தயாரிப்பு : ‘ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்’ என்.லக்ஷ்மி பிரசாத், டைரக்ஷன் : ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்ட்டிஸ்ட் : சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல், விக்ராந்த், ரிஷி, ஒளிப்பதிவு : சுதீப் எலமன், இசை : அனிருத், எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத், ஸ்டண்ட் : கெவின் குமார், திலீப் சுப்பராயன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : சுந்தர்ராஜ் புரொடக்ஷன் டிசைனர் : அருண் வெஞ்சரமூடு, காஸ்ட்யூம் டிசைனர் : தீபாலி நூர், காஸ்ட்யூம்ஸ் : பெருமாள் செல்வம், மேக்கப் : அப்துல் ரஸாக், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம் ]
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல் ’என்ஐஏ’ [ தேசிய புலனாய்வுமுகமை] அதிகாரி பிஜு மேனனுக்கு கிடைக்கிறது. தனது டீமுடன் டோல்கேட்டை முற்றுகையிட்டு கண்டெய்னர்களை மடக்கும் ஆபரேஷனில் ஒரு கண்டெய்னரை வெடிக்கச் செய்துவிட்டு, வில்லன் வித்யுத் ஜம்வால் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைகிறார் பிஜுமேனன்.
மீதமிருக்கும் கண்டெய்னர்களுடன் தப்பிவிட்ட வித்யுத்தையும் ஷபீர் கல்லாரக்கலையும் பிடிக்க ஆஸ்பத்திரியில் அறிமுகமாகும் தற்கொலை நோயாளி ரகுராமை [ சிவகார்த்திகேயன்] களம் இறக்குகிறார் பிஜு மேனன். வடக்கன்ஸை அடக்க, துப்பாக்கியை ஒழிக்க களம் இறங்கும் ‘மதராஸி’யின் இந்த ஆபரேஷன் சக்சஸா? ஃபெயிலியரா? இதான் கதை.
முதல்ல நம்ம சிவகார்த்திகேயனுக்கு சத்தமா ஒரு “ஜே” போட்ருவோம். மனுஷன் ஆக்ஷனிலும் பெர்ஃபாமென்ஸிலும் சும்மா புகுந்து விளையாடியிருக்கார். ஓப்பனிங் சாங் ஸ்டெப்ஸ் செம ஜோர் எஸ்.கே.ப்ரோ.
”என்னோட மாலதி[ ருக்மினி வசந்த்] என்னைவிட்டுட்டுப் போய்ட்டா. அதனால தற்கொலை செய்யப் போறேன் பாலத்திலிருந்து எஸ்.கே.சொல்ல, கீழே ஒரு கூட்டம் சீக்கிரம் விழுய்யா நான் ரீல்ஸ் எடுக்கணும்” என கத்த… எஸ்.கே.வின் ஓப்பனிங் சீன் செம கலாட்டா தான். அட என்னடா இது ‘பலே பாண்டியா’ காலத்திலிருந்தே இதே சீன் தானா? என நமக்கும் சின்னதா சலிப்பு வரத்தான் செஞ்சுது. ஆனா பிஜுமேனனை தூக்கிவரும் ஆம்புலன்ஸை அந்த இடத்தில் கிராஸ் பண்ண வச்சு, எஸ்.கே.வின் ஃப்ளாஷ் பேக்கை கரெக்டா கனெக்ட் பண்ணிவிட்டார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். [ ஆமா டைரக்டரே… பொழுது விடியுற வரைக்குமா ஆம்புலன்ஸ்ல பிஜுமேனன் வந்துக்கிட்ருக்காரு?]
சின்ன வயதில் மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து தனது குடும்பமே எரிவதை கண்முன்னால் பார்த்ததிலிருந்து எஸ்.கே.வின் மனம் பேதலித்து மெண்டல் ஆஸ்பத்திரியில் பதினாறு வருசம் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நேரத்தில் தான், பிஜுமேனன் எஸ்.கே.வை களம் இறக்குகிறார்.
ஆஸ்பத்திரியில் பிஜு இருக்கும் போது எஸ்.கே.செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன. “ரெண்டு நாள்ல சாகப் போறே. அதுக்குள்ள நான் சொல்றதை செஞ்சுட்டு செத்துப் போ” என பிஜு சொல்வதற்கான காரணமும் அதன் பின்னால் இருக்கும் சூட்சுமமும் ஸ்கிரிப்ட்டுக்குள் கச்சிதமாக பொருந்தி வருகிறது.
என்.ஐ.ஏ.அதிகாரியாக பிஜுமேனன் செமத்தியா ஸ்கோர் பண்ணியிருக்கார். கேஸ் குடோனுக்குள் இருக்கும் எஸ்.கே.விடம் வித்யுத்தை சுட்டுத் தள்ளச் சொல்ல, ”நான் யாரையும் கொல்லமாட்டேன்” என எஸ்.கே.சொல்ல, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் ருக்மினி வசந்திடம், “நான் சொன்ன வேலையை முடிச்சுட்டு வரச் சொல்லுமா” என விசயத்தை முழுதாக சொல்லாமல் சாதிக்கும் சீனிலும் வில்லன் கும்பலின் அடியாட்கள் சகிதம் எஸ்.கே.வைப் போட்டுத் தள்ள வரும் என்.ஐ.ஏ.அதிகாரி ஒருவரை தெனாவெட்டாக உள்ளே அனுப்பும் சீனிலும் பிஜுமேனன் நடிப்பு நன்றாகவே உள்ளது. இவரது மகனாக வரும் விக்ராந்தும் குறையேதும் வைக்கவில்லை.
ஹீரோயின் ருக்மினி வசந்த்…. அடடா…அடடா… நம்ம மனசெல்லாம் வசந்தமாக இனிக்கிறார். இவர் வரும் எந்த சீனும் சோடை போகவில்லை. அந்தளவுக்கு நல்ல ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்கள் டைரக்டர் முருகதாஸும் ஹீரோ எஸ்.கே.வும். “எல்லாரையும் தேடித் தேடிப் போய் உதவுறது வியாதி இல்ல, வரம். உனக்கு அது இயற்கையாகவே கிடைச்சிருக்கு. எல்லோரையும் உறவாக நினைன்னு தான் எல்லா மதமும் சொல்லியிருக்கு” என எஸ்.கே.விடம் ருக்மினி பேசும் சீன் செம[முருகதாஸ்] டச்சிங்.
வில்லன்களாக வித்யுத் ஜம்வால்,ஷபீர் கல்லாரக்கல் ரெண்டு பேருமே கலக்கியிருந்தாலும் வித்யுத்திற்கு செம ஆக்ஷன் போர்ஷன் வைத்துள்ளார் டைரக்டர். அவரும் சும்மா சுத்திச் சுத்தி அடித்து அதகளம் பண்ணியுள்ளார்.
கேமராமேன் சுதீப் எலமன், சரியான வேலைக்கார எமனா இருப்பார் போல. டோல்கேட்டில் கண்டெய்னர்களை மடக்கும் ஆக்ஷனில், கேஸ்குடோனுக்குள் நடக்கும் ஆக்ஷனில் தனது வித்தையைக் காட்டியிருக்கார் சுதீப் எலமன். இடைவேளைக்குப் பிறகு நமக்கு கொஞ்சம் டயர்டு வருது. எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்துக்கும் டயர்டு வந்துருக்கும் போல.
படத்திற்கு மாஸ் சப்போர்ட்டர்ஸ்னா அது ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் கெவின்குமாரும் திலீப் சுப்பராயனும் தான். ஒவ்வொரு ஃபைட்டும் ஒவ்வொரு ரகம், எல்லாமே சூப்பர் ஃபாஸ்ட் டிசைன் ஆக்ஷன் தான். அதிலும் தனி அறையில் இருக்கும் எஸ்.கே.வுக்கு மனநிலை உச்சநிலைக்குப் போனதும் நடக்கும் ஃபைட் செமத்தியான ஆக்ஷன் கம்போஸிங். இதே போல் அனிருத்தும் தனது பங்கிற்கு ‘மதராஸி’க்கு பலம் சேர்க்கிறார்.
“அமைதிப்பூங்கான்றதுக்கு அடையாளம் காட்ட தமிழ்நாடு ஒண்ணு தான் இருக்கு. அதை டிஸ்டர்ப் பண்ண எவன் வந்தாலும் விடமாட்டேன்” என்ற வசனமும் கண்டெய்னர்களிலிருந்து துப்பாக்கிகளை ஏற்றிச் செல்ல வரும் ‘ஓம் முருகா’ போட், என்.ஐ.ஏ.வில் இருக்கும் வடநாட்டு புல்லுருவிகள்னு தனது டிரேட் மார்க் மெசேஜை சொல்லிய ஏ.ஆர்.முருகதாஸுக்கு தாரளமாக சபாஷ் போடலாம். [இதுவே இங்குள்ள திமுக எதிரி யூடியூப்பர்களுக்கு எரிச்சலைக் கிளப்பத்தான் செய்யும். எரிந்து வெந்து சாகட்டும். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்] வரிசையாக சில தோல்விகள் கற்றுத் தந்த பாடத்தால், அப்டேட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்களின் சப்போர்ட்டால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கார் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘மாவீரன்’, ‘அமரன்’ இதையடுத்து இப்போது ‘மதராஸி’ என வரிசையாக ஹிட் சாம்ராஜ்யத்தை தக்க வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு “ஜே…’வை சத்தமாக போட்டாலும் தப்பேயில்லை. நீங்க இன்னும் இன்னும் நல்லா உயரணும் எஸ்.கே.ப்ரோ.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.