அங்குசம் பார்வையில் ‘விருந்து’ திரைப்படம் திரைவிமர்சனம் !
வீடியோவை காண
அங்குசம் பார்வையில் ‘விருந்து’ திரைப்படம் திரைவிமர்சனம் . தயாரிப்பு : ’நெய்யார் ஃபிலிம்ஸ்’ கிரீஷ் நெய்யார். டைரக்ஷன் : தாமர கண்ணன். திரைக்கதை : தினேஷ் பள்ளத். நடிகர்—நடிகைகள் : அர்ஜுன், நிக்கி கல்ராணி, முகேஷ், ஆஷா சரத், ஹரிஷ் பெராடி, கிரீஷ் நெய்யார். ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், இசை; ரதீஷ் வேகா, எடிட்டிங் : வி.டி.ஸ்ரீஜித். தமிழ்நாடு ரிலீஸ் : டி.நாரயணன் பிலிம்ஸ். பி.ஆர்.ஓ. : சரண்.
தொழிலதிபர் ஜான் ஆபிரகாம் [ முகேஷ் ] ஒரு மலைப்பகுதியில் காரில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி மரணமடைகிறார். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டிலோ கொலைக்கான தடயம் இருப்பதாகத் தெரிந்து விசாரணையில் இறங்குகிறது போலீஸ். ஆபிரகாமின் மனைவியும் { ஆஷா சரத் } தனது கணவர் விபத்தில் தான் இறந்துவிட்டார் என நம்புகிறார்.
ஆபிரகாம் மறைந்து சில நாட்களிலேயே எலிசபெத்தும் ஒரு விபத்தில் மரணமடைகிறார். அடுத்தடுத்து தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் நிக்கி கல்ராணிக்கு ஆதரவாக இருந்து அடைக்கலம் கொடுக்கிறார் ஆபிரகாமின் உயிர் நண்பர் பாலன்.
ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணியையும் கொலை செய்யத் துரத்துகிறது ஒரு கும்பல். அப்போது நிக்கி கல்ராணியைக் காப்பாற்றுகிறார் தேவநாதன் [ அர்ஜுன்]. இதற்கடுத்து தேவநாதனைக் கொல்லத் துடிக்கிறார் நிக்கி கல்ராணி. இதற்கு பின்னணி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘விருந்து’.
மலையாள ரிமேக் படம் கூட இல்லை, மலையாள டப்பிங் படமான விருந்தில் என்ன இருக்கப் போகுது?ன்ற மனநிலையில் தான் படம் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் படம் ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்திலேயே ட்விஸ்டை ஸ்டார்ட் பண்ணிவிட்டார் டைரக்டர் தாமர கண்ணன். [ கவனிக்க ; தாமரைக்கண்ணன் அல்ல தாமர கண்ணன் தான். மலையாளத்தில் கண்ணன் தாமரக்குளம் என்பது தான் இவரது பெயர். தமிழுக்காக தாமர கண்ணனாகியிருக்கிறார் ]
அதிலும் அர்ஜுன் எண்ட்ரியான பிறகு திரைக்கதை செம பரபரக்கிறது. இந்த வயதிலும் ஆக்ஷன் சீன்களில் அதகளம் பண்ணுகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். நின்னமேனிக்கு காலை அனாயசமாக தூக்கி அடிப்பதிலும் முஷ்டியால் பஞ்ச் விடுவதிலும் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய அர்ஜுனை நினைவுபடுத்துகிறார்.
நிக்கி கல்ராணியும் அதே பளபளப்பு, மினுமினுப்புடன் ஃப்ரஷ்ஷாக இருக்கிறார். இவரைப் பாதுகாக்கும் கம்யூனிஸ்ட் தோழர் பாலனாக வரும் நடிகர் பெயர் நமக்குத் தெரியவில்லை. மனுஷன் சில காட்சிகளில் நடிப்பிலும் ஒரு ஸ்டண்ட் சீனில் நல்லாவே பெர்ஃபாமென்ஸ் பண்ணி கவனம் ஈர்க்கிறார். சமூக அக்கறையுள்ள ஆட்டோ டிரைவராக வரும் தயாரிப்பாளர் கிரீஷ் நெய்யார் சில சீன்களில் தடுமாறினாலும் ஓரளவு சமாளித்து தாக்குப் பிடிக்கிறார்.
கேரளாவின் உட்புறப் பகுதிகளின் அழகையும் அடர்ந்த வனப்பகுதிகளில் இருக்கும் திகிலையும் பதிவு செய்ய நன்றாகவே வேலை செய்துள்ளார்கள் கேமராமேன்கள் ரவிச்சந்திரனும் பிரதீப் நாயரும்.
கடைசி இருபது நிமிடங்கள் எதிர்பாராத ட்விஸ்ட். கிறிஸ்தவ மதத்தில் சாத்தான்களை வெறித்தனமாக நம்பும் பைத்தியக்காரத்தனத்திற்கும் விபரீத மூடநம்பிக்கைக்கும் எதிராக சவுக்கடி கொடுத்திருக்கிறார் டைரக்டர் தாமர கண்ணன்.
மொத்தத்தில் இந்த ‘விருந்து’ நல்ல திருப்தியான விருந்து.
–மதுரை மாறன்
வீடியோவை காண