அங்குசம் பார்வையில்  ‘ஃப்ரீடம்’ 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : விஜய கணபதி பிக்சர்ஸ்’ பாண்டியன் பரசுராமன். இணைத் தயாரிப்பு : சுஜாதா பாண்டியன். இயக்கம் : சத்யசிவா. நடிகர்-நடிகைகள் : சசிக்குமார், லிஜோமோல் ஜோஸ், சுதேவ்நாயர், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட், ஆண்டனி, மணிகண்டன், மாளவிகா அவினாஷ், ‘ரீல்ஸ்’ அம்ருதா, சரண்யா ரவிச்சந்திரன்.  ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், இசை : ஜிப்ரான் வைபோதா, ஆர்ட் டைரக்டர் : சி.உதயகுமார், எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், பாடல்கள் : சினேகன், அருண்பாரதி, மோகன்ராஜன், காஸ்ட்யூம் டிசைனர் : சிவரஞ்சனி, காஸ்ட்யூமர்: சங்கர், தயாரிப்பு நிர்வாகிகள் : எம்.தென்னரசு, வேல்முருகன், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம் ]

சிங்களக் காடையர்களின் அட்டூழியம் அதிகரித்த 1991-ல் 100-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக  இராமேஸ்வரம் வந்திறங்குகின்றனர். அவர்களில் ஒருவர் மாறன்[ சசிக்குமார்] இவரின் கர்ப்பிணி மனைவி செல்வி [லிஜோமோல்] சில மாதங்களுக்கு முன்பே இராமேஸ்வரம் வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் [ அப்போதெல்லாம் அகதிகள் முகாம் தான். தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வரான பின் தான் ஈழத்தமிழர்கள் புனர்வாழ்வு முகாம் என மாறியது ] உள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

‘ஃப்ரீடம்’முகாமில் உள்ள ஓலைக் குடிசைகள் ஒன்றில் செல்வியும் மாறனும் தங்கியிருக்கிறார்கள். அதே 1991-ல் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். பிரச்சாரக் கூட்டத்தில் மாலையுடன் நிற்கும் பெண், அருகில் நிற்கும் ஒற்றைக் கண் சிவராமன் ஆகியோரின் போட்டோவை ஆதாரமாக வைத்து புலனாய்வை மேற்கொள்கிறது ஸ்பெஷல் டீம். இரண்டு மாதங்களுக்கு முன்பு இராமேஸ்வரம் வந்து அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் சிலருக்கும் இந்தப் படுகொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாறன் உட்பட சிலரையும் திருச்சி முகாமில் இருக்கும் மு.ராமசாமி, ஆண்டனி, மணிகண்டன் உட்பட சிலரையும் வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஸ்பெஷல் ஜெயிலில் வைத்து, சித்ரவதை செய்து விசாரிக்கிறார் மேலதிகாரி சுதேவ் நாயர்.

இராமேஸ்வரம் முகாமில் இருக்கும் இவர்களின் மனைவி, குழந்தைகள் கூட இவர்களைப் பார்க்க முடியாத கொடுமை. கோட்டை ஜெயிலில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் ஆதரவாக களம் இறங்குகிறார் மனித உரிமை அமைப்பின் வக்கீல் மாளவிகா அவினாஷ். இவரின் ஆலோசனையின் பேரில் முதல்வருக்கு கண்ணீர்க்கடிதங்களை மனுவாக அனுப்புகிறார்கள் சிறைத் தமிழர்கள். ஆனால் இவர்களின் மனுக்களையெல்லாம் போஸ்ட் பாக்ஸிலிருந்து எடுத்து எரித்துவிடுகிறார் கொடூர போலீசான சுதேவ் நாயர். இதனால் மனமுடைந்து தூக்கில் தொங்குகிறார் வாய் பேசமுடியாத மணிகண்டன். இனிமேல் இந்த அறவழி சாத்தியமில்லை என்ற முடிவுடன், சசிக்குமார் தலைமையில் அனைவரும் ஜெயிலிலிருந்து தப்பிக்க சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவர்கள் அனைவருக்கும் ஃப்ரீடம் கிடைத்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ’ஃப்ரீடம்’ .

1995—ல் வேலூர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்கிக் கொள்ள, பாதிப் பேர் தப்பி கடல்மார்க்கமாக வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டார்கள். இந்தியாவை அதிர வைத்த அந்த உண்மைச் சம்பவத்தைத் தான் வலியும் வேதனையும் மிகுந்த சினிமாவாக காட்சிப்படுத்தி, அதை சசிக்குமார் என்னும் பண்பட்ட நடிகனின் துணையுடன் தமிழர்களை கண் கலங்க வைத்துவிட்டார் இயக்குனர் சத்யசிவா.

Flats in Trichy for Sale

அதே வேலூர் ஜெயிலிலிருந்து சிலர் தப்பிக்க முயலும் போது தடுத்து நிறுத்தி, அவர்களை போலீசிடமே ஒப்படைக்கும் சசிக்குமார், அதன் பின் கொடுங்கோன்மை அதிகரித்ததால் அதே குழுவுடன் இணைந்து சுரங்கம் தோண்ட திட்டம் தீட்டுவதில் இருந்து, தாங்கள் எத்தனை பேர், எத்தனை மணிக்கு தப்பிக்கப் போகிறோம் என்ற விவரங்களையும் வக்கீல் மாளவிகாவிடம் கொடுக்கும் சசிக்குமார், குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பார்க்கும் நிலையில் உதிர்க்கும் கண்ணீர் என சகலமும் சசிக்குமாரே நடிப்பின் சாட்சியாக நிற்கிறார். இலங்கைத் தமிழையும் அவ்வளவு அற்புதமாக பேசியுள்ளார்.

இவரின் மனைவி செல்வியாக லிஜோமோல் நடிப்பதற்கு சொல்லியா தரவேண்டும்? “இராவணன் சீதையைக் கடத்தியதால் தான் சபிக்கப்பட்ட பூமியாக இலங்கை மாறியது என எனது பாட்டி சொல்வாள். இராமாயணம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது தானே மாறா” என சசிக்குமாரிடம் கேட்கும் காட்சியில் நம்மை கண்கலங்கை வைத்துவிட்டார் லிஜோமோல்.

மிகக் கொடூரமான போலீஸ் அதிகாரிக்கு சுதேவ் நாயர் மிகக் கச்சிதமான தேர்வு. நல்லா கவனிங்க தமிழர்களே.. அவர் பேரில் நாயர் இருப்பதை. மண்டபம் முகாமின் இன்சார்ஜ் போலீசாக போஸ் வெங்கட், சசிக்குமாரைக் காட்டிக் கொடுக்கும் டீக்கடைகாரராக ஷரவண சக்தி, சி.பி.ஐ. அதிகாரியாக ரமேஷ் கண்ணா, தமிழர்களின் விடுதலைக்காக போராடும் வக்கீலாக மாளவிகா, இராமநாதபுரம் கலெக்டராக ரீல்ஸ் பிரபலம் அம்ருதா என அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘ஃப்ரீடம்’“தமிழ்நாட்டின் வரலாறு தெரியாம உன்னோட சேட்டையக் காட்டுனா, உருப்படியா இருக்கமாட்டே. ஏன்னா இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்கள்னா ரொம்ப பாசம். வெளியே போராடும் அவர்கள் உள்ளே நுழைஞ்சா நீ குளோஸ்” என சுதேவ் நாயரைப் பார்த்து சிபிஐ அதிகாரி ரமேஷ் கண்ணா பேசும் வசனம் உண்மை ரகம்.

அதே சுதேவ் நாயரிடம் “மாறனிடம் துப்பாக்கி இருந்ததா சொல்றியே, காஷ்மீர்ல எல்லார் கையிலயும் துப்பாக்கி இருக்கே அதுக்கு என்ன சொல்ற. வன்முறை எங்கெல்லாம் இருக்கோ, அங்கெல்லாம் துப்பாக்கி இருக்கும். இனிமேலாச்சும் தெரிந்து திருந்தி நடந்துக்க” ரமேஷ் கண்ணா பேசும் வசனம் இயக்குனர் சத்யசிவாவின் சத்ய மனசில் உள்ளது. சென்சார் கண்ணில் சுரங்க மண்ணள்ளிப் போட்டு சாமர்த்தியமாக பல காட்சிகளை நுழைத்துள்ளார் சத்யசிவா. படத்தில் ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரக்கூடாது, தேவையுமில்லை என்பதை திட்டமிட்டு திரைக்கதையை வடிவமைத்த சத்யசிவாவின் சிந்தனைக்கு செவ்வணக்கம், கருப்பு-சிவப்புக் கொடியைக் காட்டியதற்காக திராவிட வணக்கம்.

இரவு நேரத்தில் சுரங்கத்தின் வழியாக தப்பிக்கும் காட்சியில் கேமராமேன் என்.எஸ். உதயகுமாரின் உழைப்பு அசாத்தியம் என்றால், அந்த சுரங்க செட்டைப் போட்ட் ஆர்ட் டைரக்டர் சி.உதயகுமாரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரு தாலாட்டுப் பாடலிலும் புலிகளின் போர்ப்பரணியிலும் பின்னணி இசையிலும் ஜிப்ரானின் இசைக்கருவிகள் உயிரூட்டுகின்றன. என்ன ஒண்ணு மாஜி பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திறங்கும் போது “பொட்டு வச்ச தங்கக்குடம்” பாட்டை ரீமிக்ஸ் பண்ணியது தான் மேட்ச் ஆகவில்லை.

 

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.