நியோமேக்ஸ் ! டிசம்பர் 5 தான் கடைசி… கறார் காட்டிய நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
நியோமேக்ஸ் ! டிசம்பர் 5 தான் கடைசி… கறார் காட்டிய நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில் , நவம்பர் 20 அன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முக்கியமான 7 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முதல் விசயமாக, நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில்மெண்ட் என்ற பெயரில் மீண்டும் ஒரு மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள் என்பதான குற்றச்சாட்டின் அடிப்படையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் பாலா, கமலக்கண்ணன் மற்றும் திருச்சியை சேர்ந்த முத்துக்குமரன் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக பதிவான புதிய வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று நியோமேக்ஸ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிர்வாக முறைப்படி நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக பட்டியலிடப்படவில்லை. தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பட்டியலிடப்பட்டதும், உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
இரண்டாவது விசயமாக, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஏலம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு முந்தைய உத்தரவின்படி, நியோமேக்ஸ் இயக்குநர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, 11 பேர் மூடி முத்திரையிடப்பட்ட ஏல கோரிக்கைகளை வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியான எஸ்.பி. டாக்டர் கே.சரவணக்குமார் வசம் வந்து சேர்ந்திருந்தது. அதில், ஒருவர் ஏலத்தில் பங்கேற்பதற்கான முன்தொகையை செலுத்தாத காரணத்தால், அவரை தவிர மற்ற 10 பேரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்கநகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஏலம் விடக்கூடாதென்று சிலர் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த நிலையில், ஆட்சேபனைக்குரிய நகைகளை ஒதுக்கிவிட்டு மற்ற நகைகளை மட்டும் ஏலம் விடுவது என்று முடிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், முதல் ஏலத்தில் பங்கேற்ற 10 தகுதிவாய்ந்த பிரதிநிகளுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல்முறை நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்று அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்டிருந்த சிவகாசி ராமமூர்த்தி, மறு ஏலத்தில் தான் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதையடுத்து, அவரை தவிர்த்த மற்றவர்களை கொண்டு மறு ஏலம் நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் 18 ஆம் தேதியன்று வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரி முன்னிலையில் வீடியோ காட்சிப் பதிவுடன் நடைபெற்ற பொது ஏலத்தில், 715.870 கிராம் அளவிலான தங்க நகைகளுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ69,17,450/- என்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகபட்சமாக ரூ75,36,000/-க்கு ஏலம் கேட்ட கோவையை சேர்ந்த ராமஜெயம் ஜூவல்லரியின் உரிமையாளர் ஜி.எத்திராஜூக்கு அவை ஏலத்தில் முடிவானது. இதேபோல, ரூ 13,51,970/- குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகபட்சமாக ரூ15,60,000/-க்கு ஏலம் கேட்ட கோவை, பீளமேட்டை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஏலம் முடிவானது. இதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி நகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; அவ்வாறு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நகைகளை வீடியோ – புகைப்பட ஆதாரங்களுடன் சிறப்பு நீதிமன்றத்தில் ஏலம் நடைபெற்றது தொடர்பான தகவல்களை மனுவாக தாக்கல் செய்துவிட வேண்டுமென்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.
தவிர்க்கவியலாத காரணத்தால் மறு ஏலத்தில் தான் பங்கேற்கவியலாமல் போனதாகவும், இப்போது இறுதியான தொகையைவிட கூடுதல் விலைக்கு ஏலம் எடுக்க முன்வருவதாகவும் தெரிவித்த நிலையில், அக்கோரிக்கையை நிராகரித்துவிட்ட நீதியரசர் பரதசக்ரவர்த்தி எஞ்சிய நகைகளுக்கான ஏலத்தில் பங்கேற்குமாறு அறுவுறுத்தினார்.
மூன்றாவது விவகாரமாக, நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை அட்டாச்மெண்ட் செய்வது தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரஜினி மற்றும் லாவண்யா ஆகியோர், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மிகவும் சிரமப்பட்டு சேகரித்துக் கொடுத்த விவரங்களின் அடிப்படையில்கூட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சொத்துக்களை அட்டாட்ச் செய்ய மறுக்கிறார்கள். கால தாமதம் செய்கிறார்கள். குறிப்பாக, பெஞ்சமின், ராமமூர்த்தி மனைவி கமலா, தேனி ராயல் ரிசார்ட்ஸ் சொத்துக்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டும்கூட இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதாக குற்றஞ்சுமத்தினார்கள்.
இதற்கு பதில் அளித்த, அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் “ஒரு சில தனிநபர்கள் குறித்தே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதாகவும்; வரம்பு மீறி பேசுவதாகவும்; உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளை தங்கள் மீது தொடர்ந்து வைப்பதாகவும்; நாங்கள் என்ன செய்யவில்லை என்பதை குறிப்பாக சொல்லுங்கள் என்பதாக” கடும் ஆட்சேபணையை தெரிவித்தார்.
அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் ரஜினி மற்றும் லாவண்யா ஆகியோர், சொத்துக்களை அட்டாச் செய்யும் விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்ற தகவலே கிடைப்பதில்லை. அதையே தர மறுக்கிறார்கள். அப்படி இருக்க எப்படி குறிப்பாக சொல்ல முடியும் என்பதாக எதிர்க்கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து, இருதரப்பு விவாதத்துக்கு பதிலளித்து நீதியரசர் பரதசக்ரவர்த்தி, அரசு வழக்கறிஞர் முனியப்பராஜுவின் ஒப்புதலோடும், “இதுபோன்ற தகவல்களை வழக்கின் விசாரணை அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டறிந்து கொள்ளுமாறும்; அவசியம் எனில், பெண்டிரைவில் டிஜிட்டல் நகலை வழங்குவார்கள்.” என்றும் தெரிவித்தார்.
நான்காவது விவகாரமாக, இதுவரை பெறப்பட்ட புகார்களின் நிலையைப் பொருத்தமட்டில், முதற்கட்டமாக பெறப்பட்ட 24,583 புகாரில் சுமார் 3700 புகார்கள் சிக்கல் மற்றும் சந்தேகத்திற்குரிய புகார்களாக இருந்து வருவதாகவும்; இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட 44,000-க்கும் மேற்பட்ட புகாரில் 23,803 புகார்களை தகவலேற்றம் செய்துவிட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நியோமேக்ஸ் ! டிசம்பர் 5 தான் கடைசி… கறார் காட்டிய நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
சந்தேகத்திற்குரிய புகார்கள் குறித்து இறுதி முடிவு எடுக்க, நியோமேக்ஸ் நிறுவனத்தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை என்ற தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதிவு செய்த நிலையில், உடனடியாக அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார், நியோமேக்ஸ் தரப்பு வழக்கறிஞர்.
ஐந்தாவது விவகாரமாக, புதிய சாஃப்ட்வேர் தயார் செய்வது தொடர்பான விவாதத்தில், நாள்தோறும் அப்பணியை உடனிருந்து தான் உள்ளிட்டு உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாகவும்; நிர்வாக ரீதியிலான அனுமதிகளை பெறுவது உள்ளிட்ட சில காரணங்களால் அப்பணியை முழுமையாக முடிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டிருந்தார். செட்டில்மெண்ட் பணிகளை இது தாமதப்படுத்துகிறது என்பதாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்ட, “இதனால் தாமதம் எதுவுமில்லை. புகார்தாரர்களை சரிபார்க்கும் பணிகள் இணையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கெனவே சில நிலங்களை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை ஏலம் விட்டு பிரித்துக் கொடுப்பதற்குள் சாஃப்ட்வேர் தயாரானால் போதுமானது.” என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி குறிப்பிட்டார்.

ஆறாவது விவகாரமாக, முதற்கட்டமாக பெறப்பட்ட 24,583 பேர்களுக்கான செட்டில்மெண்டை முதல் முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டுமென வழக்கறிஞர் ரஜினி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, இதுவரை புகார் பெறப்பட்ட மொத்தம் உள்ள 60,000-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்தான் செட்டில்மெண்ட் நடைமுறையை தொடர வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட, வழக்கறிஞர் ரஜினி ஏற்கெனவே, 2500 கோடிகளுக்கான நிவாரணத்துக்கு அதற்கு நிகராக 2500 கோடி ரூபாய்களுக்கான சொத்துக்கள் இருந்தது. தற்போது, புகாரின் மதிப்பு 6000 கோடியை தாண்டிய நிலையில் , நிவாரணத்தின் சதவீதம் மாறுபடும் என வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதியரசர் அதற்கு இணையான சொத்துக்கள் இருக்கிறது என நிறுவனத்தரப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய சொத்துக்கள் அட்டாச் செய்யப்பட்டு வருகிறது. இறுதியாக அவற்றை பரிசீலிக்கலாம் என்பதாக நீதியரசர் குறிப்பிட்டார்.
நிறைவாக, இந்த வழக்கின் விசாரணையை டிச-05 அன்று ஒத்தி வைத்தார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஃபோர்ட்போலியோ மாற்றம் செய்யப்படும் வழக்கமான நடைமுறையின் காரணமாக அன்றைய தேதியில், தான் எந்த அமர்வில் அங்கம் வகித்தாலும் ஒருவேளை மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்டாலும், இது தனிச்சிறப்பாக பட்டியலிடப்பட்ட வழக்கு என்பதால் எனது நீதிமன்றம் முன்பாகவே பட்டியலிடப்படும் என்பதாக நீதியரசர் குறிப்பிட்டார்.

முதற்கட்டமாக தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரை பொறுத்தமட்டில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மற்றும் புகார்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், புதிய சொத்துக்களை அட்டாட்ச்மெண்ட் செய்யும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டாக வேண்டும். இந்த இடத்தில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு உதவியாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள், முன்னணி ஏஜெண்டுகளின் சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை அட்டாச் செய்வதற்கான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒன்று அவர்கள் நேரடியாகவே விசாரணை அதிகாரியிடம் அவற்றை மனுவாக வழங்கலாம். அல்லது, ஒரு வழக்கறிஞர் வழியாக நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யலாம்.
“புகார்களின் அளவு 6000 கோடிகளுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், அதற்கு இணையான சொத்துக்களை அட்டாச் செய்தால் மட்டுமே, குறைந்தபட்சம் போட்ட முதலீட்டுத்தொகையாவது கிடைக்கும். அவ்வாறு சொத்துக்களை அட்டாச்மெண்ட் செய்வதற்கு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலும் முன்முயற்சி எடுத்தாக வேண்டும். தங்களுக்குத் தெரிந்த நிறுவனத்தின் சொத்துக்களை அடையாளம் கண்டு சொன்னால், அவற்றை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக” தேனி மாவட்ட நியோமேக்ஸ் சங்கத்தின் சார்பில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, இதுவரை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் நேரிலும், தபால் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளித்தவர்கள் தங்களது புகார் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? அவற்றை எவ்வாறு சரிபார்ப்பது? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிவரும் நிலையில், ”டிச-05 ஆம் தேதிக்குப்பிறகு முதலீட்டாளர்களின் புகார் தொடர்பான எந்த ஒரு ஆட்சேபனைகளையும் தான் கருத்தில் கொள்ளப்போவதில்லை” என்பதாக, நீதியரசர் பரதசக்ரவர்த்தி திட்டவட்டமாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை புகார் அளித்தவர்கள் தங்களது புகாரின் நிலை குறித்து அறிந்து கொள்வது எப்படி? அதில், முரண்பாடுகள் இருப்பின் எவ்வாறு முறையிடுவது? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.