சரிந்த கம்பம் …கோர்ட் உத்தரவு … 3500 போலீஸ் … 3000 பவுன்சர் … தவெக திகில் மாநாடு !
மதுரை பாரபத்தியில் த.வெ.க. 2 வது மாநில மாநாடு ஆக.21ல்மதியம் 3மணி முதல் இரவு 7 மணி வரைநடை பெறுகிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நூறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்காலிகமாக மாநாட்டு திடலின் வேறொரு பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று மாலை கார் மூலம் மதுரை வந்த விஜய் , மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே ஓட்டலில் தங்கினார். முன்னதாக நேற்று காலை மதுரை வந்த அவரது பெற்றோர் ஷோபா, சந்திரசேகர் மாநாட்டு திடலை பார்வையிட்டனர். மதியம் 3மணிக்கு முதல் நிகழ்வாக கட்சி கொடியேற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி எடுத்தல், கொள்கைப் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து விஜய் பேசுவதுடன் இரவு 7 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.
மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 600 டாக்டர்கள் தயாராக உள்ளனர். 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்றாலும், ஒரு மணிக்கே தொண்டர்கள் அமரவைக்கப்பட்டு விடுவர். நிழல் கூட இல்லாத கட்டாந்தரையில் தான் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடியும் இரவு 7:00 மணிக்கு பின்பே வெளியேற முடியும் என்பதால் பிஸ்கெட், அரை லிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா என இரண்டு லட்சம் பைகள் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் மயக்கம் அடைந்தால் கார்டியோ, விபத்தில் சிக்கினால் ஆர்த்தோ சிறப்பு நிபுணர்களைக் கொண்ட முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேர்களுக்கு தடையா மாநாட்டில் 5 லட்சம் பேர் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்களை, 5ஒப்பந்ததாரர்கள் மூலம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்களை தருவதற்கு திடீரென கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்தனர். ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து மட்டும் இரண்டு லட்சம் சேர்கள் மட்டும் இறக்கப்பட்டன. இதையடுத்து அவசரமாக கேரள மாநிலத்தில் இருந்து வேறு நிறுவனங்கள் மூலம் சேர்கள் வரவழைக்கப்பட்டன.
மதுரை துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாநாட்டு திடல் இருப்பதால் நெடுஞ்சாலை முழுவதும் அனுமதியின்றி த.வெ.க., கட்சி பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சில பேனர்களை மட்டும் கட்சி நிர்வாகிகள் முன்வந்து அகற்றிய நிலையில், நெடுஞ்சாலையில் இருந்த அனைத்து பேனர்களையும் அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். மாநாட்டுக்கு இடையூறாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 கடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்