அரசுக்கு சொந்தமான காலி வீட்டுமனையை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பணை செய்த மோசடி கும்பல் கைது !
மதுரை வீட்டு வசதி வாரிய பிரிவிற்குட்பட்ட கூடல் புதூர் வீட்டுமனை திட்டம் கள ஆய்வு செய்வதற்காக தன்னிறைவு வீட்டுமனை திட்ட பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் ரங்கநாதன் தலைமையில் பணியாளர்களுடன் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது,
எதிர்கால பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட நிலத்தில் தனியாரால் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு இருந்ததால் கட்டப்பட்ட சொத்துக்கு இணையதளத்தில் வில்லங்கச் சான்று பார்வையிட்டதாகவும் அதில் மதுரை வீட்டு வசதி பிரிவுக்கு சொந்தமான நான்கு மனை காலியிடங்கள் மீது போலியான ஆவணங்களை தயாரித்து விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் போலியான ஆவணங்களை தயார் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
இப்புகாரை விசாரிக்குமாறு மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு 3 க்குமாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு 3 உதவி ஆணையர் சுப்பையா தலைமையில் போலீசார் விரைந்து சென்று அந்த இடத்தை பயன்பாட்டில் வைத்துள்ள உரிமையாளர்கள் ஆனையூர்ஜாபர் அலி , ஆலங்குளம் முனியாண்டி , ஜாகிர் உசேன், ஆகிய மூவரை விசாரணை செய்ததில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கொடுக்கப்பட வேண்டிய பத்திரத்தை போலியாக அவர்களே தயார் செய்து மற்றவர்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, மோசடி குற்றத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்து சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் ரங்க நாதனை எல்லீஸ் நகரில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்தோம். “நான் மதுரை அலுவலகத்தில் செயற்பொறியாளராக நான்பதவி ஏற்று ஒரு வருடம் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல் நகர், அனுப்பானடி, அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மாதந்தோறும் காலியிடங்களை பார்வையிடுவது வழக்கம்.
அப்படித்தான் கூடல் நகர் பகுதியில் காலி இடத்தை பார்வையிட சென்ற சமயத்தில், வீடு கட்டி இருப்பதை அறிந்து அந்த வீட்டின் உரிமையாளரை எங்களது சக அதிகாரிகள் விசாரித்ததில் நான் முறையாக அனுமதி பெற்று தான் கட்டியுள்ளேன் என மதுரை மாநகராட்சி குழாய் சாக்கடை, வீட்டு வரி, மின்சாரம் மற்றும் வங்கி கடன் ஆகியவற்றை காண்பித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த வீட்டின் (EC) சர்வே எண்ணை வைத்து வில்லங்கச் சான்றிதழ் போட்டு பார்த்த போது தான் தெரிந்தது அது அரசுக்கு சொந்தமான இடம் என்று. உடனடியாக அருகில் உள்ள மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் கொடுத்ததும் உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளரை அழைத்து விசாரித்த போது, அவர் ஏற்கனவே ஒருவரிடம் ஏமாந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதன் பெயரில் காவல்துறையினர் பொய்யான ரசீது மற்றும் பத்திரங்கள் பதிவு செய்து கொடுத்ததாக மூவரை கைது செய்திருக்கிறார்கள்.” என்றார்.
— ஷாகுல் படங்கள்: அனந்தன்.