திருப்பூர் சக்தி சினிமாஸ் தியேட்டர் அதிபர் சுப்பிரமணிக்குத் தெரியுமா ?
திருப்பூர் சுப்பிரமணிக்குத் தெரியுமா ?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மதுரை அன்புச் செழியன் எப்படி? எந்த ரூட்டில் ஃபைனான்ஸ் செய்கிறார்? அதை எப்படி வசூலிக்கிறார் என்பது கோலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும். இதே ரூட்டில் தான் திருப்பூர் சுப்பிரமணியமும் ஃபைனாஸ் செய்கிறார், வசூலிக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. திருப்பூர் சக்தி சினிமாஸ் தியேட்டர் அதிபரான சுப்பிரமணி.
”சமீபத்தில் ரிலீசான ‘கங்குவா’வைப் பற்றி யூடியூப்பில் மோசமான, விஷமத்தனமான விமர்சனங்கள் பரவியதால் தான் படம் ஃப்ளாப் ஆகிருச்சு. 300 கோடி போட்டு படம் எடுத்த ஞானவேல்ராஜாவின் கதி என்னாவது? எனவே தியேட்டர் உரிமையாளர்கள், பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் பெரிய படங்கள் ரிலீசாகும் போது, பப்ளிக் ரிவியூ எடுப்பதற்கு யூடியூப்பர்களை தியேட்டர் வளாகத்திற்குள்ளோ, அதன் அருகிலோ அனுமதிக்காமல் விரட்டியடிக்க வேண்டும்.
மேலும் கேரளாவைப் போல இங்கும் படம் ரிலீஸாகி ஒரு வாரம் வரை எந்தவிதமான விமர்சனங்களும் வரக்கூடாது என கோர்ட்டில் வழக்குப் போட்டு ஆர்டர் வாங்க வேண்டும்” என ஆவேசமாக பொங்கினார்.
எல்லாம் சரி தான் சுப்பிரமணியண்ணே… நாங்களும் ஒத்துக்குறோம், ஏத்துக்குறோம்ணே… ஆனா விஷமத்தையும் வன்மத்தையும் ஹீரோக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுக்கும் யூடியூப் கூலிப்படைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த கூலிப்படைகளுக்கு தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் லட்சக்கணக்கில் கொட்டி அழுவது உங்களுக்குத் தெரியுமா?
படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் வரைக்கும் விளம்பரம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கப்பம் கட்டும் தயாரிப்பாளர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்தப் படங்கள் ஓடிடியில் ரிலீசாகும் போது அதற்கும் விளம்பரம் கொடுக்கும் கேவலம் உங்களுக்குத் தெரியுமா?
அட இதவிடுங்க.. சுப்பிரமணியண்ணே. படத்தின் டிரெய்லர் ரிலீஸுக்கே லட்சக்கணக்கில் பிடுங்கும் கூலிப்படை யூடியூப்பர்களை உங்களுக்குத் தெரியுமா? இந்த மாதியான கூலிப்படைகளுக்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களில் சரக்குப் பார்ட்டி, அவ்வப்போது ரிலாக்ஸாக இருக்க ரிசார்ட்டுகளில் ‘ஏற்பாடு’ செய்து தரும் தயாரிப்பாளர்கள், ஹீரோக்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த மாதிரியான கூலிப்படைகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்து, பன்னீர் தெளித்து, சந்தனம் தடவி, முதல் மரியாதை கொடுக்கும் ஹீரோக்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அட இதவிடுங்க… ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அயோக்கியத்தனம் உங்களுக்குத் தெரியுமா? ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தைப் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த ஞானவேல்ராஜாவின் மட்டரகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ‘தங்கலான்’ பட ரிலீசின் போதும் ரிலீசுக்குப் பிறகும் ஞானவேல்ராஜவும் அவரது கூட்டாளியான தனஞ்செயனும் பண்ணிய தில்லுமுல்லு—திருகுஜால வேலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஞானவேல்ராஜா
300 கோடி, 400 கோடில எடுத்த படங்களை விமர்சிக்கலாமா? என கொதித்து கொந்தளிக்கிறீர்களே… ஆயிரம் கோடில எடுத்தாலும் படம் கேவலமா இருந்தா மக்கள் காறித்துப்பத்தான் செய்வார்கள். என்ன தான் கூலிப்படை யூடியூப்பர்கள், சொம்பு தூக்கினாலும் மக்கள் விபூதி அடித்துவிடுவார்கள்னு உங்களுக்குத் தெரியுமா?
அட இதவிடுங்க…. 6 கோடி 7 கோடில நல்ல கண்டெண்டும் எண்டெர்டெய்மெண்ட் மெட்டீரியலுடனும் படம் எடுத்துவிட்டு, அதை ரிலீஸ் பண்ண முடியாமல் தெருக்கோடியில் நின்னு புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ”பணம் கட்றேன், ஒரு ஷோவாவது கொடுங்க” என கெஞ்சிக் கதறியும் மனம் இரங்காத தியேட்டர் ஓனர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் ஓனர் தானேங்கிறாவது உங்களுக்குத் தெரியுமா?
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நீங்க ‘ஆக்ட்’ குடுக்குறதாவது உங்களுக்குத் தெரியுமா?
அதெல்லாம் தெரியும்ணு எங்களுக்கும் தெரியும்ணே… நன்றி வணக்கம்ணே…
— மதுரை மாறன்.