நகராட்சி ஆணையரை கண்டித்து, துறையூரில் கருணாநிதி சிலை முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக சுமார் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இவர்களுக்கு துறையூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் தூய்மை பணிகளை வெயில் மழை என பாராதுவேலை செய்து வருகின்றனர் இவர்களை கண்காணிப்பதற்காக தூய்மை திட்ட மேற்பார்வையாளர்கள் (அனிமேட்டர்ஸ்) எனஒப்பந்த அடிப்படையில்ஆறு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் பிரபு ,சௌமியா என 2 சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்களிடம் (பணி நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும் , தூய்மைப் பணியாளர்கள் சார்ந்துள்ள சமூகத்தைப் பற்றி இழிவாக பேசியும் ,தூய்மை பணியாளர்களில் ஆண் பெண் என இரு பாலரும் பணி செய்து வரும் நிலையில்,அவர்களை தொடர்புபடுத்தி தரக்குறைவாக பேசியதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள், சூப்பர்வைசர்களான பிரபு, செளமியா இருவரையும் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டம் ஒரு கட்டத்தில் மிகவும் தீவிரமடைந்து , தூய்மைப் பணியாளர்களில் 30 பேருக்கும் மேல் புதிய நகராட்சி கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி ஆணையர் ,அனிமேட்டர்ஸ்களான சௌமியா பிரபு ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து பணியிட மாறுதல் செய்யக்கோரி மேலிடத்திற்கு பரிந்துரை செய்த நிலையில் இரண்டு மாதங்களாக பணி நீக்கத்தில் இருந்து வந்த அனிமேட்டர் மேற்பார்வையாளர்களான பிரபு, செளமியா ஆகிய இருவரும் நேற்று துறையூர் நகராட்சியில் அதே பணியில் மீண்டும் பணி அமர்த்தப்பட்டதை கண்ட தூய்மை பணியாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர் .
இந்நிலையில் இன்று மாலை துறையூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதி சிலை முன்பு தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரான சுரேந்திரஷா – வைக் கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தின் போது தங்களை மிகவும் தரக்குறைவாகவும் சாதியைப் பற்றியும் மிகவும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய அனிமேட்டர்ஸ் பிரபு சௌமியா ஆகிய இருவரையும் துறையூர் நகராட்சியில் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்த துறையூர் நகராட்சி ஆணையர் திடீரென நேற்று இருவரையும் அதே பணியில்இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எங்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பாக நகராட்சி ஆணையர் செயல்பட்டுள்ளார் எனவே அவரது செயலை கண்டித்து இருவரையும் துறையூர் நகராட்சியில் பணி செய்ய அனுமதிக்க கூடாது அதுவரை நாங்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் எனக்கூறி , கண்டிக்கின்றோம். கண்டிக்கின்றோம் நகராட்சி ஆணையரைக் கண்டிக்கின்றோம் எனக் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் நகராட்சி பொறியாளர் மகாராஜன் தூய்மைப் பணியாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.அவர்களிடமும் பிரபு சௌமியா ஆகிய இருவரையும் பணியில் இருந்து நீக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் உறுதியாக பேசியதால் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் எடுத்துக் கூறி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி பொறியாளரும் போலீசாரும் உறுதி அளித்ததன் பேரில் தூய்மை பணியாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர் .சுமார் 2 மணி நேரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதி சிலை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் துறையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கடந்த சில வாரங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது