ஆறுமாத கனவை நனவாக்கிய எம்.எல்.ஏ.வின் அப்பா ! சர்ச்சையை கிளப்பிய எதிரி கட்சி !
”ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் அனைவருக்கும் அவரைப்பற்றி நன்றாகவே தெரியும். பார்வையாளர்கள் கேலரியில், மஞ்சள் பையுடன் மங்களகரமான திருவிழா – கும்பாபிஷேக அறிவிப்பு நோட்டீஸோடு எப்போதும் ஓரிருவராவது அமர்ந்திருப்பார்கள். படியேறி வந்தவர்களை வெறும் கையோடு அனுப்பக்கூடாது என்ற சம்பிரதாயத்துக்காக, ஏதோ ஒன்றை கொடுத்து வழி அனுப்பி வைக்கும் நபரும் அல்ல அவர். வந்தவர்களின் முகம் புன்னகைக்கும் வகையில், திருப்திகரமான முறையில் அவர்களை அனுப்பி வைப்பதை தனித்துவமான பழக்கமாகவே கொண்டவர்.” என்பதாக, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தன் அ.சீனிவாசனை பற்றி சிலாகிக்கிறார்கள், அவரைப்பற்றி நன்கறிந்தவர்கள்.
வருடந்தோறும் அவரது பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதையும் இப்போதுவரையில் அவர் நிறுத்தியதில்லை. தங்களது தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தில் கடைநிலை ஊழியர்களாக பல ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 100 பேருக்கு, அவரே தனது சொந்த செலவில் அவர்கள் குடும்பத்தோடு குடியிருப்பதற்கான வீடுகளை கட்டிக்கொடுத்திருப்பவர். கணக்கு காட்டுவதற்காக, கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் செலவழிக்க வேண்டுமென்பதற்காக அல்ல; தன்னியல்பிலேயே அப்படிப்பட்டவர்தான், தனலெட்சுமி பல்கலை வேந்தர் சீனிவாசன் என்கிறார்கள்.
இந்நிலையில்தான், முசிறியைச் சேர்ந்த காட்டுகுளம் கணேசன், ராமச்சந்திரன், மண்ணச்சநல்லூரை சேர்ந்த செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாசபெருமாள், ராஜசேகர், மனோகர் என ஏழுபேருக்கு தனது சொந்த செலவில், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார் அ.சீனிவாசன். சுமார் 22 இலட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய அவரது பெருந்தன்மையை கண்டு பூரிப்படைந்து கிடக்கிறார்கள் அந்த ஆனந்த பரிசை பெற்றவர்கள்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக தரப்பில் இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கும் விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
அதிமுகவின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஏவூர் பி.நாகராஜன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி 16.03.2026 மற்றும் 17.03.2026 தேதி அன்று தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்களான காட்டுகுளம் கணேசன், ராமச்சந்திரன், செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாச பெருமாள் மற்றும் பேரூர் கழக செயலாளர்களான ராஜசேகரன் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு புதியதாக மகிந்திரா ஸ்கார்பியோ என்ற நான்கு சக்கர உயர்ரக சொகுசு கார்களை எஸ்.கதிரவன் எம்.எல்.ஏ. மற்றும் அவர்களின் தந்தை சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து பரிசாக வழங்கியுள்ளனர்… தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய குற்றத்திற்காக எஸ்.கதிரவன் எம்.எல்.ஏ. மீதும் அவரது தந்தை சீனிவாசன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு” எழுதியுள்ள கடிதம்தான், தேர்தல் நேரத்தில் அரசியல் சூட்டை கிளப்பியிருக்கிறது.
”இப்போ இல்ல. ஆறு மாசத்துக்கு முன்னாடியே, வாங்கி கொடுத்திருக்க வேண்டியது. அப்போது, ஆர்டர் செய்து தற்போது கைக்கு வந்தநிலையில் வழங்கியிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிலும் தினமும் மாலை நேரங்களில் அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், அவர்களோடு மக்களோடு மக்களாக உணவருந்தும் நிகழ்வை எம்.எல்.ஏ. கதிரவன் தொடர்ந்து செய்து வந்தார். அவர்களிடம் இல்லாத காசு, பணமா? அவர்கள் நினைத்திருந்தால் கட்சி நிர்வாகிகளுக்கு அப்போதே இந்த கார்களை பரிசளித்திருந்திருக்க முடியும். இது, சீனிவாசன் தனிப்பட்ட முறையில் எப்போதும் செய்வதைப்போல வழங்கிய அன்பு பரிசு. இதனை இப்போது அரசியலாக்கிவிட்டார்கள்.” என்கிறார்கள், மண்ணச்சநல்லூர் தொகுதிவாசிகள்.
வழியில் சொந்தத்தை பார்த்தால், அன்பாய் விசாரித்து விருந்தோம்பல் செய்து வழியனுப்பி வைப்பதையும்; சொந்த பந்தம் நடத்துற காதுகுத்து, திருமண விழாவில் வைக்கப்படும் மொய்களுக்கும்கூட, தேர்தல் நடத்தை விதிமீறல் என்று கூப்பாடு போடாமல் இருந்தால் சரிதான் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.