காளைகளோடு தேர்தல் களத்தில் குதித்த டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் !
காளைகளோடு தேர்தல் களத்தில் குதித்த டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் !
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திருச்சியின் அசைக்க முடியாத ஆளுமையாக வலம்வரும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, காளை வளர்ப்போர் சங்கம் சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் மாநில மகளிர் அணி இணைசெயலர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவருடன் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று பரிசுகளை வழங்கியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

த.வெ.க.வை தவிர, மற்ற கட்சிகளின் கூட்டணி சேர்க்கைகள் முடிவுக்கு வந்திருந்தாலும், இன்னும் யாருக்கு எத்தனை சீட்? யாருக்கு எந்த தொகுதி? என்பது குறித்து இறுதி முடிவுக்கு பிரதான கட்சிகளே வராத நிலையில், திருச்சி இலால்குடி தொகுதியில் இவர்தான் வேட்பாளர் என்று இப்போதே அதிமுக தரப்பில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதுதான் பரபரப்புக்கு காரணம்.
தமிழகத்தில் லாட்டரி பிசினஸ் மூலம் பிரபலமான மார்ட்டினின் மனைவிதான், இந்த டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின். இலால்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக இவரை, தொகுதிக்கு அறிமுகம் செய்யும் முகமாகவே, இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள். தொடர்ந்து நான்கு முறையாகவும் இலால்குடி தொகுதியை தன்வசமாக்கியிருக்கும் திமுகவின் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனுக்கு செக் வைக்கும் விதமாகவே, லீமா ரோஸ் மார்ட்டினை இங்கே களமிறக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

இருவரும் உடையார் சமூகத்தை சார்ந்தவர்கள். லீமா ரோஸ் மார்ட்டின், பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியில், கட்சி தொடங்கிய காலம் தொட்டே துணை பொதுச்செயலர் பதவி வகித்து வந்தவர். பின்னர், 2019 இல் இணை பொதுச்செயலராக பதவி உயர்ந்தார். 14 ஆண்டுகள் ஐ.ஜே.கே.யில் பயணித்து வந்த நிலையில், திடீரென்று 2026 ஆம் ஆண்டு பிப்-09 ஆம் தேதி, ஐ.ஜே.கே.விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, பிப்-17 இல் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, பிப்-25 இல் அவருக்கு அதிமுகவின் மாநில மகளிர் அணி இணை செயலர் பதவி வழங்கி அறிவிப்பை வெளியிட்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. எல்லாமே, அடுத்தடுத்த வாரங்களில் நிகழ்ந்திருக்கிறது என்பது இங்கே அழுத்தமாக குறிப்பிட வேண்டிய விடயமாக இருக்கிறது.

இந்நிலையில்தான், தற்போது, இலால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார், லீமா ரோஸ் மார்ட்டின். அதிக எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற வைப்பவர்களுக்குத்தான் அமைச்சர் பதவி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த மண்ணான இலால்குடியில் திமுகவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைத்தாக வேண்டிய கடும் சவால் அவருக்கு எதிராக நிற்கிறது.
எந்த கெடுதலும் செய்யாத எம்.எல்.ஏ. என்ற பெயர் எடுத்திருந்தாலும், உடையார் சொந்தங்களின் வாக்கையாவது அவர் தக்க வைத்துக் கொள்வாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியை கடுமையாக்கும் வகையில் அதே உடையார் சமூகத்தை சேர்ந்த பணத்தை பஞ்சமில்லாமல் வாரியிறைக்க தயாராக இருக்கும் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டினை களமிறக்கியிருக்கிறது, அதிமுக முகாம். இது, எடப்பாடியாரை வைத்து பாஜக போட்ட பக்கா கால்குலேசன் என்றே பேசிக்கொள்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.