளி இல்லாமல் கொண்டாடுவோம்” என்றார். இயக்குநரின் முடிவைக் கேட்ட முனைவர் தி.நெடுஞ்செழியன் உடனே இயக்குநரின் கைகளைக் குலுக்கி, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இயக்குநர் சிறந்ததோர் முடிவினை எடுக்க உணர்ச்சிமிகு வார்த்தைகளால் கருத்துகளை வெளிப்படுத்திய துணைவேந்தர் செல்வம் அவர்களுக்கும் முனைவர் தி.நெடுஞ்செழியன் கைகளைக் குலுக்கி வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். பகல் 11.30 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
பெரியார் பிறந்தநாள் விழா 2021, 22, 23 ஆகிய ஆண்டுகளில் இடைவெளி இல்லாமல் நடைபெறும் வண்ணம் பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்ப இயக்குநர் கோவிந்தராசு அவர்களைக் கேட்டுக்கொண்டார். தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.
-ஆதவன்