மக்களின் வரிப்பணம் மாநகராட்சிக்கா ? கோவிலுக்கா ?
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் ரோடு (ரயில்வே ஸ்டேஷன் சாலை) பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களை செல்லியம்மன் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்துக் குடியிருப்பதாக அந்த கோவிலின் அறக்கட்டளையை சேர்ந்த சிலர் மக்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறார்கள்.
குடியிருந்து வரும் மக்கள் முறையாக மாநகராட்சிக்கு அனைத்து வரிகளையும் செலுத்தி வருவதோடு பலர் பத்திரப்பதிவும் செய்து வைத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாகத் தான் இப்ப பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். காரணம் செல்லியம்மன் கோவில் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் வரி செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் வீடுகளை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி துரத்தி வெளியேற்றி விடுவோம். என்று இந்து சமய அறநிலைத்துறையை துணைக்கு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
செல்லியம்மன் கோவிலுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இக்கோயில் அதனுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இவ்வாறு இருக்கையில் சில நபர்களுடன் கைகோர்த்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். நான்கைந்து தலைமுறைகளாக.. வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களை இப்படி ஆண்டுக்கு ஒரு முறை அச்சமூட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றது.
மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற அனைத்தையும் முறையாக வரி செலுத்தி பயன்படுத்தி வருகின்ற மக்களை இவ்வாறு தங்களின் சுயநலத்திற்காக மிரட்டி வருகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் எமது அமைப்பான மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டு எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்று று 22.06.25 காலை 11மணி அளவில் அப்பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்தோம்.
1.யாரையெல்லாம் இந்த அறக்கட்டளை சேர்ந்தவர்கள் மிரட்டுகிறார்கள்.
2.யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.
3.யாரையெல்லாம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறார்கள்.
4.கோயில் நிர்வாகத்தின் நிலம் என்று அவர்கள் சொல்லக்கூடிய பகுதிகள் எங்கெல்லாம் உள்ளன.
5.பட்டா பெற்று குடியிருந்து வருபவர்கள் எத்தனை பேர்.
6. அறக்கட்டளையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலங்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா
என்பதைப் பற்றியெல்லாம் எமது தோழர்களோடு கள ஆய்வு செய்தோம்.
வசதி படைத்த பணக்காரர்கள் கோவில் அறக்கட்டளையின் மூலம் எவ்வித சிக்கல்களும் பிரச்சனைகளும் இல்லாமல் கோவில் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதைப் போல
தென்னை கீற்றால் வேந்த குடிசை வீடு, ஹாஸ்பிடாஸ் சிமெண்ட் சீட்டு வீடுகள், இரும்பு தகரத்தினால் மூடப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களையும் நிம்மதியாக வாழ விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
80 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கே இந்த நிலத்தில் உரிமை !
இதற்கான ஆதாரத்தையும் இப்பகுதி மக்கள் வைத்திருக்கிறார்கள். மக்கள் எடுக்கின்ற எவ்விதப் போராட்டங்களிலும் எமது மக்கள் அதிகாரம் துணை நிற்கும். மக்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.