பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் !
தனக்கு பின்னால் சேர்ந்தவருக்கு பதவி கொடுத்து விட்டதால் காழ்ப்புணர்ச்சியில் தங்கள் மீது பொய் குற்றசாட்டுகளை சுமத்துவதாக தவெக பெண் நிர்வாகி புகார் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தில் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்தவர் ஷர்மிளா. தற்போது சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவர் தவெக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி தன்னிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன் பதவியை பறித்துக்கொண்டதாகவும் கூறி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார்.

இது தொடர்பாக ஷர்மிளா பேசி வௌியிட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வரை ஷர்மிளா தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் இது தொடர்பாக கட்சி தலைமையிடம் புகாரளித்தும் மதுரை தெற்குமாவட்டசெயலாளர்தங்கபாண்டிமீது கட்சி தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாக கூறி ஷர்மிளாவின் கணவரும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளராகவும் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து குற்றம்சாட்டினார்.
அதில் தன் மனைவி வகித்து வந்தபதவியை தற்போது வேறு பெண்ணிற்கு ஏராளமான பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கிவிட்டதாகவும் ஐடி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் அதன் மூலம் கட்சிக்கும் வளர்ச்சி ஏற்படும் என மாவட்ட செயலாளர் கூறியதால் நிலத்தை அடமானம் வைத்து ரூ.16 லட்சத்தை பழங்காநத்தம் பகுதியில் உள்ள பாத்திமா ஹனியா மற்றும் யோகானந் ஆகியோர் நடத்திய ஐடி கம்பெனியில் முதலீடு செய்தோம்.
ஆனால் தற்போது வரையில் எவ்வித லாப தொகையும் கொடுக்கவில்லை. இதனால் கடனாளியாக இருந்ததால் மன உளைச்சலில் தனது மனைவி ஷர்மிளா தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து தங்கள் பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார். அப்போது அவர் பேசியதாவது நான் கடந்த ஆண்டு தான் தவெகவில் மகளிர் அணி அமைப்பாளரான ஷர்மிளா மூலம் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினேன். தொடர்ந்து ஷர்மிளாவுக்கு கீழ் மகளிர் அணியில் பொருளாளராக இருந்து வந்தேன். அப்போது ஷர்மிளா டிரேடிங் மூலம் பணம் சம்பாதித்து தரும்படி சுமார் 12 லட்சம் அளவிற்கு பல தவணைகளாக எனக்கு அனுப்பி இருந்தார்.

பின்னர் அவருக்கு ரூ16 லட்சம் வரையில் ஜிபே மூலமாகவும் ரொக்கமாகவும் திருப்பி வழங்கி விட்டதாகவும் தொடர்ந்து தங்களிடம் கூடுதலாக பணம் கேட்டு தங்களை வற்புறுத்தி வந்தார். இந்தநிலையில் தனக்கு சமீபத்தில் தவெகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு அமைப்பாளராக பதவி கொடுத்தால் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய பொய்குற்றசாட்டுகளை சுமர்த்தி வருகின்றனர். எனவே அவர்கள் தங்கள் மீதான குற்றசாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.