அங்குசம் பார்வையில் ‘கெவி’
தயாரிப்பு : மணிக்கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா. இணைத் தயாரிப்பு : வருண்குமார், உமர் ஃபாரூக், ஜெக சிற்பியன். டைரக்ஷன் : தமிழ் தயாளன். நடிகர்-நடிகைகள் : ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், காயத்ரி, விவேக் மோகன், அபிமன்யூ மீனா,, ராம்போ விமல், ஜெகத் ராமன், ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா, இசை : ஜி.பாலசுப்பிரமணியன், பாடல்கள் :வைரமுத்து, யுகபாரதி, எடிட்டிங் : ஹரி குமரன், பி.ஆர்.ஓ.: ஏ.ஜான்.
மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம். குளுகுளு இடங்களைத் தேடி வெள்ளைக்காரர்கள் அலையும் போது இந்த கொடைக்கானல் மலைப்பகுதிதென்படுகிறது. அந்த மலைப்பகுதியிலும் சற்று சமதளமான பகுதிகளைத் தேடும் போது, அவர்களை டோலிகட்டி தோளில் சுமந்து அலைகிறது இந்த சமூகம். அப்போது வெள்ளையனை தோளில் சுமந்த அந்த சமூக மக்களின் துயரமும் வேதனையும் இப்போது வரை தீரவில்லை. திடீரென ஒருவருக்கு உடல்நலமில்லாமல் போனாலோ, பிரசவ வேதனையில் கர்ப்பிணிகள் துடித்தாலோ, அதே டோலியில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதைகளில் சுமந்து கொடைக்கானலுக்கோ, கீழே இருக்கும் கொடைரோட்டிற்கோ தான் வரவேண்டும். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஏன்னா இப்போதும் அவர்களுக்கு சாலை வசதியோ, மருத்துவவசதியோ இல்லை.
‘கெவி’ என்றால் பள்ளமான பகுதி என்று அர்த்தம். வெள்ளக் கெவி என்ற அந்த துயரமான பகுதியில் வசிக்கும் மக்களின் துயரமும் வலியும் தான் இந்த ‘கெவி’. அப்படிப்பட்ட கிராமத்திற்கு தேர்தல் சமயம் மட்டும் ஓட்டுக் கேட்டு வருவார்கள், நம்ம அரசியல் புண்ணியவான்கள். அப்படி ஒரு முறை ஓட்டுக் கேட்டு வரும் போது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.விடம் மக்கள் தங்கள் மனவேதனையைக் கொட்டுகிறார்கள். எம்.எல்.ஏ.ஆட்களுக்கும் அந்த ஊரின் மலையன் [ ஆதவன் ] என்ற இளைஞனுக்குமிடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக மலையனின் செருப்பு ஒன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வினோத் மீது பட்டுவிட, அப்போது அமைதியாகத் திரும்பினாலும் அந்த காக்கியின் மனசுக்குள் வன்மம் கனன்று கொண்டு தான் இருக்கிறது.
ஒரு நாள் இரவு தனது போலீஸ் படையுடனும் வெறியுடனும் மலையனைத் தேடி வெள்ளக் கெவி ஏரியாவில் கேம்ப் அடிக்கிறார். கர்ப்பிணி மனைவிக்கு [ ஷீலா ராஜ்குமார் ] ஆசை ஆசையாக பொருட்களை வாங்கிக் கொண்டு ஆதவன் திரும்பும் போது, சார்லஸ் வினோத் தலைமையிலான போலீஸ் மிருகங்களிடம் சிக்குகிறார் ஆதவன். மிருகங்களின் நரவேட்டை ஆரம்பமாகிறது.
இங்கே அவரின் கர்ப்பிணி மனைவி ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட, அருகே இருக்கும் அரசு மருத்துவமனை டாக்டருக்கு [ காயத்ரி] போன் போடுகிறார் ஷீலாவின் தம்பி. ஆனால் அந்த காயத்ரியோ, ”முடிஞ்சா உயிரோட இருந்தா தூக்கிட்டு வா, இல்லேன்னா தூக்கிப் போட்டுட்டுப்போ” என திமிராக சொல்கிறார்.
அதன் பின் அந்த மக்கள்படும் அல்லலும் துயரமும் தான் ‘ஹெவி’யாக நம்மைத் தாக்குகிறது. இப்படி ஒரு கதைக்களம், அடிப்படை வசதிகள் கூட இன்னும் கிடைக்கப்பெறாத மக்களின் ரணவேதனையை சினிமாவாக பதிவு செய்தற்காகவே இயக்குனர் தமிழ் தயாளனை ரொம்பவே ஹெவியாக பாராட்டலாம். ஆனால் காட்டிகள் ரொம்பவே நீளமாகி, கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புகிறது, அதே போல் இரண்டு மணி நேரம் 12 நிமிடம் படம் ஓடுவதும் ரொம்ப ஓவராகிப் போச்சு டைரக்டரே..
மலையன் என்ற இளைஞனாக ஆதவனின் நடிப்பு அடடா போட வைக்கிறது. அதே போல் ஷீலா ராஜ்குமாரின் அனுபவ நடிப்பு, பிரசவ வலித் துடிப்பு இதையெல்லாம் பார்த்து நமக்கே படபடப்பு வந்துவிட்டது. நெஞ்சில் ஈரம் உள்ள இளம் டாக்டராக ஜாக்குலின், அவருக்கு ஆதரவாக திருநங்கை ஜீவா சுப்பிரமணியம், அவர்களுடன் வரும் கம்பவுண்டர் என எல்லோருமே கெவியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும்விட மிகமிக ஹெவியாக உழைத்திருப்பவர் என்றால் கேமராமேன் ஜெகன் ஜெயசூர்யா. படத்தின் முக்கால்வாசி இரவு நேரம், அதிலும் முக்கால்வாசி கரடுமுரடு மலைப்பகுதி என மனுஷன் அசாத்திய உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பொழுது விடியும் போது க்ளைமாக்ஸில் அந்த உச்சி மலையில் ஒட்டு மொத்த மக்களையும் காட்டுகிறாரே 500 கோடியில் படம் எடுக்குறவனால் கூட இப்படி எடுக்க முடியாது.
இயக்குனர் தமிழ் தயாளனுக்கும் கேமராமேன் ஜெகன் ஜெயசூர்யாவுக்கும் மனம் திறந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
— மதுரை மாறன்