இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !
கலைஞர் காலம் முதல் உதயநிதி காலம் வரை … இல்லை, இல்லை இன்பநிதி காலம் வரை … இவர்கள் இல்லாமல் திமுக இல்லை என்கிற நிலை எப்படி உருவானதோ, அவ்வழியேதான் அண்ணன் நேரு இல்லாத திமுகவும் இல்லை என்பதே யதார்த்தம்.
கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை. இவையெல்லாம், வெறும் வார்த்தைகள் அல்ல; அந்த இயக்கத்தோடும் அண்ணன் நேருவோடும் உள்ள உள்ளார்ந்த பிணைப்பின் வெளிப்பாடுதான், திமுகவின் முதன்மை செயலர் பதவி. தமிழகத்தில் எங்கெல்லாம் திமுக தொய்வாக இருப்பதாக கட்சித்தலைமை கருதியதோ, அங்கெல்லாம் கட்சிப்பணியாற்ற முன்கள வீரராக அனுப்பி வைக்கப்பட்டவர்தான் அண்ணன் கே.என்.நேரு. இவையெல்லாம், கலைஞர் காலத்துக்குப்பிறகு, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்தவைகள். வருங்கால திமுகவின் முகமாக பார்க்கப்படும் உதயநிதியும் இவற்றுக்கு எதிராக எந்த தருணத்திலும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. குறைந்தபட்சம், முணுமுணுத்ததுகூட கிடையாது.
தன்னை இந்த அளவுக்கு ஆளாக்கி, தமிழகத்தின் முன்னணி ஆளுமைகளுள் ஒருவராக உயர்த்திய தனது சொந்த மாவட்டமான திருச்சியை கட்சி ரீதியாக இரண்டாக பிரித்தபோதும் கூட அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் கட்சியின் உத்தரவாக ஏற்று செயல்படுத்தியவர் கே.என்.நேரு. பாரம்பரியமான திராவிட குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், தனக்குப்பிறகு அரசியலில் காலெடுத்து வைத்தவரும் தனது ஜூனியருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் அரவணைத்து அரசியல் செய்யும் அளவுக்கு பக்குவபட்டவர். இருவரும் பங்கேற்கும் பொது நிகழ்வுகளில் அன்பில் மகேஷுக்காக மேடையில் காத்திருக்கும் அளவுக்கு தனது அரசியல் முதிர்ச்சியை சபையறிய செய்தவர். இதுபோன்ற விசயங்கள்தான் உதயநிதியையும் கூட, ஈர்த்த அம்சங்களாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அவரது பேச்சும் சரி, செயலும் சரி ”வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டி கொண்டு வரும்” அளவுக்கு அவரது களப்பணிகளை கட்சி நிர்வாகிகள் அறியாதவர்கள் அல்ல.
இது கிடக்கட்டும். தற்போது, அண்ணனின் பிறந்தநாளுக்காக திருச்சியில் அவருடைய ஆதரவாளர்கள் நகர் முழுவதும் பிளக்ஸ் பேனர்களை முன்னதாகவே நிறுவியிருந்தனர். அதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில், “இனி யாரும் எனது பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கவோ, சுவரொட்டி ஒட்டவோ கூடாது. மீறி வைத்தால் போலீசிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் சொல்லி அகற்ற வேண்டியிருக்கும்” என்ற அளவுக்கு கடுமையாகவே கறார் காட்டியிருக்கிறார் கே.என்.நேரு.
ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி மகன் திருமணத்திற்கு திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருக்கும் நிலையில், தலைவரை வரவேற்று பேனர் வையுங்கள். ஆனால், எனக்கு வைக்காதீர்கள் என்றிருக்கிறார்.
இந்த உள் விவகாரங்களையெல்லாம் அறியாதவர்கள், சில ஊடகங்கள் அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடிதான் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று வரிந்துகட்டி எழுதத்தொடங்கிவிட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, தலைமை கை விரித்துவிட்டது. சிறை செல்வது உறுதி என்றெல்லாம்கூட பேசி வருவதாக தகவல். கே.என். நேருவை காலி செய்ய சந்தர்ப்பம் தேடி வந்தவர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக போனதால், அவர்களும் அவர்களது பங்கிற்கு நாள்தோறும் பல கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காலத்து அரசியல்வாதியாக இருக்கலாம். அவரது பேச்சு கரடுமுரடாக இருக்கலாம். ஆனால், கால மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளத் தெரிந்த தேர்ந்த அரசியல்வாதி கே.என்.நேரு என்று சொன்னால் அது மிகையல்ல. இன்றளவும் பேசப்படும் அவரது ஸ்மார்ட் ஒர்க் ஒன்றே போதுமான சான்று என்கிறார்கள்.
காலையில் ஒரு மாவட்டம் மாலையில் மற்றொரு மாவட்டம் விடிந்தால் அறிவாலயம் என இந்த வயதிலும் பம்பரமாக சுற்றுவதால்தான் அவர் முதன்மை செயலராக உயர்ந்திருக்கிறார். பல்வேறு தடைகளையும் தாண்டி அரசியலில் நிலைத்தும் இருக்கிறார். ”தனது தம்பியின் மரணம். தனது இல்லத் திருமணத்தின் போது சிறை செல்ல நேர்ந்த துயரம், வருமான வரித்துறையினரின் அதிரடி, அமலாக்கத்துறையுன் ரெய்டு என எவ்வளவோ பார்த்துவிட்டார். வாங்காத வழக்கும் இல்லை. போகாத ஜெயிலும் இல்லை. இவ்வளவுக்குப்பிறகும் மனம் தளராமல் அரசியல் நீரோட்டத்தில் பயணிப்பதே பெரும் சாதனைதான்” என்கிறார்கள் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.
அவரது எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலான ஏதோ, ஒரு சிக்கலான கேள்வியை கேட்டுவிட்டதாக கருதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடத்தில், “இதையெல்லாம் கண்டு அஞ்சுவற்கு ஒன்றுமில்லை. இதுபோன்ற அச்சுறுத்தலோ, வழக்கோ என்கு புதியதில்லை. நான் குற்றமற்றவன் என்பதை சட்டத்தின் வாயிலாக நிரூபிப்பேன். ” என தனக்கே உரிய பாணியில் சிம்பிளாக சொல்லிவிட்டு கிளம்பிய போதே, கே.என்.நேரு என்றால் இப்படித்தான் என்பதை பலரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
”அட, வேணும்னா என் பேரையும்கூட சேர்த்து எழுதிக்கோங்க ப்ரோ. காசே இல்லாத விளம்பரம்னா எங்களுக்கு கசக்குமா, என்ன?”னு நக்கலாக சிரித்தபடியே கலைந்தார்கள் உடனிருந்த உடன்பிறப்புகள்!
— ரூபன்ஜி







Comments are closed, but trackbacks and pingbacks are open.