தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது? பரபரப்பான ஸ்கேன் ரிப்போர்ட் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துணைவேந்தர் Vs பதிவாளர் மோதல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது? பரபரப்பான ஸ்கேன் ரிப்போர்ட்

உலகில் மொழிக்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம். இதனை 1981ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர் அப்போதைய தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன். 500 ஏக்கரில் பல்கலைக்கழக வளாகம், 500 ஏக்கரில் குடியிருப்பு வளாகம் என்று அமைந்துள்ளது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

துணைவேந்தர் திருவள்ளுவன்
துணைவேந்தர் திருவள்ளுவன்

இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் (பொ) முனைவர் சங்கர் அவர்களும், பதிவாளர் (பொ) முனைவர் தியாகராஜன் அவர்களும் ஒருவருக்கொருவர் மாறிமாறி பணியிடை நீக்கம் செய்துகொண்டுள்ளனர். புதிய பதிவாளராக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் பதிவாளராகப் பொறுப்பேற்ற முடியாமல் பதிவாளர் அறை பூட்டியிருக்க, காவல்துறை உதவியோடு பதிவாளர் அறை திறக்கப்பட்டு, வெற்றிச்செல்வன் பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அங்குசம் செய்தி இதழ் சிறப்பு செய்தியாளர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது என்பது குறித்து விரிவான செய்திகளை அனுப்பியுள்ளனர். அதன் விவரங்கள் அனைத்தும் அங்குசம் செய்தி இதழ் வாசகர்கள் முன் வைக்கின்றோம்.

இணைப்பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன்
இணைப்பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பாஸ்கரன் இருந்த 2017-18ஆம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேர் நியமிக்கப்பட்டனர். அனைவருக்கும் உரிய கல்வித் தகுதி இல்லை என்றும் இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. தஞ்சை சமூக நல ஆர்வலர் நெடுஞ்செழியன் இந்த விவரங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தார்.

இதன் அடிப்படையில் பணி ஓய்வுக்குப் பின் துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இலஞ்ச ஒழிப்புத் துறையும் விசாரணையை மேற்கொண்டது. 2018ஆம் ஆண்டு துணைவேந்தராக திரு.கோ.பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் தகுதியில்லாமல் நியமனம் செய்யப்பட்ட 40 மீதும் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைக் குழுக்குள் அமைக்கப்பட்டன.

க.சங்கர், சி.தியாகராஜன்
க.சங்கர், சி.தியாகராஜன்

திரு.கோ.பாலசுப்பிரமணியன் பதவி காலம் முடிந்த பின்னர், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய துணைவேந்தராக வி.திருவள்ளுவன் ஆளுநரால் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், இலஞ்ச ஒழிப்புத்துறையால் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட 40 ஆசிரியர்களும் தகுதியற்றவர்கள் என்று அறிக்கை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகுதியில்லாத 40 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ஆளுநரின் அறிவுரையை மீறி, துணைவேந்தர் திருவள்ளுவன், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் 40 பேரும் தகுதிகாண் பருவம் நிறைவடைந்ததன் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்திட சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக தெரிகிறது. இது தொடர்பாக திருவள்ளுவனிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக 2024 அக்டோபர் 16-ம் தேதி, ‘விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்​கூடாது?’ என ஆளுநர் தரப்பிலிருந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் துணைவேந்தர் தரப்பிலிருந்து உரிய பதிலளிக்க​வில்லை என தெரிகிறது. இதனையடுத்து துணைவேந்தர் திருவள்ளுவனை நவம்பர் 20-ஆம் நாள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆளுநர், ஓய்வு​பெற்ற நீதிபதி ஜெயச்​சந்​திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

நீதிபதி ஜெயச்சந்திரன்
நீதிபதி ஜெயச்சந்திரன்

இச்சூழ்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு, மூத்தப் பேராசிரியர் தொழில் மற்றும் நில அறிவியல் துறை சார்ந்த முனைவர் சங்கர்  துணைவேந்தர் (பொறுப்பு) என்ற நிலையில் நியமித்து உத்தரவைப் பிறப்பித்தார். இதன் அடிப்படையில் முனைவர் சங்கர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதிவாளர் பொறுப்பில் உள்ள தியாகராஜனுக்கும் துணைவேந்தருக்கும் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் திருவள்ளுவன் தகுதியில்லாத 40 ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி நிரந்தர ஆணை செல்லத்தக்கது அல்ல என்று துணைவேந்தர்(பொ) சங்கர் கடிதம் எழுதி தெரிவித்துள்ளார். இந்த தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியலில் பதிவாளர் பொறுப்பில் இருந்த முனைவர் தியாகராஜனும் உள்ளார் என்பதால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் பதிவாளராக இருந்த தியாகராஜன் துணைவேந்தர் பொறுப்பில் உள்ள முனைவர் சங்கரை பணிநீக்கம் செய்து, துணைவேந்தர் பொறுப்புக்கு பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் பாரதஜோதி அவர்களை நியமித்து ஆணை வழங்கினார். இந்த ஆணையை பாரதஜோதி ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

தஞ்சாவூர்-தமிழ்ப்-பல்கலைக்கழக
தஞ்சாவூர்-தமிழ்ப்-பல்கலைக்கழக

இதனை அறிந்த துணைவேந்தர் சங்கர், பல்கலைக்கழகத்தின் பொதுஅமைதிக்குப் பதிவாளர் தியாகராஜன் குந்தகம் விளைவிக்கின்றார் என்றும், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு ஜனவரி 8ஆம் நாள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரும் நிலையில், தகுதியற்ற ஆசிரியர் பட்டியலில் பதிவாளர் பொறுப்பில் உள்ள அவரை பணியிலிருந்து நீக்கி, பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் அவர்களைப் பதிவாளராக நியமனம் செய்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 27ஆம் நாள் காலையில் புதிய பதிவாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் தெ.வெற்றிச்செல்வன் பிற்பகல் பதிவாளர் அறைக்குச் சென்றபோது தியாகராஜன் அமர்ந்துகொண்டு, தலைமைச்செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் ஆகியோர் என்னைப் பணியில் நீடிக்க சொல்லி வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளனர் என்பதால் நான்தான் பதிவாளர் என்று இருக்கையை விட்டு எழுந்திருக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தத் தகவல் துணைவேந்தர் சங்கருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் டிசம்பர் 30ஆம் நாள் புதிய பதிவாளராக முனைவர் தெ.வெற்றிச்செல்வன் பொறுப்பேற்பார் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த பதிவாளர் பொறுப்பிலிருந்த தியாகராஜன் பதிவாளர் அறையைப் பூட்டி சாவியைத் தன்வசம் வைத்துகொண்டார்.

டிசம்பர் 30ஆம் நாள் காலை தஞ்சை வல்லம் காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் பதிவாளர் அறை பொறியியல் பிரிவு பணியாளர் ஒருவரால் பூட்டு உடைக்கப்பட்டு, பதிவாளர் அறை திறக்கப்பட்டது. அப்போது தகுதியில்லாமல் பணியில் சேர்ந்ததாகக் கருதப்படும் ஆசிரியர்கள் காவல்துறை ஆய்வாளரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வாளர் பேசும்போது,“தலைமைச்செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் வாய்மொழியாக தியாகராஜனை நீடிக்கச் சொன்றார்கள் என்பதை ஏற்கமுடியாது. எழுத்துப்பூர்வமான உத்தரவு இருக்கின்றதா? இல்லை என்ற நிலையில், நாங்கள் துணைவேந்தர் ஆணையை ஏற்றுதான் செயல்பட முடியும்” என்று கூறியுள்ளார். அறை திறக்கப்பட்ட பின்னர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முறைப்படி பதிவாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார்.

tamil university thanjavur
tamil university thanjavur

முன்னாள் பதிவாளர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது,“துணைவேந்தர் சங்கர் எடுத்துள்ள முடிவு என்பது சர்வாதிகாரமானது. தகுதியில்லாத 40 ஆசிரியர்களில் யாருக்குத் தகுதி இல்லையோ அவர்களை நீக்கம் செய்யுங்கள் என்றுதான் நான் கூறி வருகிறேன். நான் தகுதியில்லாத 40 ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக துணைவேந்தர் கருதி என்னைப் பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார். அரசு தரப்பில் உள்ள அனைவரும் என்னைப் பதிவாளராக நீடிக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு வழங்கிய நிலையில் நான் நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் துணைவேந்தர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் திருவள்ளுவன் மீது நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை வளையத்தில் பதிவாளர் பொறுப்பில் இருந்த தியாகராஜனும் உள்ளார். தகுதியற்ற 40 ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஜனவரி 8ஆம் நாள் வரும் நிலையில், தகுதியற்ற ஆசிரியர் பட்டியலில் உள்ள தியாகராஜன் எப்படி பதிவாளர் பொறுப்பில் நீடிக்கமுடியும் என்றே நான் பணிமாற்றம் செய்து முனைவர் தெ. வெற்றிச்செல்வனைப் பதிவாளராக நியமனம் செய்தேன்.

மேலும், 28ஆம் நாள் தியாகராஜன் பதிவாளர் அறையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது பல்கலைக்கழகத்தின் பொதுஅமைதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதால் 1982ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழதுக சட்ட விதி XIII(6)இன்படி தியாகராஜன் டிசம்பர் 28ஆம் நாள் முதல் பணியிடை நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

துணைவேந்தரும், பதிவாளரும் ஒருவருக்கொருவரை பணிநீக்கம் செய்துகொண்டது குறித்து தஞ்சை சமூக நல ஆர்வலர் வழக்குரைஞர் நெடுஞ்செழியன் செய்தி ஊடகங்களில் பேசும்போது,“பதிவாளர் பொறுப்பில் உள்ள ஒருவர் ஆளுநர் நியமித்த துணைவேந்தரை நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது கேலிக்கூத்தான ஒன்றாகும்.

பல்கலைக்கழகப் பதிவாளர் என்பவர் துணைவேந்தர் ஆணையின்படியும், ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலும் செயல்படக்கூடியவர்தானே தவிர, தானே ஒருவரை நீக்க பதிவாளர் எந்தவொரு அதிகாரத்தையும் பெற்றவர் அல்ல. இந்த அடிப்படை சட்டநுணுக்கம் அறியாதவராக பதிவாளர் இருந்துள்ளார் என்றால் இவர் எப்படி நிர்வாகத்தில் செயல்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்” என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழக வேந்தருமான ஆளுநர் தகுதியில்லாத 40 ஆசிரியர்கள் மீது நடவடிகை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ஆளுநரின் அறிவுறுத்தலின்படி தற்போதைய துணைவேந்தர்(பொ) சங்கர் எப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார்? வரும் ஜனவரி 8ஆம் நாள் தகுதியில்லாத 40 ஆசிரியர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது, பல்கலைக்கழகத்தின் சார்பில் என்ன விவரங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பதைப் பொறுத்தே பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவுவதும், போராட்டங்கள் வெடிப்பதும் இருக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழுக்கான பல்கலைக்கழகம் சார்ச்சைகள் முடிவுக்கு வந்து, தழைத்தோங்க வேண்டும் என்பதும் மாணவர் நலன்கள், பல்கலைக்கழக வளாகத்தில் கல்விச் சூழல் காக்கப்படவேண்டும் என்பதே எல்லாரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

-நமது சிறப்பு செய்தியாளர்கள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.