தனியார் பள்ளி மோசடி புகாரில் வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்கள் கைது ! தாளாளர் தலைமறைவு !
பள்ளியில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக விளம்பரங்கள் செய்து, அதன்படி ரூ.12.23 கோடி மோசடி செய்த பள்ளி தாளாளர் மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட வட்டார கல்வி அலுவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் பகுதியில் கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளி ஒன்று கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளி துவங்கும்போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரப்படுத்தினார்கள் எவரெஸ்ட் சாரிடபிள் ட்ரஸ்ட் நிர்வாகி முனி ரத்தினம்.
விளம்பரத்தை பார்த்து பள்ளிக்கு தாளாளர்கள் ஆகும் ஆசையில் பணம் கொழிக்கும் தொழிலாக பார்த்த , நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி ரூ.85 லட்சம், மணி ரூ.23 லட்சம், நாகராஜ் ரூ.45 லட்சம், சாமுண்டீஸ்வரி தேவி பாலா ரூ.25 லட்சம், சரவணன் ரூ.25 லட்சம், இளங்கோ ரூ.25 லட்சம், ஸ்ரீதர் ரூ.20 லட்சம், ராமசுந்தரம் ரூ.3 கோடியே 25 லட்சம், ராஜம் என்பவர் ரூ.1 கோடியே 75 லட்சம், கஜேந்திரன் ரூ.3 கோடி, சுரேஷ்குமார் ரூ.1 கோடியே 35 லட்சம் என ஆக மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை பங்குத் தொகையாக வசூலித்து கிரீன் பார்க் பள்ளியை கூட்டாக நடத்தி வந்துள்ளனர்.
மேலும், பள்ளியின் பங்குதாரர்களாக இணைந்தவர்களிடம் கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஒப்பந்தம் போட்டுள்ளார் முனிரத்தினம். இதனால், பங்குதாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பங்குதாரர்களில் ஒருவரான, வசந்தகுமார் என்பவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கிரீன் பார்க் பள்ளி நிர்வாகி மீது கடந்த செப்டம்பர் -18 அன்று புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கிரீன் பார்க் பள்ளி தாளாளர் முனிரத்னம் தலைமறைவானார்.
இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் அவரது கணவர் செல்வம் ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீட்டை பெற்று கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சம்பத், மற்றும் ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா அவரது கணவர் செல்வம் ஆகிய மூன்று பேரையும் தர்மபுரி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்னத்தை போலீசார் தேடிவருகின்றனர்.
இப்போது கிரீன் பார்க் பள்ளி என்பதாக அறியப்படும் இந்த பள்ளி இதற்கு முன்னர் எவரெஸ்ட் பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. அப்போதும் இதே போல முனிரத்னம் பங்குதாரர்களை ஏமாற்றிவிட்டார் என்ற புகாரும் தற்போது வெளிவந்திருக்கிறது.
– மணிகண்டன்