அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’
தயாரிப்பு: இபிஎஸ் பிக்சர்ஸ் எட்வர்ட் ராஜன், டைரக்டர்: மணிகண்டன் ராமலிங்கம், ஆர்டிஸ்ட்: ஃபிரெடெரிக் ஜான், ஆய்ரா பலாக், சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜாரவி. ஒளிப்பதிவு: பாலா ஜி.ராமசாமி, இசை: அஸ்வின் கிருஷ்ணா, எடிட்டிங்: கோவை அபிஷேக், ஆர்ட் டைரக்டர்: சுரேந்திரன் செல்வராஜ், பி.ஆர்.ஓ: ஸ்ரீவெங்கடேஷ்
1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து இப்போது வரை அந்த அஸ்தினாபுரம் மக்கள் சாத்தானை நம்பும் மூடநம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களுடன் வெளியாட்கள் பழகுவதற்கே பயப்படுகிறார்கள். இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் ஒரு பகீர் புத்தகம் ஒன்று இருப்பதாகவும் நம்பும் அளவுக்கு மூடநம்பிக்கை அந்த கிராமத்து மனிதர்களின் மூளையில் புரையோடிப் போயுள்ளது.
அந்த புத்தகத்தை வைத்து இறந்த தனது கணவனுக்கு உயிரூட்ட முனைகிறாள் விக்டோரியா என்ற பெண். திடீரென நாக்கையும் கட்டைவிரலையும் அறுத்து எறிகிறாள். அதில் அவளும் அவளது கணவனும் பலியானது தான் மிச்சம். அந்த விக்டோரியாவின் வாரிசான மோனா பெத்ரேவுக்கும் இதே கொடூர சிந்தனை இருக்கிறது. இந்த மோனாவின் வாரிசு ஆய்ராவுக்கும் இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் ஆய்ராவைப் பார்த்தாலே பயந்து ஒதுங்குகிறார்கள். ஆனால் ஆய்ராவுடன் படிக்கும் ஃபிரெடெரிக் அவளைக் காதலிக்கிறான். அதன் பின் நடக்கும் திகில் சம்பங்களும் திடுக்கிடும் சங்கதிகளும் தான் இந்த ‘சாத்தான் –தி டார்க்’.
தனது சிறுவயது மகளிடம் அஸ்தினாபுரம் குறித்த கதையைச் சொல்லி முடித்ததும் வீட்டிற்குள்ளேயே டமார்….டமார் என கதவைத் தட்டும் சத்தமும் அந்தச் சின்ன கதவிற்குப் பின்னே ஒரு பாட்டி இருக்கும் சங்கதியுடன் தான் படத்தின் திகில் சீன் எண்ட்ரியாகிறது. அதன் பின் ஆய்ரா வளர்ந்து பள்ளிக்கு கிளம்பும் போது, “அம்மாவை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டுப் போ” என மோனா சொல்லும் போதே அடுத்தடுத்து நடக்கப் போகும் பயங்கரங்கள் நம் கண்முன்னே வந்து பயமுறுத்துகிறது. கதவில் தலையால் முட்டுவது, கை கட்டைவிரலை வெட்டுவது என மோனாவின் ஆக்ஷன் எல்லாமே திகிலூட்டுகின்றன. பார்ப்பதற்கு பப்ளிமாஷ் மாதிரி இருந்தாலும் ஆய்ராவுக்குள்ளும் அந்த சாத்தான் புகும் அந்த ஒரு சீனில் ரொம்பவே மிரட்டுகிறார். இவரது தங்கையாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் மோனாவின் ஆக்டிவிட்டீஸைப் பார்த்து மிரள்வதும், பின்னர் தாய்ப்பாசத்துடன் கட்டி அணைத்துக் கொள்வதும் என கவனம் ஈர்க்கிறார். ஆய்ராவின் லவ்வராக வரும் ஃபிரெடெரிக்கு படத்தில் அதிக வேலை கொடுத்திருக்கிறார் டைரக்டர். “எங்க வீட்ல நாலு பேரு இருக்காங்க” என ஆய்ரா சொன்னதும் அதிர்ச்சியாகி, அந்த நாலாவது ஆள் யாருன்னு கண்டுபிடிக்க அவரது வீட்டுக்குள் போய் சிக்கித் தவித்து மீள்வது, அதன் பின் போலீசுக்கு உதவ களத்தில் இறங்குவது என நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கார் ஃபிரெடெரிக்.
இன்ஸ்பெக்டராக வரும் தயாரிப்பாளர் எட்வர்ட் சரியான செலக்ஷன். மதராக வரும் ஸ்ரீஜாரவி, பாதிரியாராக வருபவர் என எல்லோருமே பக்காவாக பங்களிப்பு செய்துள்ளார்கள். ஃப்ளாஷ்பேக்கில் விக்டோரியாவாக வரும் சாந்தினி தமிழரசனின் சாந்தமான முகமும் சாத்தானின் முகமும் கனகச்சிதம். பாலா ஜி.ராமசாமியின் ஒளிப்பதிவும் கோவை அபிஷேக்கின் ஷார்ப்பான எடிட்டிங்கும் திகிலைக் கூட்டுகிறது. சாத்தானின் சிலை, மோனாவின் வீடு, அதற்குள் இருக்கும் திகில் அறை இவற்றை செமத்தியாக செட் போட்டுள்ளார் ஆர்ட் டைரக்டர் சுரேந்திரன் செல்வராஜ்.
திகில் சம்பவங்கள், கோர முகங்களின் பின்னணி என்ன என்பதற்கான காரணத்தை கடைசி இருபது நிமிடங்கள் வரை சஸ்பென்ஸாக கொண்டு போய் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து மிரட்டியுள்ளார் டைரக்டர் மணிகண்டன் ராமலிங்கம்.
அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’ 44/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.