அங்குசம் பார்வையில் ‘சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம்’ – திரை விமர்சனம் !
தயாரிப்பு : ‘சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ்’ மகேஸ்வரன் தேவதாஸ், இணைத் தயாரிப்பு : சாண்டி ரவிச்சந்திரன், டைரக்ஷன் : அனீஷ் அஷ்ரஃப், ஆர்டிஸ்ட்: வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா, ஒளிப்பதிவு : அரவிந்த், இசை : ஏஜி.ஆர்., எடிட்டிங் : வி.எஸ்.விஷால், ஸ்டண்ட் : நூர், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
சென்னையில் முகம் சிதைக்கப்பட்டு, மஞ்சக் கலர் மாஸ்க் மாட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணும் இளைஞனும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்கள். கொலைகாரன் யார் எனத் தெரியாமல் தவிக்கிறது போலீஸ். இந்த நிலையில் பிரபல க்ரைம் நாவலாசிரியர் ஜீவன்குமாரைப் பற்றி பத்துவார தொடர் எழுத, அவரது மகன் வெற்றியை மதுரையில் சந்திக்கிறார்கள் ‘மனிதம்’ பத்திரிகை நிருபர்கள்.

அவரும் ஓகே சொல்லி சென்னைக்கு வந்து அந்தப் பத்திரிகையில் நிருபராக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத்தை சந்தித்து இறந்து போன தனது தந்தையைப் பற்றிச் சொல்கிறார். அது தொடராக வெளி வந்து கொண்டிருக்கும் போது, பலே திருடன் ரெடின் கிங்ஸ்லியை எதேச்சையாக சந்திக்கிறார் வெற்றி. ரெடின் திருடிய சங்கிலித் திருட்டு வழக்கு சம்பந்தமாக வெற்றியை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகும் வழியில் சாலையில் நடந்த பைக் ஆக்சிடெண்டில் ஒருவன் இறந்துகிடக்கிறான்.
அப்பா ஜீவன்குமாரின் க்ரைம் பிரைய்ன் தனக்கும் இருப்பதால், அது ஆக்சிடெண்ட் இல்ல, கொலை என்கிறார் வெற்றி. அவர் சொல்லும் காரணங்களும் ஐடியாக்களும் கரெக்டாக இருந்து அது கொலை தான் என்பதைக் கண்டுபிடிக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா. இதனால் வெற்றியை தனக்கு உதவியாக, அன் யூனிஃபார்ம் போலீசாக வைத்துக் கொள்கிறார் தம்பி ராமையா.
முன்னர் நடந்த முகம் சிதைக்கப்பட்ட கொலைகள் போல இப்போதும் நடக்கிறது. அந்தக் கொலைகாரனைக் கண்டு பிடிக்க வெற்றியுடன் கைகோர்க்கிறார் தம்பி ராமையா. கொலைகாரன் யார்? ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறான்? இதற்கான விடை ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கத்தின் க்ளைமாக்ஸில் இருக்கு.

ஒரு கள்ளக் காதல் வில்லங்கத்தில் தான் அந்த பைக் ஆக்சிடெண்ட் கொலை நடந்துள்ளது என்பதைச் சொல்லி முடிக்கும் போது இடைவேளை வந்துவிடுகிறது. போலீஸ் புலன் விசாரணை மூளைக்கு நல்ல லீட் தான். ஆனால் அதையே இடைவேளை வரை ஓட்டியிருப்பது தான் ரொம்ப ஓவராகிப் போச்சு. ஆனால் இடைவேளைக்குப் பிறகு, கதை மெயின் ட்ராக்கில் போக ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் நெருங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, தம்பி ராமையா, அவரது மகள் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்வதற்கு கால் மணி நேரம் சீன் வைத்து ஜவ்வாக இழுத்து கொட்டாவி விடவைத்துவிட்டார் டைரக்டர் அனீஷ் அஷ்ரஃப்.
சிலபல நல்ல கதைகளும் க்ரிப்பான கண்டெண்டும் ஹீரோ வெற்றியின் கைவசம் வந்தாலும் நடிப்பு தான் அவருக்கு வசப்பட ரொம்பவே சிரமப்படுகிறது. அதே தாடி, அதே ஹேர்ஸ்டைல், அதே லுக், அதே பாடிலாங்குவேஜ். இதையெல்லாம் கொஞ்சமாவது சேஞ்ச் பண்ண ட்ரை பண்ணுங்க வெற்றி பிரதர். கொலைகாரனாக தயாரிப்பாளர் மகேஷ்வரன் தேவதாஸ் நல்ல உயரம், செமத்தியான பாடி பில்டர் போல கட்டுமஸ்தான உடல், கொலைவெறிப்பார்வை என கவனம் ஈர்க்கிறார்.
தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி காம்பினேஷனில் சில சீன்கள் கலகலப்புக்கு க்யாரண்டி. தனது போர்ஷன் முடிந்தது தெரிந்ததும் ரெடின் கிங்ஸ்லியே “ஹாய்” சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். ரிப்போர்ட்டராக ஷில்பா மஞ்சுநாத், இந்தப் படத்தில் கொஞ்சம் பாலிஷாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு ஓகே ரகம், இசை ரொம்பசுமார் ரகம்.
‘முதல்பக்கம்’ முற்பகுதி கொஞ்சம் ‘டல்’, பிற்பகுதி கொஞ்சம் சுவாரஸ்யம்.
–மதுரை மாறன்