தமிழக மக்களை நெருங்கிய புதிய ஆபத்து…தடுக்க  ‘மனசு’ இல்லாத தமிழ்நாடு அரசு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக மக்களை நெருங்கிய புதிய ஆபத்து…தடுக்க  ‘மனசு’ இல்லாத தமிழ்நாடு அரசு !

இப்படியொரு பேராபத்து இருக்கு. ஆனா, தமிழ்நாடு அரசு இதை கண்டுக்கவே மாடேங்குதே?! என அதிர்ச்சியூட்டுகிறது  ‘அங்குசம் புலனாய்வு’ இதழுக்கு கிடைத்திருக்கும் பிரத்யேக புள்ளிவிவரத் தகவல்கள்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

குடும்ப வன்முறைகள், குடி, போதைப்பழக்கங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், காதல் கொலைகள், காமக்கொலைகள், காவல் கொலைகள், கெளரவக்கொலைகள், தற்கொலைகள் உள்ளிட்ட வித விதமான கொலைகள் என  சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் செய்திகளை பார்த்து;படித்து  ‘உச்’ கொட்டிவிட்டு மட்டுமே கடந்து செல்கிறீர்களா? இதற்கெல்லாம், பின்னணிக் காரணமாக மறைந்து இருப்பது இந்த ‘மூன்றாவது  நலம்’ தான். அந்த நலத்தை பாதுகாத்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்துதான். ஆனால், பணக்காரர்களால் மட்டுமே அந்த பேராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏழைகளுக்கோ, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுபோல்தான் அது. ஆனால், மக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பாததால், மக்களுக்கும் இதுகுறித்து தெரியாமல் இருப்பதால், தகுதியான ஆட்களை தேர்ந்தெடுத்துவிட்டு 2 வருடங்களாக நியமிக்காமல் காலம் தாழ்த்திவிட்டு, தகுதியற்ற ஆட்களை நியமிப்பது, புதிய ஆட்களை உருவாக்காமல் இருப்பது என பேராபத்தை தடுக்காத அரசின் அலட்சியத்தை ஆதாரங்களுடன் தெரிந்துகொள்வதற்கு முன்,  ‘மூன்றாவது நலம்’ குறித்து அறிந்துகொள்வோம்.

அதென்ன மூன்றாவது நலம்?

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உடல்நலம், மனநலம் என்றால் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், மூன்றாவதாக ஒரு நலம் இருக்கிறது.  மனநலத்தோடு ஒட்டிப்பிறந்து; மறைந்திருந்து தாக்கும் மர்ம நலம். அதுதான்,  ‘உளவியல் நலம்’. அதாவது, உடல் ரீதியான பாதிப்புகளால் ஏற்படும் மனநல பாதிப்புகளுக்கு டாக்டரிடம் அழைத்துசென்று மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் கொடுத்து குணப்படுத்தி விடலாம். ஆனால், சமூக காரணங்களால் ஏற்படும் மனநல, உளவியல் பிரச்சனைகளுக்கு யாரிடம் செல்வது?  இதுதான், சமூகத்தில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அட! இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று யோசித்துவிட்டு கடந்து சென்றால் நமக்குள்ளோ, நமது குடும்பத்தினருக்குள்ளோ, நமது அக்கம்பக்கத்தினருக்குள்ளோ, நமது உறவினர்களுக்குள்ளோ ஒளிந்திருக்கும் அந்த மர்மம்… அதனால் ஏற்படும் ஆபத்துகள் நமக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விடும். போலி சாமியார்கள், மந்திரவாதிகளைத் தேடி அலைந்துகொண்டிருப்போம். அதுமட்டுமல்ல, போலிகளிடம் சிக்கி பணத்தை இழப்பதோடு, வாழ்க்கையையும் இழக்கும் அபாயமும் ஏற்படலாம். ஏனேனில், அரசுத்துறையிலேயே பல போலிகள், தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல். மனநல மருத்துவர் யார்? உளவியலாளர் யார்? மருத்துவ உளவியல் நிபுணர் யார்? அவர்களுடைய தகுதிகள், அவர்களுக்கு வகுக்கப்பட்ட விதிமுறைகள் என்ன என்பதை அறிந்துகொண்டால்தான், மனநல மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு நாம் தேடி செல்லும் நபர் உண்மையானவரா? போலியானவரா? என்பதை கண்டறிய முடியும்.

மனநல மருத்துவர் யார்? உளவியலாளர் யார்? மருத்துவ உளவியல் நிபுணர் யார்?

மனநல மருத்துவர்கள்: எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு, எம்.டி. மனநல மருத்துவம்  3 வருடங்கள் படித்தவர்கள் சைக்கியாட்ரிஸ்ட்  ( Psychiatrist)எனப்படும் மனநல மருத்துவர்கள். இவர்கள், உடல் ரீதியாக ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கு மாத்திரைகள், மருந்து(ஊசி) மூலம் சிகிச்சை அளிப்பார்கள். இவர்கள்,  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, லைசென்ஸ் பெற்றிருப்பார்கள்.

அதுவே, சைக்காலஜிஸ்ட் (Psychologist)எனப்படும் உளவியலாளர்கள், க்ளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் (Clinical Psychologist) என இரண்டு வகையான உளவியலாளர்கள் உள்ளார்கள். இவர்கள் மாத்திரைகள், மருந்துகள்(ஊசி) கொடுத்து சிகிச்சை அளிப்பதில்லை; அப்படி சிகிச்சை அளிக்கவும் கூடாது.

மூன்றாவது நலம்
மூன்றாவது நலம்

உளவியலாளர்கள்:

பி.எஸ்சி சைக்காலஜி (B.Sc. Psychology) 3 வருடங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படித்து, எம்.எஸ்சி சைக்காலஜி (M.Sc. Psychology) 2 வருடங்கள் நேரடியாக கல்லூரி சென்று என 5 வருடங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படித்திருக்கவேண்டும். இவர்கள் உளவியலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், National Commission for Allied and Healthcare Professions (NCAHP) Act சட்டத்தின்படி, சமூக மற்றும் குணநல அறிவியல் மருத்துவ துறையினர் ஆவார்கள்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, துணை மற்றும் சுகாதாரத் தொழில்முறைகளுக்கான தேசிய ஆணையத்தில் (National Commission for Allied and Healthcare Professions-NCAHP) பதிவுசெய்து அதற்கான பதிவு எண் மற்றும் லைசென்ஸ் பெற்றிருக்கவேண்டும். இவர்கள், வாழ்வியல் மேம்பாடு, தன்னபிக்கை பயிற்சிகள் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் (https://ahpr.abdm.gov.in/) என்கிற வெப்சைட் லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவ உளவியல் நிபுணர்கள்:

பி.எஸ்சி சைக்காலஜி (B.Sc. Psychology) 3 வருடங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படித்து, எம்.எஸ்சி சைக்காலஜி (M.Sc. Psychology) 2 வருடங்கள் நேரடியாக கல்லூரி சென்று படித்தபிறகு, எம்.ஃபில் க்ளினிகல் சைக்காலஜி படிப்பை ( M.Phil. Clinical Psychology) 2 வருடங்கள்  ‘மருத்துவக் கல்லூரியில்’ நேரடியாகச் சென்று என 7 வருடங்கள் படித்தவர்கள்தான் கிளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர் அல்லது மருத்துவ மனநல நிபுணர். இவர்கள், மத்திய அரசின் Rehabilitation Council of India எனப்படும் இந்திய மறுவாழ்வு ஆணையத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். மேலும், சென்னை அயனாவரத்திலுள்ள தமிழ்நாடு அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் தலைமையிலான மாநில மனநல ஆணையத்திலும் (Tamil Nadu State Mental Health Authority) பதிவு செய்திருக்கவேண்டும்.  இவர்கள், மருத்துவ மனநல ஆலோசகர்கள், மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மருத்துவ உளவியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான், அரசின் காதாரத்துறை திட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் என்பதை (mental health care act 2018) மனநலப் பாதுகாப்பு சட்டம் தெளிவாக சொல்கிறது. காரணம், மனநல மருத்துவர்கள், மருத்துவ உளவியல் நிபுணர்கள், மனநல சமூகப்பணியாளர்கள், மனநல செவிலியர்கள், இந்திய மருத்துவத்தில் எம்.டி. சைக்யாட்ரி முடித்த ஆயுஷ் மருத்துவர்கள் என 5 வகையினரைத்தான் மனநலப் பணியாளர்கள் என மனநல பாதுகாப்பு சட்டம் அங்கீகரிக்கிறது.

இவர்கள் பயம்-பதட்ட நோய், மனச்சோர்வு, ஓ.சி.டி. எனப்படும் எண்ண சுழற்சி நோய், மது-போதை அடிமை நோய்கள், இணையதள அடிமை பிரச்சனைகள் உள்ளிட்ட மருத்துவ மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் தெரபிகள் வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு https://rehabcouncil.nic.in/ என்கிற வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும்.

மூன்றாவது நலம்
மூன்றாவது நலம்

தமிழ்நாடு அரசின் அலட்சியம்-1:

தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து பதிவு எண்/லைசென்ஸ் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் வழக்கறிஞர் என நீதிமன்றத்துக்கு சென்று வாதாட முடியும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து பதிவு எண்/ லைசென்ஸ் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு டாக்டர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். இவர்கள் எல்லாம், ஆணையத்தில் பதிவு செய்து லைசென்ஸ் பெறாமல், பணியை செய்தால் எப்படி குற்றமோ அப்படித்தான், உளவியலாளர்களோ, மருத்துவ உளவியல் நிபுணர்களோ அவரவர்களுக்கான ஆணையத்தில் பதிவு செய்யாமல் ஆலோசனை வழங்குவது சட்டப்படி குற்றம். ஆனால், இந்த சட்டங்கள் முழுமையாக அமல் படுத்தப்படாததால், ஆலோசகர்களுக்கே இன்னும் இதுகுறித்த விழிப்புணர்வு வரவில்லை.  இதை, கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழ்நாடு அரசின்  ‘மாநில மனநல ஆணையம்’ (Tamil Nadu State Mental Health Authority)கண்டும் காணாமல் அலட்சியமாக உள்ளது.  மருத்துவ உளவியல் நிபுணர் அல்லது மருத்துவ மனநல நிபுணர்கள் மாநில நல ஆணையத்தில் பதிவு செய்யவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டும் பலர் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாதவர்களை ஆணையம் கண்டுகொள்வதில்லை. கேரளா, ஆந்திரா போன்ற மாநில மன நல ஆணையங்கள் பதிவு செய்வதோடு, அவர்களுக்கு லைசென்ஸ் மற்றும் ஐ.டிண்டி கார்ட் வழங்கி அங்கீகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு மாநில மனநல ஆணையமோ தங்களிடம் பதிவு செய்யவேண்டும் என்று பேருக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு சைலண்ட் மோடுக்கு போய்விடுகிறது.

அலட்சியம்-2:

டி.எம்.ஹெச்.பி. தமிழ்நாடு அரசின் மாவட்ட மனநலத்திட்டம் (District Mental Health Programme), டி.இ.ஐ.சி எனப்படும் மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையம் (District Early Intervention Centre), மது போதை மீட்பு மறுவாழ்வு மையம் (Alcohol De-addiction Centre), இ.சி.ஆர்.சி. எனப்படும் ஆதரவற்ற- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல சிகிச்சை மையம் (Emergency Care and Recovery Centre)உள்ளிட்ட அரசின் மையங்களில் பணிகள் உருவாக்கப்பட்டதே  ‘மருத்துவ உளவியல் நிபுணர்’களுக்குத்தான். மற்ற மாநிலங்களில் இந்த பணியிடங்களில் மருத்துவ உளவியல் நிபுணர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 60,000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய்வரை ‘மருத்துவ உளவியல் நிபுணர்’களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதால் மக்கள் நலனில் அக்கறையில்லாத தமிழ்நாடு அரசோ,  மனநல பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக வெறும்  ‘உளவியலாளர்கள்’-ஐ 18,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் சம்பளத்துக்கு நியமித்துவிட்டார்கள். அப்படி, நியமிக்கப்பட்ட உளவியலாளர்களையாவது தகுதியானவர்களாக நியமித்தார்களா? என்பதுதான் அடுத்த கேள்வி.

அலட்சியம்-3:

பி.எஸ்சி சைக்காலஜி 3 வருடங்கள், எம்எஸ்.சி சைக்காலஜி 2 வருடங்கள் என 5 வருடங்கள்  நேரடியாக கல்லூரிக்கு சென்று சைக்காலஜி முடித்த உளவியலாளர்களை அரசின் மருத்துவத் திட்டங்களில் நியமிப்பதே மனநல சட்டத்துக்கு எதிரானது. ஏனென்றால், சைக்காலஜி என்பது அகடமிக் கோர்ஸ். அதாவது, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்படும் படிப்புகள். எம்.ஃபில் க்ளினிகல் சைக்காலஜி என்பது மருத்துவக்கல்லூரியில் நடத்தப்படும் புரஃபஷனல் கோர்ஸ். அப்படியிருக்க, டிப்ளோமா இன் ஃபார்மசி முடித்தவர்கள், பி.எட் ஸ்பெஷல் எஜுகேஷன் படித்தவர்கள், டிஸ்டன்ஸ் எஜுகேஷனில், ஓபன் யுனிவர்சிட்டியில் படித்தவர்களைக்கூட இத்திட்டத்தில் நியமித்திருக்கிறார்கள்.

அதுவும், கே.எம்.சி. எனப்படும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை உசிலம்பட்டி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கரூர்,  திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் என டிஸ்டன்ஸ் எஜுகேஷனில் படித்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி, சுமார் 100 க்கு மேற்பட்டோர் எந்தவிதமான முறையான கல்வித்தகுதியோ, துறைசார்ந்த அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் அரசுத்துறையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. இதையெல்லாம், அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு மாநில மனநல ஆணையத்துக்குத்தான் உள்ளது. ஆனால், இதன் தலைவர் மாலையப்பன் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதுவரை தொடர்பான மீட்டிங்குகள் போடுகிறார்களா? இதுகுறித்து ஆலோசித்து அரசுக்கு பரிந்துரை செய்கிறார்களா? என்பதே கேள்விக்குறிதான். உண்மையை சொல்லவேண்டும் என்றால் பெயருக்குத்தான் ஆணையம் உள்ளது.

National Institute of Mental Health and Neuro Sciences
National Institute of Mental Health and Neuro Sciences

அலட்சியம்-4:

ஆரம்பத்தில் கிளினிகல் சைக்காலஜிஸ்ட்கள் எனப்படும்  ‘மருத்துவ உளவியல் நிபுணர்கள்’ பற்றாக்குறையாக இருக்கிறது என காரணம் சொல்லி வெறும்  உளவியலாளர்களை 3 மாதங்கள் பெங்களூருவிலுள்ள நிம்ஹான்ஸ் (National Institute of Mental Health and Neuro Sciences)-ல் பயிற்சி அளித்து அரசுத்துறையில் பணியமர்த்தினார்கள். ஆனால், இப்படி பெங்களூருவிற்கு அரசு செலவில் அழைத்துசென்று பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் 99 சதவீதம் பேர் இப்போது அரசுப்பணியில் இல்லை. அவர்கள், அரசு செலவில் பயிற்சி எடுத்துக்கொண்டு நிம்ஹான்ஸில் ( NIMHANS)பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் என பெருமையாக சொல்லிக்கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால், ஏழைகளின் மனநல மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அலட்சியம்-5:

தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு குறைந்தபட்சம் 200 மருத்துவ உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், 11 பேர்தான் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது,

சென்னை அரசு மனநல காப்பகம்-3, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை-1, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1, மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை- 1, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை-1  ஆகிய மருத்துவமனைகளில் மட்டுமே 11 தகுதியான மருத்துவ உளவியல் நிபுணர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு மருத்துவ உளவியல் நிபுணர் என 32 பணி இடங்களுக்கான நேர்காணல் நடத்தி, 24 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால்,  அறிவிப்பு வெளியிட்டு 2 வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.

அதாவது, 15-11-2022 அன்று மருத்துவ உளவியல் நிபுணர்களுக்கான பணியிடம் குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. 14-03-2023 அன்று எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டது. 15-09-2023 அன்று நேர்காணல் நடந்தது. 10-10-2023 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழும்பியுள்ளது.

“உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மனநலம், சமூக நலம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது என வரையறுக்கிறது. உலக மக்கள் தொகையில் 1 லிருந்து 2 சதவீதத்தினர் தீவிர மனநோய்களாலும் 15 சதவீதத்தினர் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். போட்டியும் மன அழுத்தமும் நிறைந்த இன்றைய சூழலில் இளம்பருவத்தினர், இளைஞர்கள் மனநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குடி மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்குழப்பம் மனிதர்களை தற்கொலைக்கு இழுத்து செல்கிறது.

மூன்றாவது நலம்
மூன்றாவது நலம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் மூடநம்பிக்கைகள், மனநோய் பற்றிய தவறான அணுகுமுறைகளும் நம்பிக்கைகளும் இன்றைய சூழலிலும் மிக பரவலாக மக்களிடையே காணப்படுகிறது. இதனால், மனநல பாதிப்புகளுக்கு மந்திரம், மாந்தீரிகம், பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படுவதாக மூடநம்பிக்கையால், அறியாமையால், பயத்தால், வெட்கத்தால் உந்தப்படுகிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் மாநில மனநல ஆணையம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 ஆம் தேதி விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கிறது.  இதெல்லாம் தெரிந்தும் மருத்துவ மனநல ஆலோசர்களின் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

இதனால், ஏற்படும் ஆபத்துகள் என்ன?  என சுட்டிக்காட்டி மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறார், பிரபல மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் வி. சுனில்குமார். “குடும்ப வாழ்வியல் மற்றும் சமூகக்காரணங்களால் உளவியல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மனநல ஆலோசனைகள் கிடைப்பதில்லை. இதனால்தான் மந்திரம், மாந்தீரிகம், பில்லி, சூனியம் என தேடி சென்று மூட நம்பிக்கை என்னும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் மனநல ஆலோசர்கள் என்று யார் யாரோ சொல்லிக்கொண்டு தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதனால் ஏழை- எளிய மக்களின் பணம், நேரம் வீணடிக்கப்படுகிறது. அரசு ஒதுக்கும் நிதியும் வீணடிக்கப்படுகிறது. சரியான மனநலத்தில் இருப்பவர்களைக்கூட மனநலம் பாதிக்கப்பட்டதாக தவறான சான்றிதழ்களைக் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுகுறித்து, போலீஸில் புகார் கொடுக்கலாம். ஆனால், போலீஸ்க்காரர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட மனநல ஆலோசகர்களும் தகுதியற்ற, போலியானவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் காவல்துறையில் உள்ளவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை” என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மருத்துவ உளவியல் நிபுணர்களின் பணிகள் என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை பெறுவதற்கான ஐ.க்யூ பரிசோதனைகள், மாணவர்களின் கற்றல் குறைபாடு தொடர்பான உளவியல் பரிசோதனைகள்- அதன்மூலம் அவர்களுக்கு 10 ஆம் தேர்வு எழுத சிறப்பு சலுகை மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெறுவதற்கான பரிசோதனை சான்று அளித்தல், 6 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கோளாறுகளை ஆராய்வதற்கான உளவியல் பரிசோதனைகள், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி என சொல்லப்படும் கூர்நோக்கு இல்ல சிறார்களின் உளவியல் பரிசோதனைகள், மெடிக்கல் போர்டுக்கு வருகிறவர்களுக்கு உளவியல் ரீதியான சான்று அளித்தல், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்கள் மற்றும் போக்சோவில் கைது செய்யப்பட்ட சிறார்கள் குறித்த அவர்களின் அறிவுத்திறன், மனநிலையை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுப்பது, குற்றங்களை செய்த சிறார்களுக்கு பெயில் வழங்குவதற்கு சான்று அளித்தல், மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லையா? என்ற சான்று, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறப்புக்குழந்தைகளின் நிலையை நீதிமன்றங்களில் எடுத்துக் கூறுவது,  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனநல ஆலோசனைகள் வழங்குவது, குடும்ப நல ஆலோசனைகள், பெற்றோர் குழந்தைகளுக்கான ஆலோசனைகள், விபத்தில் தலை அடிபட்டு வரக்கூடிய நோயாளிகள் குணமானபிறகு அவர்களது அறிவுத்திறன் சார்ந்த குறைபாடுகளை அளவிட்டு இன்சூரன்ஸ் பெறுவதற்கு சான்று அளித்தல், கிரிமினல்களின் உளவியல் பாதிப்புகளை  கண்டறிந்து சான்று அளித்தல், குடும்ப நல நீதிமன்றங்களிலிருந்து விவாகரத்து தொடர்பாக வரும் தம்பதியர்களுக்கு சான்று மற்றும் ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மருத்துவ உளவியல் நிபுணர்கள் செய்துவருகிறார்கள். ஆனால், பல இடங்களில் மருத்துவ உளவியல் நிபுணர்களுக்கு பதிலாக வெறும் உளவியலாளர்களே, அதுவும் தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் மேற்கண்டவற்றில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், மருத்துவ உளவியல் நிபுணர்களிடம் கவுன்சிலிங் பெற, ஏழை -எளிய நோயாளிகள் தங்களது ஊரியிலிருந்து தங்களது மாவட்டங்களையேத் தாண்டி அலையவேண்டிய சூழல் உள்ளது.

மூன்றாவது நலம்
மூன்றாவது நலம்

அரசின் அலட்சியத்தால் ஏழைகள், எப்படியெல்லாம் அலைகழிக்கப்படுகிறார்கள்?

உதாரணத்துக்கு… ஏழை எளிய மக்கள் மனநல மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் பெற வேண்டும் என்றால் திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகிறார்கள்.

சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிருந்து மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை.

கோயம்பத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து  சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வரவேண்டிய நிலை.

அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் செல்லவேண்டிய நிலை.

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு சென்று மருத்துவ உளவியல் ஆலோசனைகளை பெறுகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

இதனால், தனியார் மருத்துவ உளவியல் நிபுணர்களிடம் செல்ல பண வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சரியான மன ஆலோசனைகள் கிடைப்பதில்லை. தவறான ஆலோசனைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். நேரம், பொருளாதாரம் எல்லாம் வீணடிக்கப்படுகிறது. அரசுக்கும் பணம் நஷ்டம்.

பெரும்பாலான சிறைகளிலும் ரெகுலரில் படித்த மனநல ஆலோசர்கள் இல்லை. சிறார் கூர்நோக்கு இல்லங்களில் பணிபுரியும் (சமூக நலத்துறை மூலமாக நியமிக்கப்பட்டவர்கள்) தகுதியுள்ளவர்களாக இல்லை. சில இடங்களில் வழக்கறிஞர்களே, மனநல ஆலோசர்களாக மாறிவிடுகிறார்கள். அதன்மூலம், வழக்குகளை எடுத்து வாதாடி, சைடு வருமானம் பார்க்கிறார்கள்.

18 வயதுக்குட்பட்டோர் குற்றங்கள், போக்சோ வழக்குகள்,  அதிகரித்துவருகின்றன. அவர்களுடைய மனநலத்தையும் அளவீடு செய்வதற்கு நீதிமன்றங்கள் மருத்துவ உளவியல் நிபுணர்களிடம்தான் அனுப்புகிறார்கள். பெயில் கொடுப்பதற்கு முன் இவர்களிடம் அனுப்பி, ஒப்பினியன் வாங்கிவிட்டுதான் பெயில் கொடுப்பார்கள். உடல்நலத்துக்கு இன்சூரன்ஸ் எடுப்பதுபோல் மனநலத்துக்கும் இன்சூரன்ஸ் வந்துவிட்டது. இவர்களுக்கு மருத்துவ உளவியல் நிபுணர்கள் சான்றளித்தால்தான் செல்லும். வெறும் மனநல ஆலோசர்களோ, உளவியலாளர்களோ இதற்கு சான்றளிக்கவும் சட்டத்தில் இடமில்லை.

மருத்துவ உளவியல் நிபுணர்கள் ஏன் தேவை?  என்பது குறித்தும் சுட்டிக்காட்டிய டாக்டர் வி. சுனில்குமார் நம்மிடம்,  “லைஃப் ஸ்டைல் எனப்படும் வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன், நரம்பியல் கோளாறுகள் என பல்வேறு உடல் நோய்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வாழ்வியல் மாற்றங்களுக்கு முக்கியக்காரணமே நம் மனதில், உளவியலில் ஏற்படும் சிக்கல்கள்தான். வன்முறைகள், பல விதமான குற்றங்கள் அதிகரிப்பதற்கும் உளவியல் சிக்கல்களே காரணம். டபுள்யூ.ஹெச்.ஓ எனப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, நம்மில் 4 பேரில் ஒருவருக்கு உளவியல் சிக்கல் உள்ளது.

அப்படி, 4 பேரில் பாதிக்கப்பட்ட அந்த ஒரு நபர் யாரை தேடி செல்வது? எங்கு செல்வது? எவ்வளவு பணம் செலவு செய்வது? என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. முதலில், தனக்கு உளவியல் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்வதே பெரிய சிக்கல். அப்படி, உணர்ந்துகொள்கிறவர் மருத்துவ மனநல நிபுணர் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணரைத் தேடி செல்லவேண்டும். வறுமையும் குடும்பச்சூழல்களும் உளவியல் சிக்கல்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் இருக்கும் பகுதியில் மருத்துவ உளவியல் நிபுணர்கள் இருக்கமாட்டார்கள்.

மருத்துவ மனநல நிபுணர் டாக்டர்.வி.சுனில்குமார்
மருத்துவ மனநல நிபுணர் டாக்டர்.வி.சுனில்குமார்

பல கிலோ மீட்டர்கள் தேடி செல்லவேண்டும். இந்தியாவில் ஒரு சராசரி மனிதன், ஒரு மனநல ஆலோசகரை தேடி செல்லவேண்டும் என்றால் 50 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம்வரை பயணிக்க வேண்டியிருக்கிறது. காரணம், மனநல மருத்துவர்களோ, மருத்துவ உளவியல் நிபுணர்களோ , மனநல ஆலோசர்களோ கிராமப்புறங்களில் க்ளினிக் திறப்பதில்லை. பெரும்பாலும் நகர் புறங்களில் மட்டுமே இருக்கிறார்கள். அப்படியே, உளவியல் பாதிக்கப்பட்டவர் பல கிலோ மீட்டர்களை கடந்து, போக்குவரத்து செலவுகள் செய்து தேடிச் சென்றால், வெளி மாவட்டங்களில் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் கன்சல்டிங் ஃபீஸுக்கே செலவழிக்கவேண்டும். அதுவே, சென்னையாக இருந்தால் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய்வரை செலவழிக்கவேண்டியிருக்கும். சென்னையிலுள்ள ஏழை- எளிய மக்களின் நிலையை யோசித்துப்பாருங்கள். மனநல சிகிச்சைக்கு மருத்துவ ஆலோசகரைத் தேடிச் செல்லவே, மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அப்படியென்றால், கடைகோடி ஏழை மக்களுக்கு மனநல ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அதனால், மூடநம்பிக்கைக்கு ஆளாகி சாமியார்களையும், மந்திரவாதிகளையும் தேடிச்செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

மூன்றாவது நலம்
மூன்றாவது நலம்

ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அரசு சொல்லும். ஆனால், மனநல சிகிச்சை வேறு, மனநல கவுன்சிலிங் வேறு. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அணுகவேண்டும் என்கிற விழிப்புணர்வு ஓரளவுக்கு மக்களுக்கு தெரியும். அவர்கள் பெரும்பாலும் காப்பகங்களில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால், மனநல ஆலோசனை தேவைப்படக்கூடியவர்களை, பொதுமக்கள் கண்டுபிடிப்பதே சவாலானது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவருக்கே தெரியாது. அவரால் ஒரு பிரச்சனையோ, வன்முறையோ, குற்றமோ நிகழ்ந்தபிறகுதான் ஆராய்ந்து பார்த்து அறியமுடியும். அதனால், மனநல ஆலோசனை என்பது தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சனை அல்ல. சமூகத்தின் பிரச்சனை. வன்முறைகளும் குற்றங்களும் அதிகரிக்கும். அதனால், அதை கண்டுகொள்ளாமல் விடுவது சமூகத்தின் பேரழிவு” என எச்சரிக்கிறார் அவர்.

உளவியல் பாதிப்பை கண்டறிவது எப்படி?

குடும்ப வன்முறைகள், குடிநோய், போதைப்பழக்கங்கள், சூதாட்டங்கள், செல்ஃபோன் அடிக்‌ஷன், சந்தேகம், தன்னம்பிக்கை இன்மை, கற்றல் குறைபாடு, கொலைகள், தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இதெல்லாம் ஒருவருக்குள் இருந்தாலே, அவருக்கு உளவியல் சிக்கல் இருப்பதை உணர்ந்துகொள்ளலாம். உளவியல் சிக்கல்களை ஆலோசனைகள், தெரபிகள் மூலம் குணப்படுத்தாமல் போனால் அதுவே நாளடைவில் மனநல பாதிப்பாக மாறிவிடும். மனநல பதிப்புகளால் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. மேலும் உளவியல் பாதிப்புள்ளவர்களுக்கு வேலைக்கு செல்வதில் நாட்டம் இருக்காது. இதனால், குடும்பங்களில் வறுமையும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது நாட்டின் பொருளாதாரத்தையே சரிய வைத்துவிடும். குற்றங்களும் பெருகிவிடும்.

பள்ளி -கல்லூரிகளில் போதை பழக்கத்தை ஒழிப்போம் என கோடிகளை ஒதுக்கி பிரச்சாரம் செய்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், உண்மையிலேயே ஒழிக்க மருத்துவ உளவியல் நிபுணர்களை நியமிக்காமல், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்? ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனையிலும் மருத்துவ உளவியல் நிபுணர்களை நியமிக்கவேண்டும்.

அவர்களால் எப்படி தடுக்கமுடியும்?

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூகநலத்துறையுடன் இணைந்து யார் யாருக்கெல்லாம் உளவியல் சிக்கல்கள் உள்ளன? எந்தெந்த மாணவருக்கு குடி-போதை- வன்முறை பாதிப்புகள் உள்ளன என்பதை கண்டறியமுடியும். அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினால் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கமுடியும். பிறந்த குழந்தையின் எடை, வளர்ச்சி குறித்து பல மாதங்கள் கண்காணிக்கிறது சுகாதாரத்துறை. அதற்கான, திட்டங்களை வகுக்கிறது அரசு. அந்த கண்காணிப்பில் மனநலம், உளவியல் நலம் குறித்து கண்காணிப்பதில்லை. ஒரு மாணவனின் வருகை குறைகிறது, மதிப்பெண் குறைகிறது, வன்முறையில் ஈடுபடுகிறார், வித்தியாசமாக செயல்படுகிறார் என்றால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து கண்டறியமுடியும். அவரது பெற்றோரின் குடும்பச் சிக்கல், குடும்பச்சூழல் அவரை பாதிக்கிறதா என்பதையும் கண்டறிந்து பெற்றோருக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கலாம். குற்றங்கள் நடந்தபிறகு தண்டிப்பதற்கான சட்டங்களும் வழிமுறைகளும் இருக்கின்றனவே தவிர, முன்கூட்டியே தடுப்பதற்கான திட்டமிடல்களையும் வழிமுறைகளையும் அரசு கையாள வேண்டும்.

வருடத்துக்கு 10 சீட்கள்தான்:

மருத்துவ உளவியல் நிபுணர் அல்லது மருத்துவ மனநல நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஆனால், சென்னையிலுள்ள எம்.எம்சி. அதாவது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 12 மருத்துவ மனநல ஆலோசகர்களுக்கான மருத்துவ சீட்கள்தான் உள்ளன. அப்படியென்றால், வருடத்துக்கு 10 மருத்துவ உளவியல் நிபுணர்களைத்தான் தமிழ்நாடு அரசு உருவாக்குகிறது. இதனால் கோயம்பத்தூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாதிரியான மாவட்டங்களில் மருத்துவ உளவியல் நிபுணர்களே இல்லை. அரசாங்கத்தாலும் நியமிக்கப்படவில்லை. ஒரு அரசு மருத்துவக்கல்லூரிக்கு 10 சீட் ஒதுக்கினாலே வருடத்துக்கு 350 க்குமேற்பட்ட மருத்துவ உளவியல் நிபுணர்களை தமிழ்நாடு அரசால் உருவாக்கமுடியும். இதனால், அரசுக்கு லாபம்தானே தவிர, நஷ்டம் இல்லை.

தேவை 200 மருத்துவ உளவியல் நிபுணர்கள்… ஆனால் இருப்பதோ 11 தான்…

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு குறைந்தபட்சம் 200 மருத்துவ உளவியல் நிபுணர்கள் பணியாற்றவேண்டும். ஆனால், 11 பேர்தான் உள்ளார்கள்.  தமிழ்நாட்டில் பி.எஸ்சி மற்றும் எம்.எஸ்சி சைக்காலஜி படிப்புகள் இருக்கும் 100 க்குமேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. வருடத்துக்கு 4,000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அப்படி, படித்துவிட்டு வரும் மாணவர்கள் மருத்துவ உளவியல் நிபுணர்கள் ஆகவேண்டும் என,  அரசுக் கல்லூரியில் எம்.ஃபில் மெடிக்கல் சைக்காலஜி சேர முயற்சித்தால் வெறும் 12 சீட்கள்தான் உள்ளன. எப்படி அத்தனை மாணவர்களும் சேரமுடியும்? இதனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் டொனேஷன் கொடுத்து சேரவேண்டியிருப்பதோடு, வருடத்துக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய்வரை கல்விக்கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. அதாவது, இரண்டு வருடங்களுக்கு 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்வரை கல்விக்கட்டணம் மட்டுமே செலுத்தவேண்டியிருக்கிறது. இப்படியிருந்தால், இவ்வளவு பணம் கொடுத்து படித்துவிட்டு வருகிறவர்கள் மக்களிடம்தானே அதை சம்பாதிக்கப்பார்ப்பார்கள்? எப்படி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்யும் மருத்துவ உளவியல் நிபுணர்களை உருவாக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் டாக்டர் வி.சுனில்குமார். 

இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் மாநில மனநல ஆணையத்தின் தலைவர் டாக்டர் மாலையப்பனை தொடர்புகொண்டு கேட்டபோது, “தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்து ஃபைனல் லிஸ்ட் வரணும். விரைவில் வந்துவிடும். மருத்துவ உளவியல் நிபுணர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றவரிடம், தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆண்டிற்கு 12 மருத்துவ உளவியல் நிபுணர்களுக்கான சீட்கள்தான் உள்ளன. இப்படியிருந்தால், எப்படி தகுதிவாய்ந்த மருத்துவ உளவியல் நிபுணர்களை உருவாக்கமுடியும்? என்று கேட்டபோது, சென்னை எம்.எம்.சியை தொடர்ந்து மதுரை மருத்துவக்கல்லூரியிலும் க்ள்னிகல் சைக்காலஜிஸ்ட்க்கான படிப்பு ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான, முன்னெடுப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

டாக்டர் மாலையப்பன்- மாநில மனநல ஆணையத் தலைவர்
டாக்டர் மாலையப்பன்- மாநில மனநல ஆணையத் தலைவர்

சைக்காலஜிஸ்ட்கள் க்ளினிகல் சைக்காலஜிஸ்ட்கள் அவரவர்களுக்கான ஆணையங்களில் பதிவு செய்யாமல் பணிகளை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே ஏன்? என்று நாம் கேட்டபோது, “க்ளினிகல் சைக்காலஜிஸ்ட்கள் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் செய்யும் பணிகளைப்போல சைக்காலஜிஸ்ட்கள் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது. அதேநேரத்தில், சைக்காலஜிஸ்ட்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் வாங்கிய பட்டங்கள் இருந்தாலே போதும். அவர்கள் பணியை தொடரலாம்” என்றவரிடம்,   National Commission for Allied and Healthcare Professions என்கிற ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டுமல்லவா? என்று நாம் கேட்க, “அதற்கான பதிவு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவர்கள், பதிவு செய்கிறார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியல” என்றவரிடம் சரி, க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் உங்களிடம் பதிவு செய்யாமல் அவர்கள் தங்களது பணியை தொடர்ந்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்டபோது, “கட்டாயம் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்யவேண்டும் என்றோ, செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ சட்டத்தில் இடமில்லை. அப்படி, பதிவு செய்யாதவர்கள் மீது மத்திய அரசின் Rehabilitation Council of India -வுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதுவரை 10 சதவீதம் பேர்தான் மாநில மனநல ஆணையத்தில் பதிவுசெய்துள்ளர்கள்.  மாநிலத்தில் எத்தனை மருத்துவ உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை தெரிந்துகொள்வதற்கு மட்டுமே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது” என்றார் அலட்சியமாக.

அதாவது, மாநிலத்தில் எத்தனை மருத்துவ உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை தெரிந்துகொள்வதற்கு மட்டுமே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது என்றால் மருத்துவ உளவியல் நிபுணர்கள் எப்படி பதிவு செய்வார்கள்? 90 சதவீதம் பேர் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்யவில்லை என்பது ஆணையத்தலைவர் டாக்டர் மாலையப்பனின் வாக்குமூலத்திலிருந்தே தெளிவாக தெரிகிறது. பதிவு செய்யாமல் மன நல மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்கும்போது அதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் புகார் கொடுப்பது? காவல்துறையில் புகார் கொடுத்தால் அவர்களுக்கு இதுகுறித்த அறிதல் இருக்காது. மாநில மன நல ஆணையமும் தங்களிடம் பதிவு பெற்றவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கைவிரித்துவிடும்.

எதற்குமே அதிகாரம் இல்லாத மாநில மனநல ஆணையத்தை தமிழ்நாடு அரசு, எதற்கு வைத்திருக்கவேண்டும்? ‘there is no health without mental health’ என்கிறது உலக சுகாதார மையம். அதாவது, மனநலத்தை மேம்படுத்தாமல் ஆரோக்கியம் இல்லை என்கிறது. அப்படியிருக்க, மருத்துவ மனநல ஆலோசனை மையங்களை உருவாக்கி, தகுதிவாய்ந்த மருத்துவ உளவியல் நிபுணர்களை நியமித்து, கடைகோடி ஏழைத் தமிழனுக்கும் உளவியல் ஆலோசனைகள்/ மனநல ஆலோசனைகள்/ கவுன்சிலிங்குகள் கிடைத்தால்தான் சுகாதாரத்தின் முன்னணி மாநிலம் என்று முழுமையாக பெருமிதம் கொள்ளமுடியும். ஏனென்றால், மனநல பிரச்சனைகள் என்பது வெறும் தனிமனித பிரச்சனை அல்ல. இது, ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை.

சமூக நீதி அரசு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசு என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, மனநலப்பிரச்சனைகளுக்கு மூடநம்பிக்கையால் சாமியார்கள், மந்திரவாதிகளை நோக்கி ஏழை, எளிய மக்கள் செல்வதைத் தடுத்து, தகுதியான மருத்துவ உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமாக வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

– வெற்றிவேந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.