”உதயாவின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்” ‘அக்யூஸ்ட்’-ஐ வாழ்த்திப் பேசியவர்கள்!
ஜேஸன் ஸ்டுயோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் புரொடக்ஷன், எம்.ஐ.ஒய். ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீனிவாஸ் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் உதயாவுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஜான்விகா நடித்துள்ளார். மற்ற முக்கிய கேரக்டர்களில் அஜ்மல், யோகிபாபு, உட்பட பலர் நடித்துள்ளனர். ஜூன் கடைசியில் ரிலீசாகும் ‘அக்யூஸ்ட்’டின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சின்மயா ஹெரிடேஜ் அரங்கில், மே.31—ஆம் தேதி இரவு நடந்தது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா என்.பன்னீர்செல்வம் பேசும் போது, “படம் சிறப்பாக, நல்லபடியாக முடிவதற்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடப்பதற்கும் முக்கியக் காரணம் ஹீரோ உதயா தான். இந்த அக்யூஸ்டுக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசிய சீனியர் தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி ஆகியோர் “சரியான வெற்றி வசப்படாமல் இருக்கும் உதயாவுக்கும் அவரின் உழைப்புக்கும் இந்த ’அக்யூஸ்ட்’ நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் அசாத்திய திறமை படத்தின் பல ஆக்ஷன் காட்சிகளில் தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ‘அக்யூஸ்டை’ ரொம்பவும் பிடிக்கும். படத்தில் ஸ்டண்ட் காட்சிகளை மிகச்சிறப்பாக வடிவமைத்த ஸ்டண்ட் சில்வாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். படத்தில் பண்புரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என அனைவருமே உதயாவின் உழைப்பை மிகவும் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கு வரமுடியாததால், படத்தையும் உதயாவையும் டைரக்டரையும் வாழ்த்திப் பேசிய வீடியோ லிங்கை அனுப்பியிருந்தார் யோகிபாபு. படத்தில் நடித்திருக்கும் அஜ்மல், பவன், பிரபாகர், தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், மியூசிக் டைரக்டர் நரேன் பாலகுமார், ஆர்ட் டைரக்டர் ஆனந்த் மணி ஆகியோர் ‘அக்யூஸ்ட்’ ஷூட்டிங் அனுபவங்களையும் உதயாவின் கடின உழைப்பையும் மேடையில் மனம் திறந்து பாராட்டினார்கள்.
உதயாவின் அப்பா ஏ.எல். அழகப்பன்,
“ எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக இருந்தாலும் அவர்களின் முடிவுகளில் நான் தலையிடமாட்டேன். தனது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறான் உதயா. பத்திரிகையாளர்கள் இந்த ‘அக்யூஸ்டு’க்கு ஆதரவளிக்க வேண்டும்”.
இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் பேசும் போது,
“படம் தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரை உத்வேகத்துடன் இருக்கும் உதயாவின் ஒத்துழைப்பு அலாதியானது. பிரேக்கே இல்லாமல் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். படத்தின் ஆக்ஷன் சீன்கள் மிகவும் பேசப்படும். படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
கடைசியாகப் பேசிய ஹீரோ உதயா,
“நான் சினிமாவுக்கு வந்து 25—ஆவது ஆண்டில் இப்படியொரு படம் பண்ணியிருப்பது எனது பாக்கியம். சினிமாவைவிட்டே போய்விடலாம என சில வருடங்களுக்கு முன்புகூட யோசித்தேன். ஆனால் எனது தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் உழைத்து இன்று உங்கள் முன்னால் இந்த ‘அக்யூஸ்ட்’ படம் பற்றி பெருமையாகப் பேசும் நிலைக்கு வந்துள்ளேன். இந்தப் படத்தின் டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸ், என்னுடன் கைகோர்த்த மற்ற தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், ஆர்ட்டிஸ்டுகள் அனைவருக்கும் நன்றிகள்.
என்னை எப்போதும் ஊக்குவிக்கும் பத்திரிகை சகோதரர்கள், இப்போது இந்த ‘அக்யூஸ்டை’யும் ஊக்குவித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற வேண்டுகோளுடன் என பேச்சை நிறைவு செய்கிறேன்”. என்றார் உருக்கமுடன்.
— மதுரை மாறன்.