யார் அந்தத் தியாகிகள்? ஏன் கொல்லப்பட்டார்கள்?
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் இந்நாள் முதலமைச்சரை சந்தித்து ஆதரவாளர்களுடன் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்ட செய்தி இன்றைய பரபரப்பாகவும், தியாகத் தலைவர் மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், முதலமைச்சரே முன்னின்று செவ்வணக்க முழக்கமிட்டு, மருத்துவ ஆய்வுக்கு உடலை அனுப்பி வைத்த நெகிழ்வான நிகழ்வு நேற்றைய நாளில் முதன்மைப்படுத்த நிலையில், அதிக கவனம் பெறாத ஒரு செய்தியைப் பகிர வேண்டிய தேவை உள்ளது.
(பிப்.26) தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக காந்தியவாதி பட்டுக்கோட்டை வை.நாடிமுத்துப் பிள்ளை, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் சத்தியகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த நாகப்பன் படையாச்சி, குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்ததுடன், நினைவு மண்டபங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதில் முக்கியமானது, சேலம் சிறையில் உயிர் நீத்த 22 தியாகிகளுக்கான நினைவுத் தூண் மண்டபம்.
சிறையில் உயிர் நீத்த அந்த 22 தியாகிகள் யார்? ஏன் அவர்கள் உயிரை இழக்க வேண்டியிருந்தது?
இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. அதனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆளாயினர். தமிழகத்திலும் கம்யூனிஸ்ட்டுகளை போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். தலைமறைவாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களில் திராவிட இயக்கத்தினருக்கு பங்கு உண்டு. தோழர் ஜீவானந்தம், மணலி கந்தசாமி போன்றோரை விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி தன் வீட்டில் பாதுகாத்திருக்கிறார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தோழர் ஜீவானந்தத்தை சில காலம் பாதுகாத்து வைத்தார்.
சிக்கியவர்களை சித்திரவதை செய்து சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தியது அரசாங்கம். சேலம் மத்திய சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. குற்றச் செயல் புரிந்த கைதிகளைப் போல, அரசியல் கைதிகளான கம்யூனிஸ்ட் தோழர்களும் கைதி எண்ணுடன் சட்டை அணிய வேண்டும், குல்லா போட்டுக் கொள்ள வேண்டும் என்று சிறைக் காவலர்கள் இழிவுபடுத்தினார்கள்.
சிறைக்குள் தண்ணீர் இறைக்க மாடுகளுக்குப் பதில், கம்யூனிஸ்ட் கைதிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சாலை போடுவதற்காகப் பயன்படுத்தும் கல் உருளையை இழுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். அதற்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் மறுத்தபோது, அவர்களை மோசமான வார்த்தைகளால் சிறைக்காவலர்கள் பேச, பதிலுக்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் பேச, அது வாக்கு வாதமானது.
அதையே காரணமாக வைத்து, 11-2-1950 அன்று சேலம் மத்திய சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்ததாலும், தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் இருந்ததாலும், இந்தக் கொடூரம் வெளியே தெரியாதபடி மறைக்க முயன்றது ஆளும் வர்க்கம்.
வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில், சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு நடந்த கொடுமையை ஊர் ஊருக்கும் மேடை போட்டு பொதுமக்களிடம் கொண்டு சென்றன திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய கட்டுரையும், தி.மு.க. மேடைகள்தோறும் உணர்ச்சிப்பூர்வமான கலைஞரின் பேச்சும் சிறைக் கொடுமையையும்-துடிதுடிக்க கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் நிலையையும் கண்முன் நிறுத்தி, பொதுமக்களை கலங்கச் செய்தன.

திராவிடர் கழகத்தின் சார்பில் 5-3-1950 அன்று தமிழகத்தின் பல இடங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தி, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி சர்க்காருக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும் என பெரியார் உத்தரவிட, அதன்படியே திராவிடர் கழகத்தினர் கூட்டம் நடத்தி, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, சிறைக்குள் புதைக்கப்பட இருந்த உண்மைகளை, பொதுமக்கள் முன்னிலையில் தெருவில் போட்டு உடைத்தனர் பெரியார் தொண்டர்கள்.
அரசியல் களத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமும் திராவிட இயக்கமும் உடன்பட்டும் நின்றுள்ளன. முரண்பட்டும் இருந்துள்ளன. ஆனால், பொதுவாழ்வில், தகைசால் தமிழர்களான கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகங்களை திராவிட இயக்கம் போற்றத் தவறியதேயில்லை.
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த, அந்த சேலம் சிறைப் படுகொலைகளின் நினைவாகத்தான் 22 தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
— கோவி.லெனின்








Comments are closed, but trackbacks and pingbacks are open.