போர்ஜரி கையெழுத்து ! மோசடி ஆவணங்கள் ! சிக்கலில் சிட்டி யூனியன் வங்கி !
சிட்டி யூனியன் வங்கியின் கடன் வழங்கும் அணுகுமுறையால் பாதிக்கப்பட்டு, சொத்துக்களை இழந்து அவ்வங்கிக்கு எதிரான சட்டப்போராட்டத்தை நடத்தி வரும் கேசவபாண்டியன் வழக்கில், முக்கியத் திருப்பமாக சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக பதிவான முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த மார்ச்-05 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்த வழக்கில், சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக கோயம்புத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதியப்பபட்ட 74/2024 என்ற முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்ட்டிருப்பதோடு, மேற்படி எஃப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை விசாரணைக்கு ஏற்று எதிர்தரப்பிற்கு விளக்கம் கோரும் நோட்டீசை அனுப்பவும் உத்தரவிட்டிருக்கிறார், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன்.
இந்த விவகாரம் தொடர்பாக, கேசவபாண்டியனிடம் பேசினோம். “எதற்காக இவ்வளவு முயற்சி எடுத்து இடைக்கால தடை வாங்க வேண்டும்? சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக, நான் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 12 இல் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகார் அது. என் புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர். போட போலீசார் மறுத்துவிட்ட நிலையில்தான், கோவை குற்றவியல் நீதிமன்றம் -7 இல் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில்தான், எனது புகாரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

அதன்பிறகு, கோவை சிசிபி போலீசார் 13.09.2024 இல் என்னை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். சிட்டி யூனியன் வங்கி தரப்பிலும் விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். விசாரணையில் ஆஜராகி, உரிய ஆவணங்களை சமர்பிக்க 30 நாட்கள் அவகாசம் கேட்டு சென்றார்கள். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கிரிமினல் ரிவிசன் பெட்டிசனை போட்டார்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, கோவை சிசிபியில் 14.11.2024 இல் 74/2024 என்ற வழக்கை பதிவு செய்து எஃப்.ஐ.ஆர். போட்டுவிட்டார்கள். கோவை குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். போட்ட பிறகு, அந்த உத்தரவில் ரிவிசன் கோர முடியாது. சட்டப்படி அதற்கு இடமில்லை.
FIR Copy
ஆனாலும், நீதிமன்றத்தில் ஏதோ சொல்லி அந்த எஃப்.ஐ.ஆருக்கு இடைக்கால தடை பெற்றார்கள். அந்த வழக்கு விசாரணையில்தான், கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் தேதி, பொருத்தமற்ற கோரிக்கை, ஏற்கத்தக்க வழக்கு அல்ல என்று குறிப்பிட்டு நீதியரசர் பி.வேல்முருகன் இடைக்கால தடையை விலக்கி போலீசார் விசாரணையை தொடர வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். இந்த பின்னணியில்தான், அவ்வளவு அவசரம் அவசரமாக அடுத்து ஒரு வழக்கை தொடுத்து மீண்டும் தடை வாங்கியிருக்கிறார்கள். ” என்கிறார், கேசவபாண்டியன்.
”அப்படி என்னதான் குற்றச்சாட்டு? 74/2024 இல் சிட்டி யூனியன் வங்கியை அச்சுறுத்தும் வகையில் அப்படி என்னதான் சங்கதி இருக்கிறது?” என்ற கேள்வியை கேசவபாண்டியன் முன்வைத்தோம்.
“எனக்கும் வங்கிக்கும் 2019 ஆம் ஆண்டு முதலாகவே பிரச்சினை தொடங்கிவிடுகிறது. நான் கேட்காமலேயே என் முன் அனுமதி இல்லாமலேயே என் கணக்கில் கடன் வரவு வைக்கிறார்கள். பிறகு, அவர்களே கொடுத்த புதிய கடனிலிருந்து பழைய கடனுக்கான பாக்கி என்று பணத்தை அவர்களே எடுத்தும் கொள்கிறார்கள். மோசடியான முறையில் எனது செக்குகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு பஞ்சாயத்து.
இதன் தொடர்ச்சியாக, அவர்களிடம் இதுவரை நான் பெற்ற கடன்கள் அத்தனையும் ஒன்றாக்கி, அதற்கு வட்டிக்கு மேல் வட்டியும் போட்டு இவ்வளவு பணம் அவர்களுக்கு நான் திருப்பித்தர வேண்டுமென்று கோவை கடன்வசூல் தீர்ப்பாயத்தில் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள். அதாவது, எனது கடன் நிலுவைக்காக எனது சொத்துக்களை ஏலம் விட்டு வங்கி நிர்வாகம் வசூலித்துக் கொள்வதற்கு டி.ஆர்.டி.யில் முறையிடுகிறார்கள்.
வழக்கு தொடுத்த ஒரே ஆண்டில், வங்கி நிர்வாகத்திற்கு ஆதரவான உத்தரவையும் பெற்றும் விடுகிறார்கள். வங்கியில் நான் எனது சொத்துக்களை பிணைத்தபோது, (2016 இல் ) அதன் அப்போதைய சந்தை மதிப்பு என்று வங்கி நிர்வாகமே மதிப்பிட்டது 5.85 கோடி. ஆனால், டி.ஆர்.டி. உத்தரவின் அடிப்படையில் 2022 இல் அதே சொத்துக்களை வங்கி நிர்வாகம் விற்றது, வெறும் 1.40 கோடி. 2016 இல் ரிங் ரோடு இல்லை. 2022 இல் ரிங் ரோடு எனது நிலத்தில்தான் குறுக்கே செல்கிறது. ரிங்ரோடுக்காக நானே ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்திருக்கிறேன். என்னை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படியே 25 கோடி மதிப்பிலான சொத்தை வெறும் 1.40 கோடிக்கு விற்று என்னை நட்டப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் போதாது என்று, இன்னும் நான் கடன் கட்ட வேண்டியிருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள்.
இங்கே ஒரு விசயத்தை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை சொன்னதெல்லாம்கூட, பொதுவான குற்றச்சாட்டுகள்தான். சிட்டி யூனியன் வங்கியின் தந்திரமான குறிப்பான மோசடிக்கு எதிராகத்தான் அந்த 74/2024 எஃப்.ஐ.ஆரே பதிவாகியிருக்கிறது. அதாவது, டி.ஆர்.டியில் எனது சொத்துக்களை ஏலத்தில் விட்டு காசாக்கிக்கொள்ள உத்தரவை வாங்கினார்கள் அல்லவா? அந்த வழக்கை தாக்கல் செய்யும்போது, சிட்டி யூனியன் வங்கி தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்களில் பல மோசடியானவை என்பதுதான் எனது பிரதான குற்றச்சாட்டு.
நான் அந்த புகாரில் பத்து வகையான ஆவணங்களை குறிப்பிட்டிருக்கிறேன். அத்தனையும் ஃபோர்ஜரி டாகுமெண்ட்டுகள். இன்னும் சொல்லப்போனால், என் கையெழுத்து, எனது தம்பியின் கையெழுத்து, எனது தாயாரின் கையெழுத்து ஆகியவற்றை அவர்களாகவே ஃபோர்ஜரியாக போட்டு டி.ஆர்.டியில் ஆவணங்களாக சமர்ப்பித்திருக்கிறார்கள். இதுபோன்று ஃபோர்ஜரி டாகுமெண்டுக்குகளை ஆதாரமாக காட்டி, டி.ஆர்.டி. நீதிபதிகளை ஏமாற்றி மோசடியான ஒரு உத்தரவை எனக்கு எதிராக வாங்கி, அதை வைத்து எனது சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்றதாக கணக்கு காட்டினார்கள் என்பதுதான் இந்த வழக்கில் முக்கியமான குற்றச்சாட்டுக்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த எஃப்.ஐ.ஆர். 74/2024 இன்படி போலீசார் விசாரணையை நடத்தினால் தங்களது மோசடிகள் அம்பலமாகிவிடும். அந்த மோசடி ஆவணங்களை வைத்தி டி.ஆர்.டி.யில் பெறப்பட்ட உத்தரவும் ரத்தாகிவிடும். பின்னர், அந்த மோசடியான முறையில் பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில், விற்ற சொத்துக்களிலும் வில்லங்கம் உண்டாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், இந்த வழக்கில் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள். அவர்கள் தரப்பில் உண்மை இருக்கும்பட்சத்தில், அவர்கள் தவறே செய்யவில்லை எனும்பட்சத்தில் எதற்காக சார், இவ்வளவு முட்டுக்கட்டைகளை போட வேண்டும்? ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவே எனக்கு ஒரு வருசம் ஆச்சு. அதுக்கே ஒரு கேசு போட்டு நடத்த வேண்டிய நிலைமை.
ஒரு குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாமல் கோவை குற்றவியல் நீதிமன்றம் புகாரை விசாரியுங்கள் என்று உத்தரவு போடுமா? இல்லை, சென்னை உயர்நீதிமன்றமும் தடையை விலக்கி வழக்கை விசாரியுங்கள் என்று உத்தரவு போடுமா? திறமையான வழக்கறிஞர்களை வைத்து, இலட்சக்கணக்கில் செலவு செய்து, நீதிபதிகளையே ஏமாற்றி உத்தரவுகளுக்கு மேல் உத்தரவுகளை வாங்கி வருகிறார்கள். இவ்வளவையும் இழந்த பிறகும், நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையில் வக்கீல் வைத்து வாதாட நான் சில இலட்சங்களை செலவு செய்ய முடியுமா? மனரீதியில் கடுமையான உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். நானும் என்னால் முடிந்த அளவுக்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். பார்ப்போம், என்னதான் செய்கிறார்கள் என்று?
என் பக்கம் உண்மை இருக்கிறது சார். என் பக்கம் நியாயம் இருக்கிறது. எனது சொத்துக்களை மீட்க வேண்டுமென்பதற்காகவெல்லாம்கூட நான் இவ்வளவு போராடவில்லை. இவ்வளவு சட்டப்போராட்டம் நடத்திவரும் என்னையே, இவர்கள் இவ்வளவு திமிராக எதிர்கொள்கிறார்கள் என்றால் சாமானியனின் நிலையை யோசித்து பாருங்கள். அவனால் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்? அந்த சாமானியனுக்காகவும்தான் நான் போராட வேண்டும் என்று நினைக்கிறேன். எனது சட்டப்போராட்டம் தொடரும்…” என்கிறார், கேசவபாண்டியன்.
கேட்கும் நமக்கே தலை கிறுகிறுக்கத்தான் செய்கிறது.
— ஆதிரன்.
இந்த விவகாரம் தொடர்பான விரிவான வீடியோவை காண …