பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐ -யில் அம்பலம் !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் மற்றும் எக்கலாசுபுரம் இடையே பாலாற்று மீது இருந்த தரைப்பாலம் பழுதானதையடுத்து, அதனருகே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்படி பாலத்தை கட்டிவரும் தேனியை சேர்ந்த எஸ் வேலுச்சாமி கட்டுமான நிறுவனம் பாலாற்றிலிருந்து நூதனமான முறையில் ஆற்று மணலை திருடிவருவதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
பொதுமக்களே வீடியோ ஆதாரத்துடன் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும் பாலாறு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான அம்பலூர் அசோகனிடம் பேசினோம்.

“அம்பலூர் ஈடி-எக்கலாசுபுரம் ஆற்று படுக்கையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் தாங்கும் திறனை சோதிக்கிறோம் என்று கூறி பகலில் பாலாற்று மணலை சாக்கு மூட்டைகளில் அள்ளி மேலே வைக்கிறார்கள். பின்னர், இரவில் அவற்றை டிப்பர் லாரிகளில் வெளியே எடுத்து சென்று விடுகிறார்கள். மீண்டும் பகலில் சாக்கு மூட்டைகளில் மணலை நிரப்புகிறார்கள். இதனை கண்டுகொள்ளாதிருக்க காவல்துறையினரையும், அதிகாரிகளையும் கவனித்து விடுகிறார்கள்.
அந்த பாலத்திற்கு மணல் எங்கிருந்து வாங்கினார்கள்? என்று ஆர்டிஐ-யில் கேட்டிருந்தேன். நீங்கள் கூறும் பாலத்திற்கு எங்கிருந்து மணல் வாங்கப்பட்டது தெரியவில்லை என பதில் அளித்துள்ளார்கள். அப்படின்னா இந்த கட்டுமானத்திற்க்கு தேவையான மணல் எங்கிருந்து வந்தது? பாலத்தின் மேலே சேகரிக்கப்பட்டு வரும் மணல் எப்படி வந்திருக்கும்?
இரவு நேரத்தில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் டிப்பர் லாரிகளில் , பாலத்தின் மீது சேகரித்து வைக்கப்பட்ட மணலை எங்கு அள்ளி கொண்டு போகின்றார்கள்? மறுநாள் காலையில் மீண்டும் மணல் எங்கு வாங்கப்பட்டு சேகரித்து வைக்கிறார்கள்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார்.
சட்டப்பூர்வமாக மணலெடுக்க எந்த அனுமதியும் இங்கு இல்லையென ஆர்டிஐ கூறுகிறது . ஆனால் பாலம் கட்டுவதாக கூறி சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி சென்னை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக மதிப்பீட்டு குழுவின் மூலம் மதிப்பீடு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் பணத்தை பெற்று , அதனை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தியது உறுதியானால், அவர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், அசோகன்.
“ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் அரசின் முழு ஆதரவோடு ஆற்று மணல் கொள்ளை நடந்து வருகிறது. பாலாற்றின் இரு கரைகளில் உள்ள வாணியம்பாடி உதயேந்திரம் , அம்பலூர், இராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், கொடையாஞ்சி, ஈச்சங்கால், தேவஸ்தானம், ஓடப்பேரி , ஆம்பூா் அடுத்த மாதனூா், சோமலாபுரம், சான்றோர்குப்பம், தேவலாபுரம், வடகரை, ஆலாங்குப்பம், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகலாக மணல் கொள்ளை மாட்டு வண்டிகள் பிக்கப் டிராக்டர் போன்ற வாகனங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
இயற்கைக்கு மாறாக கனிம வளம் அதிக அளவில் கொள்ளை போகின்றது இதன் காரணமாக தமிழகத்தின் இரண்டாம் நெற்களஞ்சியம் என்று பெயரெடுத்த நமது பாலாறு படுகை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” என்பதாக வேதனை தெரிவிக்கிறார், பாலாறு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும் , சமூக சேவகருமான வழக்கறிஞர் எம்.ஜெ. பாலசுப்பிரமணி.

சர்ச்சையில் சிக்கிய கட்டுமான நிறுவனத்தை சார்ந்த பாலாஜி என்பவரிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். ”முழுக்க முழுக்க இந்த பாலத்தை எம் – சாண்ட் பயன்படுத்திதான் கட்டி வருகிறோம். ஆற்று மணலை பயன்படுத்தவில்லை. ஆற்றில் தண்ணீர் எடுக்கவே பள்ளம் தோட்டப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.” என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாலத்தின் மீது கொட்டப்படிருந்த மணல் இரவு நேரத்தில், டிப்பர் லாரிகளில் அள்ளிக்கொண்டு போனது எதற்காக? என்றதற்கு, ”எங்களுக்கு தெரியாமலே சின்ன சின்ன வாகனங்களில் மணல் எடுத்து செல்கிறார்கள்.” என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆட்சியர் சிவ சவுந்திரவள்ளியை தொடர்புகொள்ள முயன்றோம். நமது அழைப்பை ஏற்கவில்லை.
இந்த குறிப்பான இடத்தில் மட்டுமல்ல; பாலாறு நெடுகிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உரிய கண்காணிப்பையும் கடும் நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
— மணிகண்டன்.