தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு
“வன்முறையைத் தீர்க்க பயங்கரவாதத்தை ஒழிக்க மத ரீதியான
ஒரு முஸ்லிம் நல்ல முஸ்லிமாக இருப்பதற்கு,
ஒரு இந்து நல்ல இந்துவாக இருப்பதற்கு,
ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவராக இருப்பதற்கு,
ஒரு சீக்கியர் நல்ல சீக்கியராக இருப்பதற்கு
நாம் பாடுபட வேண்டியதுதான் முக்கியமான கடமை.
அந்தக் கடமையை இந்த நாட்டிலே செய்வதற்கு
இந்தப் பேரவை இந்த மக்களவை வழிகாட்ட வேண்டும்”
இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம், சென்னை அறிவுசார் தலைநகரம் எனத் திராவிடவியலின் மாண்பை பறைசாற்றியவர் இவர். 2004-ல் பாராளுமன்றத்தில்
1956 நவம்பர் 4-ஆம் நாளில் திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காயிதே மில்லத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருந்த அந்த அரங்கில் எழுத்தரசு ஏ.எம்.ஹனீப், நாவலர் ஏ.எம்.யூசுப், பெரும்புலவர் டாக்டர் சி.நயினார் முகமது போன்றோர் நிறைந்திருந்த அந்த மேடையில் புரட்சி எழுத்தாளர் மதனீ அவர்களால் மேடையில் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர் ஒருவர்தான் அக்கூட்டத்தில் வரவேற்புரை நிகழத்தினார்.
அந்த மாணவர் தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தற்போதைய தேசியத் தலைவர். மு.கா.மொகிதீன் என்றும் பெயரில் நாவலர் யூசுப் அவர்களின் வளர்ப்பில் அரசியல் கூட்டங்களிலும் மீலாது விழாக்களிலும் முழங்கிய செயல் வீரர். படிப்படியாக வளர்ந்து 1999-இல் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆனார். 2017-இல் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார். கட்சி ஆரம்பிக்கப்பட்ட 1948-இல் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்ற காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு தேசியத் தலைவராகப் பதவியேற்ற தமிழர் காதர் மொகிதீன் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டப் பீடித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் அவருடைய அரசியல் பணியின் தனித்துவமான அடையாளமாகும்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு. தமிழ்நாடு வெடிமருந்துத் தொழிற்சாலையின் தடைநீக்கம் ஆகியவற்றிற்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கானத் தேசிய ஆணைய மசோதா, குற்றவியல் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றில் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரைகள் மிகுந்த கவனத்திற்குரியவை.
குறிப்பாக குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது மரண தண்டனை, ஆயுள் தண்டனை, ஏழு வருட சிறைத்தண்டனை ஆகியவற்றைக் குற்ற சமரச பேச்சுவார்த்தையில் இணைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதனால் கொலையுண்ட குடும்பத்தினர் பெரும் பொருளாதாரப் பயன்களைப் பெறுவதற்கான வாயப்புகள் ஏற்படுகின்றன. சிங்கப்பூர் பாணியிலான வழக்குகளை வடிகட்டும் முறையினால் நீதி மன்றங்களில் வழக்குகள் தேங்குவதை குறைக்க இயலும் என்றார். நீதி போதனை. ஆன்மீகம், ஒழுக்கக் கல்வி போன்றன குற்றங்களைக் குறைக்கும் காரணிகள் என்பதை நாடாளுமன்றம் உணர வேண்டும் என வலியுறுத்தியதோடு ஓர் அரசியல்வாதியாக தான் இதைக் குறிப்பிடவில்லை எனவும் ஓர் ஆசிரியராக இக்கருத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டு காலம் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். திருச்சி ஜமால் முகமது கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் உயர்கல்வி பயின்றவர். சட்டக்கல்வி பயிற்றுவித்த சர்மா. ஆங்கில இலக்கியம் போதித்த கமலாபதி, வரலாற்றுப் பாடம் கற்பித்த ஆபிரகாம் ஆகியோரை இன்றளவும் அவர் நினைவுகூர்வதோடு புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் கிராமத்தில் தம்முடைய தொடக்கப் பள்ளி ஆசிரியர் நல்லான் அவர்களை காதர் மொகிதீன் அவர்கள் தம் வாழ்நாளில் மறக்க முடியாதவராகக் கருதுகிறார். புகழ்பெற்ற வராலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை அவர்களின் மாணவர் தாம் என்பதையும் அவர் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.
சமுதாயத்திற்குச் சரியான அரசியல் தலைமையைத் தரும் தலைமைகனாய் எளிமையின் சிகரமாய் நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழும் காதர் மொகிதீன் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர். வெளியூர் பயணங்களில் பள்ளிவாசல்களில் தங்கி பாயில் படுத்து இளைப்பாறுபவர். இயற்கை வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து இதய நோய் அறுவை சிகிட்சையைத் தவிர்த்தவர்.
தற்போது மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராக உள்ள இவர் முபாரக், தாருல் குர்ஆன் ஆகிய இதழ்களை நடத்தி வந்தார். 1981 இல் தொடங்கி தொடர்ந்து 10 ஆண்டுகள் மாதமிருமுறை இதழாக தாருல் குர்ஆன் வெளிவந்தது. இந்து முன்னணி மாநில அமைப்பாளராக இருந்த இராம. கோபாலன் அவர்கள் தாருல்
குர்ஆன் இதழில் காதர் மொகிதீன் எழுதிய கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி எழுதியதை இங்கு குறிப்பிட வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகள் என்னும் சிந்தனையில் இன்று இடதுசாரிகளும் முஸ்லிம் லீக் கட்சியும் ஒரே அணியில் இடம்பெற்றிருந்தாலும் 80-களில் இவ்விரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இயங்கி வந்தன. அத்தகைய சூழலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் 1979 தொடங்கி 35 ஆண்டுகள் திருச்சியில் குடியிருந்தது காதர் மொகிதீன் அவர்களின் இல்லத்திற்கு எதிர் இல்லத்தில் ஆகும். குடும்பம், சமூகம், தேசம் எனப் பல நிலைகளில் தங்களுக்குள் நிலவிய நட்புணர்வு. பொதுமைத்தன்மை ஆகியவற்றை மலரும் நினைவுகளாக எடுத்துரைக்கிறார் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள்.

சமய சமுதாய நல்லிணக்கத்தில் நாட்டம் கொண்ட பேராசிரியர் விமரிசனங்களைத் தோழமையுடன் எதிர்கொண்டவர். பொது சிவில் சட்டம். நபிமார்களும் நபித்துவமும், முஸ்லிம்கள் நேற்று இன்று நாளை, வாழும் நெறி ஆகிய நூற்களை எழுதிய அறிஞர். மிகச் சிறந்த கவிஞரும் கூட.
எளிமை, யதார்த்தம். கருத்தாழம், சமுதாய அக்கறை, பிரச்சினைகளுக்கு முறையானத் தீர்வுகள், இதயங்களை வெல்லும் விவாதமுறை என அனைவரையும் கவரும் ஆற்றல் கொண்ட பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு வழங்குவது மிகவும் பொருத்தமானது.