மே 13 ல் விஜய் முதல்வர் – மு.க.ஸ்டாலின் எடுத்த அரசியல் மூவ் !
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பும் விறுவிறுப்புமாக மணிக்கொரு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே-4 அன்று எண்ணப்பட்டு அதேநாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், கடந்த நான்கு நாட்களாக தனிப்பெரும்கட்சியாக 108 இடங்களை கையில் வைத்திருக்கும் த.வெ.க.வால் ஆட்சியை அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
தேர்தலுக்கு முன் தீய சக்தி திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசு தேர்தலுக்கு பின் தூய சக்தி த.வெ.க. விஜயுடன் கூட்டணி என்பதாக அறிவித்து வெளியேறியது. காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையடுத்து ஆட்சியமைக்க அனுமதி கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இரண்டு முறை சந்தித்தும் இதுவரை ஆட்சியமைக்க அவர் அழைப்பு விடுக்கவில்லை என்று அனுதாப அலையை உருவாக்கி வருகிறார்கள்.

ஒருபக்கம், இது பாஜக சதி என்று குற்றஞ்சாட்டி காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி விசில் ஊதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மற்றொரு பக்கம், திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து கொண்டு த.வெ.க. உள்ளே விடாமல் சதி செய்கிறார்கள் என்று இணையத்தில் பொங்கி வருகிறார்கள் த.வெ.க.வின் ஆதரவாளர்கள். ஆனால், இப்போது வரையில் தமிழக மக்களின் மாற்றத்துக்கான தூதுவராக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் த.வெ.க. கட்சியின் தலைவராக ஒரு வார்த்தைக்கூட விஜய் வாயைத் திறக்கவில்லை.
“அவர் தனிப்பெரும்கட்சியாக ஆட்சியமைக்கும் உரிமை கோரியிருந்தால் நிச்சயம் அழைப்பு விடுத்திருப்போம். அவர் கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாகத்தான் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.” என்பதாக ஊடகங்களிடம் ”பின்னணி”யை போட்டு உடைத்திருக்கிறார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். நகைச்சுவை காட்சி ஒன்றில் வடிவேலு தனது சகாக்களுடன் கொள்ளையடிக்க வங்கிக்கு சென்றுவிட்டு தப்புத்தப்பாக எழுதி கொடுத்த துண்டுச்சீட்டு கதைதான் நியாபத்துக்கு வந்து தொலைக்கிறது. இதுஒருபுறமிருக்க, “வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி கூட்டணிக்கு வாருங்கள் என்று கேட்டால் எப்படி?” என்று விசிகவின் சிந்தனைச்செல்வன் ஊடகங்களில் இவர்களின் அணுகுமுறையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
த.வெ.க. ஆதரவாளர்கள் என்றில்லை, சில காட்சி ஊடகங்களின் மனநிலையும் அவ்வாறே அமைந்திருப்பது நிச்சயம் அவலமான ஒன்று. ”ஆட்சி அமைக்கிறார் விஜய். தேடி வந்த ஆதரவு” என்பதாக தலைப்பு செய்தியை ஓட விடுகின்றன. சட்டசபையில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க யாரை அழைக்கப் போகிறீர்கள்? யாரை சந்தித்து ஆதரவு கேட்கப்போகிறீர்கள்? என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு நேராக மைக்கை நீட்டுவதற்கு பதிலாக, அறிவாலயத்தின் வாசலில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் விஜய்க்கு ஆதரவு தருவீர்களா? மாட்டீர்களா? என்று மடக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில ஊடகவியலாளர்கள். இதற்கு அந்த மடக்கு ஊதிகளே தேவலை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இதெல்லாம் போதாதென்று, த.வெ.க.வை உள்ளே விடக்கூடாதென்று திமுக வன்மத்தோடு கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பது போலவும்; அதிமுகவுடன் கூட கூட்டணி அமைத்து நீ பாதி நான் பாதி என்று ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்னும் பலவாறாகவும் கற்பணை கதைகளை பஞ்சமின்றி கட்டவிழ்த்து வருகிறார்கள்.
ஆனால், இது எதைப்பற்றியும் இப்போது வரையில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகமான அரசியலையை கைக்கொண்டு வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியான முதல்நாளே மக்களின் தீர்ப்பை வரவேற்பதாக சொன்னவர் தனிப்பெரும்பான்மையாக வென்ற கட்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். தன்னை தோற்கடித்த கொளத்தூர் தொகுதி மக்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து திரும்பியிருக்கிறார். தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக, “மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது” என்பதாக தனது நிலைப்பாட்டையும் நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதன்வழியே, தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க. ஆட்சியமைப்பதை முட்டுக்கட்டை போட்டால், ஒன்று மோடி அமித்ஷாவின் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்புக்கு இடம் தருவதாக அமைந்துவிடும். அதாவது, அதிமுகவின் ஆதரவோடு அல்லது அதிமுவிலிருந்து சிலரை கழட்டி கொண்டு வந்து அவர்களின் ஆதரவோடு ஆட்சியமைக்கும் சூழல் உருவாகலாம். அல்லது, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு போகலாம். இது, மீண்டும் ஒரு சட்டசபைத்தேர்தலை நடத்த வேண்டிய இக்கட்டுக்கு இட்டுச்செல்லும். நிச்சயம் மக்களை ஒருவிதமான அரசியல் அலற்சிக்கு ஆளாக்கிவிடும் என்று திமுக தலைமை உணர்ந்திருப்பதால்தான், த.வெ.க. விவகாரத்தை நிதானமாக கையாண்டு வருகிறது என்கிறார்கள்.

இதற்கு மாற்றாக, அவசியப்பட்டால் தனது கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவை நிபந்தனைகளின் அடிப்படையில் த.வெ.க.வுக்கு வழங்குவதன் மூலம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் த.வெ.க. ஆட்சி அமைய திமுக அரசியல் நாகரீகத்தோடு ஆதரவை வழங்கும் என்பதாகவே அறியமுடிகிறது. மகளிர் உரிமைத்திட்டம், பள்ளிப் பிள்ளைகளின் காலை சத்துணவு திட்டம் உள்ளிட்ட அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை தொடர வேண்டும்; மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அந்த நிபந்தனைகளுள் பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்.
ஒருவேளை, திமுகவின் இந்த நாகரிக அரசியல் முயற்சி த.வெ.க. விஜயின் தனிப்பட்ட ஈகோ மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்றோரின் அரசியல் வன்மம் நிறைந்த வாய்க்கொழுப்பு பேச்சுக்களால் தடைபட்டு போகும் பட்சத்தில், மோடி அமித்ஷாவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் நிச்சயம் தமிழகம் இதுவரை எதிர்பாராத ஒன்றாக, எதிர்மறை அனுபவமாகவும் அமையும் என்ற பேராபத்தையும் தமிழகம் எதிர்நோக்கியிருக்கிறது.
ஆனாலும், எப்படியும் முதல்வராகிவிட வேண்டுமென்ற வேட்கையில் இருக்கும் த.வெ.க. விஜய், தீய சக்தி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நாகரீக அரசியல் பலனாக மே-13 அன்று முதல்வராக பதவியேற்பார் என்றே அனுமானிக்க முடிகிறது. மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்துவிட்டு த.வெ.க. தலைவர் விஜய் என்னதான் சொல்லப்போகிறார் என்பதை நாமும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.