கிருஷ்ணகிரி – தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று பக்தர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகில் உள்ள எட்டியம்பட்டி-லிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இன்று காலை 9 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில், 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள புலியூர் பிரிவு ரோட்டில் (தீரன் சின்னமலை பள்ளி பகுதியில்) பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில், டிரைவர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிகண்டன்.