நியோமேக்ஸ் : தொடரும் தற்கொலைகள் ! தனிக்கவனம் செலுத்துமா, அரசு?
நியோமேக்ஸ் : தொடரும் தற்கொலைகள் ! தனிக்கவனம் செலுத்துமா, அரசு? “என்னுடைய சாவுக்கு நியோமேக்ஸ் மற்றும் துணைநிறுவனம் ரோபோகோ கம்பெனிதான் காரணம்.” என்று உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த 54 வயதான ராமலிங்கம்.
நியோமேக்ஸ் மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காத விரக்தியில், இதற்குமுன்னர் இறந்துபோன கம்பம் சிவக்குமார், ஆரோக்கியசாமி, பெலிக்ஸ்ராஜா ஆகிய மூவரின் மரணத்திற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், இப்போது நான்காவது பலி ராமலிங்கம். மருத்துவ சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் இறந்துபோன பிரபுவின் மரணமும் நியோமேக்ஸ் குற்றக்கணக்கில்தான் சேரும்.
கம்பம் சிவக்குமாரும் பெலிக்ஸ்ராஜாவும் தாங்கள் ஆசையாய் பெற்றெடுத்த பச்சிளங்குழந்தைகளை பரிதவிக்கவிட்டு மரணித்துப் போனார்கள். கோடிகளில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு உள்ளூர் அளவில் செல்வாக்கான வியாபாரியாக வாழ்ந்து வந்த ராமலிங்கம், “ஏமாற்றுக்காரன்” என்ற ஏச்சுக்கு ஆளாக நேரிட்டதற்காக இந்த துயரமான முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
மனநோயாளிகளாக முதலீட்டாளர்கள் !
நியோமேக்ஸில் இலட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் அனைவருமே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ”பேராசைக் காரர்கள்”தான், மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களை ”மோசடிக்காரர்”களாக மாற்றியது, நியோமேக்ஸ். முதலீட்டின் வரம்பை தன்னளவில் தனது வாழ்நாள் சேமிப்போடு அவர்களை நிறுத்திக்கொள்ள விடாமல், தன்னை சுற்றியுள்ள குடும்ப உறவுகளையும் நெருங்கிய நண்பர்களையும் முதலீடு செய்ய தூண்டப்பட்டார்கள். மகுடிக்கு ஆடும் பாம்பை போல, நியோமேக்ஸ் ஓதிய கதைகளில் இலயித்து உற்றார் உறவுகளையும் உள்ளே இழுத்துவிட்டார்கள். இதோ அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறார்கள்.
சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சேமிப்புகளையெல்லாம் இழந்து; வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட முடியாமல்; அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழியென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ரணம் போதாதென்று; “நீ சொல்லிதானே போட்டேன். உன்னை நம்பித்தானே போட்டேன்.” என்று தன்னை நம்பி முதலீடு செய்த உறவுகளும் நண்பர்களும் தன் பங்குக்கு கழுத்தை நெருக்கும்போதுதான் அந்த துர்பாக்கிய முடிவுக்கு வந்து சேர்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், நியோமேக்ஸில் முதலீடு போட்டு பணத்தை திரும்பப் பெறுவதற்காக காத்திருக்கும் அத்தனை பேரும் இப்போது மனநோயாளிகளாகவே மாறியிருக்கிறார்கள்.
நியோமேக்ஸில் முதலீடு செய்வதற்கு முன்பாக, கார் பங்களா என்று வசதியாக வாழ்ந்தவர்கள்கூட, இன்று அத்தனையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள் என்பது வாழ்நாள் வேதனை.
சூதாட்டத்தின் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த நியோமேக்ஸ் !
”எந்த வகையிலாவது இதற்கு ஓர் தீர்வு கிடைக்காதா? போட்ட பணம் திரும்பக்கிடைக்காதா?” என்று முதலீட்டாளர்கள் ஒருபக்கம் பரிதவித்து நிற்கிறார்கள். மற்றொரு பக்கம், பேராசையைத் தூண்டி, தங்களது வசிய வலையில் வீழ்த்திய நியோமேக்ஸ் நிறுவனமோ, சென்றமுறை தோற்றவை அத்தனையும் எப்படியாவது இந்த முறை வாரிசுருட்டிவிட வேண்டுமென்ற வெறியோடு சூதாட்டத்தின் அடுத்த ரவுண்டை ஆரம்பித்துவிட்டார்கள்.
பினாமி பெயர்களில் முறைகேடாக பதுக்கிவைத்த சொத்துக்களையெல்லாம், சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி மெல்ல விற்று வருவதாக ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டுகிறார்கள் சிவகாசி ராமமூர்த்தியும், கம்பம் இளங்கோவனும். அவ்வாறு விற்றப் பணத்தில் பினாமி நிறுவனம் ஒன்றை உருவாக்கி வழக்கம்போல, பிசினஸை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தின் பிரபலமான அரசியல் செல்வாக்கு கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் ஆதரவில், அவர்களின் பினாமி நிறுவனமாகவே செயல்படத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
நியோமேக்ஸ் மோசடி அம்பலமாகி ஓராண்டாகியும், இன்னும் துலக்கமான தீர்வை எட்ட முடியாமல் விரக்தியில் துவண்டு கிடக்கிறார்கள் முதலீட்டாளர்கள். சட்டத்தின் சந்து பொந்துகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒருவேளை எதிர்காலத்தில் சிக்கினாலும் அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் வழிவகைகளையும் முன்னரே தீர்மானித்து வைத்துக் கொண்டுதான் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. நூற்றுக்கணக்கில் உருவாக்கி வைத்திருக்கும் துணை நிறுவனங்களும், போட்ட முதலீட்டுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் பாண்டு பத்திரங்களுமே எடுப்பான உதாரணங்களாக பல்லிளிக்கின்றன.
யாரைத்தான் நம்புவது? யார் சொல்வதை கேட்பது?
இவ்வளவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல, வெட்ட வெளிச்சமான பின்னும் “கம்பெனிகாரனே கதி” என அவர்களின் காலடியில் சரணடைந்து, அவர்களின் தயவுக்காக காத்திருக்கும் மனநிலையில் ஒரு கூட்டத்தை தயார்படுத்தி வைத்திருக்கிறது நியோமேக்ஸ் நிறுவனம். ”தன்னை அனுசரித்து போனால் மட்டுமே, ஏதோ பத்துக்கு எட்டு பழுதில்லாமல் செட்டில் செய்வேன்” என்பதாக பண்ணையார் பாணியில் இன்றும் மிடுக்காக பேசுவதற்கான தைரியத்தையும் வழங்கியிருக்கிறது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் நயவஞ்சகமான பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, நியோமேக்ஸில் பணத்தை போட்டு இழந்து நிற்கும் முதலீட்டாளர் பலரும் பலவிதமாக பிரிந்து கிடக்கிறார்கள். இன்னும் புகாரே கொடுக்க முன்வராத இலட்சக்கணக்கான பேருக்கு, ”என்னதான் நடக்கிறது?” என்பதே தெரியாமல் இருள்சூழ்ந்து கிடக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னின்று ஒருங்கிணைக்க முயற்சிக்கும் சிலரையும், அவதூறுகளை வீசி முத்திரை குத்தி அவர்களை விலக செய்வதற்கான முயற்சிகளும் அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன. அவரவர்களும் வாட்சப் குழுக்களை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு, குழாயடி சண்டையைவிட மோசமான சச்சரவுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து, “யாரைத்தான் நம்புவது? யார் சொல்வதை கேட்பது? எந்த வழிமுறையை பின்பற்றினால் பணம் கிடைக்கும்?” என்ற விடை தெரியாத கேள்விகளோடு குழம்பி நிற்கிறார்கள் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள்.
தேவை, பல்துறைகளின் ஒத்திசைவு !
பணம் கிடைக்காத விரக்தியிலும், அடுத்து என்ன செய்வதென்று திக்குத் தெரியாமல் குழம்பி நிற்கும் முதலீட்டாளர்களை ”அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும்” என்பதில்லை; குறைந்தபட்சம் ”இதுதான் சட்டரீதியான வழிமுறை என்பதாக எடுத்துரைத்து அவர்களின் குழப்பத்தைப் போக்க வேண்டும் என்பதையே அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் மௌனத்தையும்கூட, நியோமேக்ஸ் நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்பதுதான் கொடுமையானது.
வழக்கின் விசாரணை பொறுப்பு மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரிடம் இருக்கிறது. சொத்துக்களை கையகப்படுத்துவது மற்றும் பிரித்துக்கொடுப்பது ஆகிய நடைமுறைகள் டி.ஆர்.ஓ. தொடர்புடையதாக இருக்கிறது. வழக்கை விரைவாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு அவசியமாக இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி, விசாரணையில் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் இருக்கிறது.
இவற்றுக்கும் மேலாக, வழக்கின் போக்கில் எழும் சிக்கல்களை பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் இடத்தில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை, அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இருக்கின்றன. சிம்பொனி இசை உருவாக்கத்தைப்போல, இவர்களுக்கிடையே இந்த வழக்கு குறித்த ஒரு பொதுவான புரிதல் இருந்தால் மட்டுமே சுமுகமான தீர்வை எதிர்பார்க்கலாம். இல்லையெனில், கரடுமுரடான சந்தைக்கடை பேரிரைச்சலே பதிலாக கிடைக்கும்.
நியோமேக்ஸ் விவகாரம் தொடர்பாக டான்பிட் நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றக்கிளையிலும் இதுவரை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போக்குகள் உணர்த்தியிருப்பதும் இதைத்தான். வழக்கை இழுத்தடித்து தண்டனையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காலத்தே செய்ய வேண்டிய பரிகாரங்களிலிருந்தும் நியோமேக்ஸ் நிறுவனம் தப்பித்து செல்வதற்கான தோதான வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது.
நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கும் அதிகாரிகள் !
ஆக, இங்கே யார் யாரை கட்டுப்படுத்துவது? யார் வழிகாட்டுதலில் இந்த வழக்கை கொண்டு செல்வது? என்ற குழப்பமே மேலிடுகிறது. ஒரே விவகாரத்தை ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு மாதிரி அணுகும் விதமும்; ஒரே நீதிமன்றத்தில் விசாரணையின்போது அமரும் நீதிபதிகளை பொறுத்து மாறுபடும் அணுகுமுறையும் விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை துவளச்செய்கிறது.
துடிப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நேர்மையாகவும் செயல்பட விரும்பும் சில அதிகாரிகளையும்கூட, ”நமக்கு ஏன் வம்பு. வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துவிட்டு செல்வோம்” என்பதாக அவர்களை ஒதுங்கிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது.
கம்பி கட்டும் கதைகளோடு நியோமேக்ஸ் !
மற்றொருபுறம், “மேலிடத்தில் பேசி சரிகட்டியிருக்கிறோம். அவர்களும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரிடம் சொல்லிவிட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதற்குள் நாம் எப்படியாவது முதலீட்டாளர்களை சரிகட்டி சமரசம் செய்துவிட முயற்சிக்க வேண்டும். இதுவரை புகார் கொடுக்காதவர்களை இனியும் புகார் கொடுத்துவிடாதபடி அவர்களை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
இப்போதைக்கு போலீசில் புகார் கொடுத்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் செட்டில் செய்துவிட்டோம் எனில், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடலாம். பிறகு, ஒரு ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் அவகாசம் வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்துவிடலாம்.” என்பதாக ஜூம் மீட்டிங்குகளிலும், வாய்ஸ் மெசேஜ்களிலும் வெளிப்படையாகவே பேசுவதற்கான துணிச்சலையும் வழங்கியிருக்கிறது.
தொடக்கத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் தகிடுதத்தங்கள் போதுமான அளவுக்கு வெளிப்படாத நிலையில், மனு மேளாக்களை அடுத்தடுத்து நடத்தினார்கள். ஊடகங்களில் செய்தியாக்கினார்கள். அப்போதைய ஐ.ஜி ஆசியம்மாள் தொடங்கி, மதுரை டி.எஸ்.பி. வரையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்கள். ஆனால், இன்று புகார் கொடுக்க எட்டுவாரம் அவகாசம் என்பதாக மதுரை உயர்நீதிமன்றம் கெடு விதித்த சூழலிலும் எந்த ஒரு சிறப்பு மனு மேளாக்களும் நடத்தப்படவில்லை. எல்லாமே சடங்குத்தனமான முறையில் நிறைவேற்றப்படுகின்றன.
பொருளாதாரக் குற்றப்பிரிவு என்பது, வழக்கமான போலீசு கட்டமைப்பில் சேராமல், தனித்து இயங்கும் தனிப்பிரிவு வகையைச் சேர்ந்தது. அந்தந்த மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் டி.எஸ்.பி. அந்தஸ்த்தில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள்கூட, தன்னிச்சையாக செயல்பட்டுவிட முடியாது.
அவருக்கு மேல் உள்ள அதிகாரியான எஸ்.பி.யின் ஆலோசனையை அவர் பெற்றாக வேண்டும். எஸ்.பி. அவருக்கும் மேல் அதிகாரியான ஐ.ஜி.யின் ஒப்புதலையும்; ஐ.ஜி ஏடிஜிபியின் ஒப்புதலையும் பெற்றாக வேண்டுமென்ற அதிகார படிநிலைதான் இவ்வளவு சிக்கலுக்கும் காரணம் என்கிறார்கள்.
தனிக்கவனம் செலுத்துமா, அரசு?
அரசின் ஆதரவோடுதான் நியோமேக்ஸ் நிர்வாகம் இவ்வளவு துணிச்சலாக இப்போதும் பினாமி கம்பெனி தொடங்கி இயங்கி வருகிறது என்றும்; பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களையெல்லாம் விற்று வருகிறது என்றும்; லோக்கல் போலீசு ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக சமரசம் செய்து கொள்வதற்கு முறைகேடான முறையில் வாய்ப்பு வழங்குவதைப்போலவே, நியோமேக்ஸ் விவகாரத்திலும் அரசு மறைமுகமான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான கருத்து உலவிவருகிறது.
இந்நிலையில், புகார்தாரர்கள் – பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் – டான்பிட் நீதிமன்றம் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்திய பொருத்தமான சட்ட ஏற்பாட்டை; தனித்துவமான அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள். நியோமேக்ஸ் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துமா, அரசு?
– அங்குசம் புலனாய்வுக்குழு.
வீடியோ லிங்