போச்சம்பள்ளியை கலக்கும் 3-ஆம் நம்பர் லாட்டரி ! அங்குசம் நேரடி விசிட் !
தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கள்ளச்சந்தையில் லாட்டரி பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. ஆன்லைன் லாட்டரி, 3-ஆம் நம்பர் லாட்டரி, காட்டன் சூதாட்டம் என விதவிதமான பெயர்களில் இந்த லாட்டரி பிசினஸ் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் ஓலா பைக் , சூ, மற்றும் காகித தயாரிப்பு போன்ற ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு பணிபுரியும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர், போச்சம்பள்ளி நகர் , புளியம்பட்டி , மத்தூர், போன்ற பகுதிகளில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்களை குறி வைத்து இதுபோன்ற கள்ள லாட்டரி பிசினஸ் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.
போச்சம்பள்ளியில் மட்டுமே நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் 3-ஆம் நெம்பர் லாட்டரி சூதாட்டத்தில் வசூலாகிறது என்கிறார்கள். இதற்காகவே, 30-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களுக்கு, முப்பது ரூபாய் கொடுத்து ஒரு 3-ஆம் நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கினால், 3-ரூபாய் கமிஷனாக கிடைக்கிறது.
3-ஆம் நெம்பர் லாட்டரி என்பது மூன்று இலக்க எண்ணை வைத்து நடத்தப்படும் சூதாட்டம். 100 தொடங்கி 999 வரையில் நீங்கள் எந்த ஒரு எண்ணையும் தேர்ந்து எடுத்துக் கொள்ள முடியும். ஒரு எண்ணுக்கு முப்பது ரூபாய். அந்த எண்ணிற்கு பரிசு விழுந்தால், ஆயிரம் ரூபாய். இதுதான் விதி.
இதில் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளும் உண்டு. அதாவது, மிகவும் ராசியான எண் என்பதாக, 678 என்பதை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வெறும் முப்பது ரூபாய்தான். அப்படியே அந்த மூன்று எண்களையும் முறையே ABC என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது விருப்பத்திற்கேற்ப, AB, AC, BC என்ற காம்பினேஷனிலும் பணம் கட்டலாம். உதாரணமாக, 678 என்ற எண்ணிற்கு, AB என்றால்– 67, AC என்றால் – 68, BC என்றால் – 78 இதுபோன்று தேர்வு செய்து கொள்ள ஒரு எண்ணிற்கு ஐம்பது ரூபாய். இதுபோல, ஒவ்வொரு வரிசையிலும் நான்கு எண்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதன் நன்மை என்னவென்றால், உதாரணத்திற்கு நீங்கள் தேர்வு செய்த எண் 678. பரிசு விழுந்த எண் 780 என்று வைத்துக் கொள்வோம். முதலில் தேர்வு செய்த எண் தோற்றதாகிவிடும். ஆனாலும், BC காம்பினேஷனில் நீங்கள் கட்டியிருந்தால், கடைசி இரண்டு எண்கள் 78 என்பதால் உங்களுக்கு அந்த பரிசுத் தொகை கிடைத்துவிடும். இதற்காகவே, எவர் ஒருவரும் வெறுமனே, ஒரே எண்ணை மட்டும் தேர்வு செய்வதில்லை. ஒரு எண்ணை வாங்கியதோடு, AB, AC, BC காம்பினேஷனிலும் வாங்குகிறார்கள். மேலும், ஒரே எண்ணில் பத்துமுறை கூட கட்டலாம். அதற்கேற்ப பரிசுத்தொகையும் அத்தனை மடங்கு கிடைக்கும்.
இந்த வலையில்தான், சாதாரண தொழிலாளர்கள் வந்து விழுகிறார்கள். இவர்களுக்கு சராசரியாக 500-க்கும் அதிகமான கஸ்டமர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். எப்படியும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் பிசினஸ் நடப்பதாகவும் சொல்கிறார்கள்.
நாமும் போச்சம்பள்ளியை வலம் வந்தோம். போச்சம்பள்ளி காவல் நிலையம் எதிரே உள்ள சந்தூர் செல்லும் சாலையில் டீக்கடை ஒன்றில் ஆஜரானோம். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கையில் ஒரு பில் புக்குடன் அமர்ந்திருந்தார். டீ குடிப்பதுபோல வரிசையாக உள்ளே செல்பவர்கள், அவரிடம் பணம் கொடுத்து நம்பர்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த நபரும் பில்லில் எதையோ, எழுதி கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். கையில் டீ கிளாசோடு, அனைத்தையும் நோட்டமிட்டோம், ஆனாலும் நெருங்க முடியவில்லை. ஏற்கெனவே, அறிமுகமானவர்களுக்கு மட்டுமே, அனுமதி.
ஒரு வழியாக, சோர்ஸ் ஒருவரை பிடித்து 3-ஆம் நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் முடிவுக்கும் வந்தோம். தாலுகா அலுவலகம் அருகில் உள்ள குள்ளம்பட்டி ஏரியாவுக்கு சென்றோம். அங்குள்ள சிறிய அலுவலகத்தில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். நாம் அங்கு சென்றிருந்த 10 நிமிடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் நம்பரைச் சொல்லி, பணத்தைக் கட்டி பில்லை வாங்கிச் சென்றார்கள். நாமும் நமது பங்கிற்கு போணி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
போச்சம்பள்ளி – திருப்பத்தூர் சாலையில் உள்ள கனரா வங்கி அருகில் உள்ள ஓர் இடத்திற்கு சென்றோம். பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு அது. இங்கும் அதே கதைதான். வெளியாட்களுக்கு, அறிமுகம் இல்லாத ஆட்களுக்கு அனுமதி இல்லை. தென்னந்தோப்பில் இங்கும் அங்குமாக சிறு சிறு குழுக்களாக கூடி பேசியபடி நின்று கொண்டிருந்தனர். அங்கு ஒருவர் தரையில் விரிப்பைப் போட்டு, கையில் கால்குலேட்டர் பில்புக் சகிதமாக அமர்ந்திருந்தார். சம்பிரதாயமான விசாரணைகளுக்குப்பிறகு, நாம் சொன்ன நெம்பர்களை எழுதிக் கொடுத்தார்.
அவ்வளவு ஏன், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள சாலை ஒன்றிலேயே 3-ஆம் நெம்பர் லாட்டரி கிடைக்கிறது. மேலும், மாரியப்பன் திருமண மண்டபம் அருகில், குள்ளனூரில் உள்ள ஒரு மாந்தோப்பு , மற்றும் புளியம்பட்டி, புலியூர் பஸ் ஸ்டாப், போச்சம்பள்ளி பஸ் நிலையம், வாழைத் தோட்டம் என போச்சம்பள்ளியை சுற்றியே இதுபோன்று பல்வேறு இடங்களில் இந்த 3-ஆம் நெம்பர் லாட்டரி விற்பணை நடைபெறுவதை காண முடிந்தது. இதேபோல, ஊத்தங்கரை சப்டிவிஷனில் உள்ள 6 காவல் நிலைய பகுதிகளிலும் இதே கதைதான் என்கிறார்கள்.
கேரளா லாட்டரி, நாகலாந்து டியர் லாட்டரிகள்தான் இங்கே விற்பணை ஆவதாக சொல்கிறார்கள். டியர் லாட்டரியைப் பொறுத்தமட்டில் காலை 6.00 மணிக்கும் இரவு 8.00 மணிக்கும்; கேரளா லாட்டரியைப் பொறுத்தமட்டில் 3.00 மணிக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இதனை சங்கேத மொழியில் 3 மணி ஆட்டம், 6 மணி ஷோ என்பதாக சினிமா போல பேசிக்கொள்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் கொடுமையே என்னவென்றால் ரிசல்ட் வெளியிடும் முறை மிகவும் ரகசியமாகவே நடக்கிறது. வெற்றிபெற்றவர்கள் யார் என்பது மிக ரகசியமாகவே வைக்கப்படும் என்பதுதான். அதில் நிறைய தில்லுமுல்லுகளும் நடப்பதாகவும் சொல்கிறார்கள். நாளொன்றுக்கு முன்னூறுக்கும் நானூறுக்கும் அவதிப்படும் தொழிலாளர்கள், இதுபோன்ற நபர்களிடம் குறைந்தது நூறு முதல் இருநூறு வரையில் இழந்து வருகிறார்கள் என்றும் சிலர் நாளொன்று ஆயிரம் இரண்டாயிரம் வரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
லோக்கல் போலீசை சரிகட்டித்தான் பிசினஸை நடத்திவருகிறார்கள். புதிய நபர்களை ஆட்டத்தில் சேர்ப்பதில்லை. அப்படியே, சந்தேகப்பட்டு விசாரித்தாலும் டீக்கடைக்கு வந்த கஸ்டமர் போல கடந்து போய்விடுகிறார்கள். போலீசின் ரெய்டில் சிக்கில் கைது செய்யப்பட்டாலும், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டும் வருகிறார்கள் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
போலீசுக்கு தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் திருட்டுத்தனமாக செய்கிறார்களா? என்பதை நாம் ஒரு முன்முடிவாக சொல்ல ஏதுமில்லை என்றபோதிலும், “லோக்கல் ஸ்டேஷனை சரிகட்டிதான், தொழிலை செய்கிறோம்.” என்பதாகவே பகிரங்கமாக சொல்கிறார்கள். பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீசார் கண்டு கொள்வதில்லை என்பதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ் பி தங்கதுரை – யை தொடர்புகொண்டோம். விசயத்தைக் கேட்டுக்கொண்டவர், “ சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த பகுதியில் ரெய்டு நடத்தி சிலரை கைது செய்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
– கா. மணிகண்டன்.