நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !
நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !
கரூர் – வேலுசாமிபுரத்தில் கடந்த செப்-27 அன்று தவெக விஜய் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை தாண்டியும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
திமுகவின் திட்டமிட்ட சதி வேலை இது என்பதாக தொடங்கி இன்னும் பலவாறும் ஆதாரங்கள் அற்ற விஷமப் பிரச்சாரங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, 41 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய பிறகும், இதுபோன்று திட்டமிட்ட வகையில் பரப்பப்படும் வதந்திகளால் மேலும் சமூக கொந்தளிப்பை உருவாக்க சிலர் திட்டமிட்டு வருகிறார்கள் என்பதும் அம்பலமாகியிருக்கிறது. அரசு தரப்பில் போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அநியாய உயிர்ப்பலி குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருக்கிறார், முதல்வர் முக ஸ்டாலின்.
தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதும் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது, தவெக. இதற்கு மத்தியில், “விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையோடு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் கதவை தட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார்.
”மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 09.12.2014 அன்று அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் எந்த வகையிலும் பிரச்சாரத்திற்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது” என்று உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை அப்பட்டமாக மீறியிருக்கிறார் என்பதாலும், இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த வழக்கை தொடுத்திருப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார்.
இதுஒருபுறமிருக்க, இதே போன்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றத்தில் பல்வேறு ரிட் வழக்குகளை தாக்கல் செய்யப்போவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
* தமிழகத்தில் பொதுவில் அரசியல் கட்சிகள் அல்லது பிற அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் அனைத்து வகையிலான கூட்டங்களை நடத்துவது குறித்து, பொருத்தமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்க வேண்டும்.

* தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPRD) ஆகிய அமைப்புகளின் சார்பில் பல்வேறு தருணங்களில் கூட்ட மேலாண்மை குறித்தான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த முறையிலான, கூட்டங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
* போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, அத்தகைய பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய கடுமையான விதிமுறைகளை விதிக்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகை, இழப்பீட்டு பத்திரங்களை பெற வேண்டும். கரூரில் நடைபெற்றது போல, ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டால் சரிசெய்ய முடியாத காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் பொருத்தமான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

* இந்த விவகாரம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரும் வரையில், விசாரணை முடிவடையும் வரையில் தவெக கட்சியினர் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.
* நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 இலட்சமும்; காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 10 இலட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்வதற்கு ஆவண செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பொதுவில், இனி இதுபோன்று சம்பவங்கள் நிகழாத வண்ணம் பொருத்தமான விதிகளை வகுக்க வேண்டுமென்ற கோரிக்கை ஒருபுறமிருக்க, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையும்; கூட்டம் நடத்தும் கட்சியிடமிருந்தே இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டுமென்று எழுந்திருக்கும் கோரிக்கையும் முக்கியத்துவமான கோரிக்கைகளாக அமைந்திருக்கின்றன.
பொருத்திருந்து பார்ப்போம். என்னதான் நடக்கிறதென்று.
– ஆதிரன்.
TVK கட்சிக்கு தடை | கரூர் களத்தில் கோவன் – வீடியோ
Comments are closed, but trackbacks and pingbacks are open.