பிள்ளைகளுக்கு காஸ்ட்லி பைக் வாங்கிக் கொடுத்த பெற்றோர்களே உஷார் !
ரீல்ஸ் மோகத்தில் டூவீலரை வைத்து கெத்து காட்டிய கல்லூரி மாணவர் ஒருவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார். மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து, அதனை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் கெத்து காட்டி வந்திருக்கிறார் திருச்சி புத்தூரைச் சேர்ந்த 24 வயதேயான சீனிரியாஸ்.
தனக்குத்தானே ரெமோ என்று செல்லமாகப் பெயரிட்டுக்கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கும்பலாக நிற்கும் இடங்களில் வலிய சென்று வீலிங் சாகசத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அவரது சமூக வலைத்தள கணக்குகளிலும் பதிவேற்றியிருக்கிறார்.
இந்நிலையில்தான், சீனிரியாஸை கைது செய்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார். கல்லூரி மாணவர் என்பதால், அவனது எதிர்காலம் பாதிக்காத வகையில் இனி இதுபோல் நடந்துகொள்ள கூடாது எச்சரித்தும் அவனது பெற்றோர்களை வரவழைத்து தக்க அறிவுரை கூறியும் வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு கைது செய்து சிறையில் அடைக்காமல் மனிதாபிமான அடிப்படையில் சொந்தப்பிணையில் விடுவித்திருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார்.
திருச்சி சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் கும்பலாக, ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தங்களது கார் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி, நடு ரோட்டில் பட்டாசு வெடித்து அலப்பறையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களையும் கண்டறிந்து, அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறியும் மாணவர்களை எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார், எஸ்.பி.வருண்குமார்.
மாணவர்களுக்கான எச்சரிக்கையாக மட்டுமல்லாமல்; பெற்ற பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பும் என்கிறார் எஸ்.பி.வருண்குமார். போலீசின் எச்சரிக்கையையும் மீறி இதுபோன்ற போக்குகள் தொடர்ந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
பெற்றோர்களே, உஷார் ! ஆசையாய் பெற்ற பிள்ளையின் நச்சரிப்பு தாங்காமல், இலட்சத்தைக் கொட்டி காஸ்ட்லி பைக் வாங்கிக் கொடுத்த பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மீதான கண்காணிப்பை தளர்த்திவிடாதீர்கள். ரீல்ஸ் மோகத்துக்காக ஷேர், லைக்குகளுக்காக ஆசைப்பட்டு கேசு வாங்கி எதிர்காலத்தை தொலைத்து விடாமல் இருப்பதை உறுதிபடுத்துங்கள்.
– ஆதிரன்.