அங்குசம் பார்வையில் ‘ஜெயிலர்-2’
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், டைரக்டர்: நெல்சன், ஆர்டிஸ்ட்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், ஷிவராஜ்குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராப், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு, மிர்ணா, யோகி பாபு, நமோ நாராயணன், பிஎல்.தேனப்பன், ஷீலா ராஜ்குமார், பகவதி பெருமாள், டைரக்டர் தமிழ், இனியா, நோரா ஃபதேஹி, ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன், இசை: அனிருத், எடிட்டிங்: ஆர்.நிர்மல், ஸ்டண்ட்: சேத்தன் டிசோஸா, ஆர்ட் டைரக்டர்: டிஆர்கே கிரண், பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடவுள் பெருமாளின் தங்க கிரீடத்தை கடத்தி வரச் சொன்ன வில்லன் வர்மாவையும் [விநாயகன்] அவனுடன் கூட்டு வைத்த குற்றவாளியான் தனது இன்ஸ்பெக்டர் மகன் வசந்தையும் ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன், குளோஸ் பண்ணுவதுடன் ‘ஜெயிலர்’ முதல் பாகம் முடிந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக இந்த ’ஜெயிலர்-2’-வில் விநாயகனின் சிஷ்யன் சுராஜ் வெஞ்சரமூடுவும் இவரது பாஸ் போதியும்[எஸ்.ஜே.சூர்யா] விநாயகனைப் போட்டுத் தள்ளிய முத்துவேல் பாண்டியனை தேட ஆரம்பிக்கும் சீனுடன் படம் ஆரம்பிக்கிறது.
கோவை மாவட்டம் மாங்கரை ஊராட்சியில் தனது மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மிர்ணா, பேரன் ரித்விக்குடன் வசிக்கிறார் முத்துவேல் பாண்டியன். அங்குள்ள சூப்பர்மார்க்கெட்டில் சூப்பர் வைசராக வேலை பார்க்கும் இவரைக் கண்டு பிடிக்க சுராஜின் ஆட்கள் வட்டமிடுகிறார்கள். சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்க்கும் போது ஊராட்சி அலுவலக அதிகாரி பகவதி பெருமாளின் அடியாள்மூலம் ஒரு பிரச்சனை வர வேலை போகிறது முத்துவேல் பாண்டியனுக்கு. அதனால் பழக்கடை மூர்த்தி[நமோ நாராயணன்]யிடம் டிரைவராகவும் எடுபிடி வேலை பார்ப்பராகவும் வேலைக்குச் சேர்கிறார் முத்துவேல் பாண்டியன்.
ஒருநாள் மூர்த்தியும் முத்துவேல் பாண்டியனும் காரில் போகும் போது, சிலை ஒன்றைக் கடத்திவிட்டு தப்பி ஓடும் யோகிபாபுவைக் காப்பாற்றித் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அதன் பின் சிலை கடத்தல் ஐடியாவை மூர்த்திக்குக் கொடுத்து சுராஜ் வெஞ்சரமூடுவைச் சந்திக்க வைக்கிறார் முத்துவேல் பாண்டியன். அதன் பின் நடக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரம்மாண்ட சூப்பர் ஷோ தான் இந்த ‘ஜெயிலர்-2’.
இந்த பிரம்மாண்ட சூப்பர் ஷோவை மெகா ஹிட்டாக்கி, அனைத்து வயது சினிமா ரசிகர்களையும் உற்சாக ஆட்டம் போட வைத்திருக்கிறார் படத்தின் டைரக்டர் நெல்சன். சூப்பர் மார்க்கெட்டில் குடையுடன் ரஜினி எண்ட்ரியாகும் சீன் சிம்பிளாக இருந்தாலும் தியேட்டரே அதிர்கிறது. அதன் பின் சூப்பர் ஸ்டார் வரும் ஒவ்வொரு சீனும் பார்வையாளனுக்கு பதினாறு வகை வெஜ், நான் -வெஜ் அயிட்டங்களுடன் பக்கா விருந்து தான். தனது வீட்டுக் குழாயில் கருப்புக் கலரில் தண்ணீர் வந்ததும் ஊராட்சி அதிகாரி பகவதி பெருமாளைப் பார்க்கப் போய் அவமானப்படுவது, பின் தானே பைப் லைனை சரிசெய்ததும் பகவதி பெருமாளை கடப்பாரையால் பொளப்பது, நமோவுக்கு டீ வாங்கிக் கொடுப்பது, அவரின் காரைக் கழுவுவது, [தான் வரும் சீன்களிலெலாம் மதுரை பாஷையில் தூள் கிளப்புகிறார் நமோ நாராயணன்] டீக்கடையில் ரிடையர்டு இன்ஸ்பெக்டர் தேனப்பனும் அவரது கர்ப்பிணி மகள் ஷீலா ராஜ்குமாரும் தனது காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்த [ முத்துவேல் பாண்டியனின் அதகள ஆட்டமும் கதையும் அங்கு தான் ஆரம்பம்] வில்லனின் கைத்தடிகளை பொடிமாஸ் போடுவது என பரமசாதுவாகவும் பாயும் புலியாகவும் 76 வயதிலும் [வரும் டிசம்பர் 12-ல்] சிங்கம் போல கம்பீரமாக இருக்கிறார் ரஜினிகாந்த். அதே போல் மகனைச் சுட்டுக் கொன்ற உண்மையை, தனது மனைவி, மருமகள், பேரன் முன்பாக போதி[ எஸ்.ஜே.சூர்யா] சொன்னதும் செய்வதறியாமல் தவிக்கும் கண்களுடன் ரஜினியின் டைட் குளோசப் அபாரம்.
டீக்கடையில் வில்லன்களின் கைத்தடிகளிடம் “உன்னைப் பத்தி இவ்வளவு தெரிஞ்ச பிறகும் உன்னை விட்டுவைக்கிறதுக்கு நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும்” , “குட்மார்னிங், குட் ஈவினிங் மெசேஜ் அனுப்பினேன். நீங்க ரிப்ளை பண்ணலயே” என வில்லி வித்யா பாலனிடம் , “காரை வச்சு என்னை டீஸ் பண்ணுனதுக்குத் தான் உன்னை மாட்டிவிட்ருக்கேன்” என யோகிபாபுவிடம், “என்னை ஒழிச்சுக்கட்ட அம்பது வருஷமா ஒரு கும்பல் டிரை பண்ணி தோத்துப் போச்சு” என எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினி பேசும் டயலாக் செம மாஸ் & கிளாஸ்.
இடைவேளை வரை ஃபேமிலிசெண்டிமெண்ட், நெல்சன் பிராண்ட் காமெடி, இடையிடையே அதிரடி ஆக்ஷன் என அள்ளுது போங்க.
இடைவேளைக்குப் பிறகு வில்லன் போதி[ எஸ்.ஜே.சூர்யா], அக்கா காந்தா[வித்யா பாலன்] இவர்களின் அப்பா மிதுன் சக்கரவர்த்தி என கோவாவில் கொடிகட்டிப்பறக்கும் இவர்களின் சாம்ராஜ்யம், அதற்குள் ரஜினி எண்ட்ரியான பின்பு நடக்கும் அதிரிபுதிரி ஆட்டம், கோவா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ரஜினியை அதிரடியாக மீட்கும் ஹிருத்திக் ரோஷன், க்ளைமாக்ஸில் ரஜினியுடன் சேர்ந்து மாஸ் காட்டும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சேத்தன் டிஸோஸாவின் அட்டகாசமான ஆக்ஷன் சீக்வென்ஸ், அனிருத்தின் பின்னணி இசை[ காதில் கேட்பது மாதிரி பாட்டு எப்படி போடுறதுன்னு யாராவது இவருக்குச் சொல்லிக் கொடுங்கப்பா], கேரளா, கோவாவில் கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணனின் அபார உழைப்பு, ஆர்ட் டைரக்டர் கிரணின் செட் ஒர்க் இதெல்லாம் சேர்ந்து ஜெயிலர்-2’-வை சீன் பை சீன் ரசிக்க வைக்கின்றன.
100% பக்கா மாஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்டுக்கு க்யாரண்டி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் டைரக்டர் நெல்சனுக்கும் சபாஷ்…..சபாஷ்…சபாஷ்…..
அங்குசம் பார்வையில் ‘ஜெயிலர்-2’ 76/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.