நெல்லை மணிமுத்தாறு பகுதி மக்களை திகிலில் ஆழ்த்தி வரும் சிறுத்தை !
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை, சிறுத்தைகள் தாக்கியதில் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மணிமுத்தாறு பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள், கரடி உள்ளிட்ட விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி.கே.புரம் அருகே உள்ள வேம்பையாபுரம் பகுதியில் கூண்டு வைத்து இரண்டு சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு வனத்துறையினர் விட்டனர்.
இந்த நிலையில் நேற்று வேம்பையாபுரம் அருகே நாயை சிறுத்தை தாக்கிக் கொன்றதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்று மணிமுத்தாறு அணை அருகே உள்ள மேய்ச்சல் பகுதியில் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கே வந்த சிறுத்தை ஆடுகளை தாக்கி இரத்தத்தை குடித்து உயிர் இழக்க செய்துள்ளது. மேய்ச்சலில் ஈடுபட்ட நபர்கள் இதனை தங்கள் செல்போன் மூலமாக படம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரங்களில் கிராமப் பகுதிக்குள் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வந்து ஆடு, நாய் உள்ளிட்டவர்களை தாக்குவது வழக்கமான நிகழ்வுகளாக இருக்கும் நிலையில், தற்போது பகல் நேரத்தில் மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளை தாக்கி உள்ள சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் அப்பகுதியில் நடமாடவே பொதுமக்கள் அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— மணிபாரதி.