ஒரு பண்டிகை என்ன செய்யும்?
பகை கொண்டு எதிர் நின்று ஒருவரை ஒருவர் கொன்று புசித்துச் செமிக்கும் நிலையில் சமர் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட ஒரு பண்டிகை பரம எதிரிகளையும் ஒன்றுகூடி கை கோர்த்து சில மணிநேரங்கள் மகிழச் செய்தது என்றால் நம்ப முடிகிறதா?
நம்புங்கள்.
அதிசயங்கள் நிறைந்ததே நமது வரலாறு.
வாங்க அந்த வரலாறையும் பார்த்து விடுவோம்.

1914 ஆம் ஆண்டு என்று கூறினால் வரலாற்று ஆர்வலர்கள் உடனே முதல் உலக யுத்தம் என்று கூறிவிடுவார்கள். இரண்டாம் உலகப்போர் – அடால்ஃப் ஹிட்லர் , தேமே என்று அமைதியாக இருந்து போலாந்தின் மீது பேன்சர்களுடன் இறங்கியதன் விளைவாக ஆரம்பித்தது.
முதலாம் உலகப்போர் எப்படி ஆரம்பித்தது?
28 ஜூன் 1914 ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியின் பட்டத்து இளவரசர் ஆர்ச் ட்யூக் ஃபெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரையும் செராஜிவோ நகரில் வைத்து 19 வயதான கேவ்ரிலோ ப்ரின்சிப் சுட்டுக் படுகொலை செய்ய அங்கிருந்து நேர்ந்த சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கியது.
பிரிட்டன்
பிரான்சு
ரஷ்யா
இத்தாலி
அமெரிக்கா
ஜப்பான் ஆகிய நாடுகள் நேச நாடுகளாக ஒன்றுகூடி நின்றன.
ஜெர்மனி தலைமையில் ஆஸ்திரியா ஹங்கேரி ஒட்டமான் பேரரசு பல்கேரியா ஆகியன மைய சக்தி நாடுகளாக ஓரணியில் நின்றன.
ஐரோப்பாவில் வேனில் காலம் 28 ஜூலை 1914 முதல் தொடங்கியது போர்.
அப்போது பதுங்குகுழி வெட்டி போர் புரியும் TRENCH WARFARE தான் பிரபலம்.
பல மைல்களுக்கு பதுங்கு குழிகளை வெட்டி முள் வேலிகள் அமைத்து எதிரிகளும் எதிர் எதிர் மோதிக்கொள்வர்.
வெயில் காலத்தில் ஆரம்பித்த போர் அந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு முடிவுக்கு வந்து விடும். புள்ள குட்டியை பார்க்க வீட்டுக்கு போய் கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால் போர் இரக்கமற்றது.
மழைக்காலம் வந்தது. பதுங்கு குழிகள் சில நாட்கள் நீரினாலும் பல நாட்கள் ரத்தத்தாலும் நிரம்பின.
உயிர் இழந்தோர் பேறு பெற்றோர் என்று எண்ணும் அளவு உயிருடன் இருந்தாலும் அங்கங்களை இழந்து குத்தியிரும் குலையுயிருமாய் போர்க்களத்தில் பலரும் தத்தளித்தனர்.
இந்நிலையில் போர் தொடங்கிய சில மாதங்களில் ரோம் வாடிகன் நகரில் பதினைந்தாம் பெணிடிக்ட் அவர்கள் போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“தயவு கூர்ந்து பண்டிகை காலம் வருகிறது. போருக்கு ஓய்வு அளித்து பண்டிகையை கொண்டாடுங்கள்” என்று அந்தந்த நாட்டு தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மதம் தலைக்கு ஏறிய தலைவர்களின் மதிக்கு மதத்தலைவர் கூற்று உரைக்கவில்லை.
பெரிய தலைகள் போர் ஓய்வுக்கு தயாரில்லை. தினந்தோறும் பல்லாயிரம் உயிர்களை ஈவு இரக்கமின்றி ஓய்வு உலைச்சலின்றி கொன்றொழித்துக் கொண்டிருந்தது “போர் இயந்திரம்” இந்நிலையில் அந்த நன்னாளும் வந்தது.
ஆம்..
பெத்லகேமின் ஆட்டுத் தொழுவத்தில் தேவ தூதனாகப் பிறந்த ஏசுவின் பிறந்த நாளும் நெருங்கிற்று.
டிசம்பர் 24,1914 மேற்கு பிராந்தியத்தில் ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸை தனது வீரர்கள் கொண்டாடுவதற்கும் அவர்களது மனநிலையை மேம்படுத்துவதற்கும் ஜெர்மனி மன்னர் இரண்டாம் வில்லியம் போர்க்களத்திற்கு கிறிஸ்துமஸ் மரங்களைப் பரிசாக அனுப்பினார்.
ஜெர்மனி வீரர்கள் அந்த கிறிஸ்துமஸ் மரங்களை பதுங்கு குழிகளுக்கு வெளியே வைத்து , மெழுகுவர்த்திகள் ஏற்றி “அமைதியான இரவு (SILENT NIGHT)” என்ற கரோல் பாடலைப் பாடினர்.
அங்கிருந்து சில ஃபர்லாங்கு தூரத்தில் பிரிட்டன் படையினரின் பதுங்கு குழிகளுக்குள் இருந்தும் படை வீரர்கள் கரோல் பாடினர்.
ஜெர்மனியின் சாக்சான் படை வீரர்கள் பிரிட்டன் வீரர்களுடன் பேசி இணக்கம் ஏற்பட்டதில்,இரண்டு படை வீரர்களும் ஆள் நடமாட தடை விதிக்கப்பட்ட No Man’s Land இல் இறங்கி தங்களுக்குள் பரிசு, இனிப்பு ஆகியவற்றை பரிமாறிக் கொண்டனர். ஆட்டம் பாட்டம் கேளிக்கை என்று களித்தனர். கால்பந்தும் விளையாடினர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்நேரத்தில் ஆணையிடும் நிலையில் இருந்த இருபக்க கீழ்நிலை கமாண்டர்கள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் இதற்காக தண்டனையும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் கொண்டாட்ட மனநிலை புத்தாண்டு வரை தொடர்ந்து. எனினும் இந்த நிலை, கிழக்கு பிராந்தியத்தில் ப்ரெஞ்சு படையின் ஆதிக்கத்தில் நடந்தமையால் ஜெர்மனி பிரான்சுக்கு இடையே அதீத பகைமை இருந்தமையால் அந்த பகுதிகளில் இது நடக்கவில்லை.
ரஷ்யாவுடன் போர் நடந்த பகுதிகளிலும் இத்தகைய போர் நிறுத்தம் நடைபெற வில்லை. காரணம் அப்போது வரை ரஷ்யா ஜூலியன் காலண்டரை கடைபிடித்து வந்தமையால், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஜனவரி மாதமே நிகழ்ந்து வந்தது.
பிரிட்டிஷ் – ஜெர்மனிக்கு இடையே நடந்த மேற்கு பிராந்திய போர் பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே இந்த அதிசயம் நிகழ்ந்தது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆச்சரியமான நிகழ்வு வேறெங்கும் பதிவு செய்யப்பட்டதில்லை அதாவது அதற்கு முந்தைய தினம் வரை ஒருவரை கொன்று அதன் மூலம் இன்பம் காண முடியும் என்று நம்பிய எதிரி நாட்டு வீரர்களை ஒரு பண்டிகை ஒன்றிணைத்தது.
அப்போது அவர்களின் மனதில் தோன்றியிருக்கும் தானே. யாரோ பலன் பெற நாம் அடித்துக் கொண்டு ஒருவரை கொன்று அதன் மூலம் சுகம் காண்கிறோம். இது எவ்வளவு அபத்தமானது இருவருக்கும் இந்த அமைதியும் பண்டிகையும் இந்த இனிப்பும் இந்த பரிசுகளும் எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது என்று உணர்ந்திருப்பார்கள் தானே…
இந்த போர் நிறுத்தம் அடுத்த சில நாட்கள் தொடர்ந்தாலும் பிறகு அடுத்த நான்கு ஆண்டுகளில் சில கோடி உயிர்களைக் காவு வாங்கி நவம்பர் 1918 ஆம் ஆண்டு போர் ஓய்ந்தது. அதற்கு மேல் போரைத் தொடர யாருக்கும் திராணி இருக்கவில்லை.
மக்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சி தரும் இயல்பு பண்டிகைகளுக்கு உண்டு.
அத்தகைய சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் நாளை நெருங்குகிறோம்.
இனிய நண்பர்கள் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துகள்…
அன்பை விதைத்த இடத்தில் அமைதியே முளைக்கும்..
அதை நம் சந்ததிகள் அறுவடை செய்யும்..
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.