வெற்றி தோல்வி என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு செயலில் முழு முயற்சியையும் வழங்கும் போதும், வெற்றி மற்றும் தோல்விக்கான வாய்ப்பை சரிசமமாகவே வைத்து இறுதி நொடி வரை உழைப்பது நல்லது.
நாம் நன்றாக உழைக்கும் போதும் அதற்குரிய நிபுணத்துவத்தையும் தகுதியையும் உயர்த்திக் கொள்ளும் போதும் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருப்பது போலவே நமது மூளை சிந்திக்கத் துவங்கும்.
ஆயினும் மனதின் சிந்தனையை இயன்ற அளவு அதன் வெற்றிக்கான சார்புத் தன்மையை (INHERENT BIAS) விட்டும் சாய்வை விட்டும் இழுத்து வந்து தோல்வியும் எந்த நிலையிலும் சாத்தியமே என்பதை அதற்கு விளங்க வைத்து தொடர்ந்து அதை நடுநிலையில் (UNCERTAINTY) நிலை நிறுத்துமாறு பயிற்சி செய்வது நல்லது .
நமக்கு பல நேரங்களில் நமது கம்ஃபர்ட் சோன் எனப்படும் தோதான வாகான வட்டத்துக்குள் அனைத்தும் நன்றாக நடப்பது போலவும் வெற்றிக்காகவே நாம் பிறந்தது போலவும் ஒரு போலி பிம்பத்தை நமது மனம் நமக்காக கட்டமைத்து வைக்கிறது.
என்னைப் பொருத்தவரை நாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து வெற்றிகள் வந்து கொண்டே இருந்தால் நாம் நமக்கு தோதான வட்டத்துக்குள் இருந்து ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
முயற்சி என்றால் அதில் வெற்றி தோல்வி இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு இருந்தால் மட்டுமே அதில் சுவாரஸ்யம் இருக்கும். சுவாரஸ்யமற்ற ஊக்கமளிக்காத விசயங்கள் அனைத்தும் மூளை சிந்தனை செயல்பாட்டு முடக்கத்துக்கு காலப்போக்கில் வழிவகுக்கும்.
பல நேரங்களில் நாம் தோற்றால் நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ? என்ற எண்ணமே மிகப்பெரும் அழுத்தத்தை உருவாக்கி மன நிம்மதியை கெடுக்கிறது.
அதே சமயம் வெற்றி எப்படி ஒரு நிகழ்வோ?
அதைப்போலவே தோல்வியும் நிகழ்வே என்று இரண்டையும் ஒன்றாக பாவிக்க மனதுக்கு பழக்கப்படுத்தினால் தோல்வியும் வெற்றியும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.
பிறர் எடுக்கும் முயற்சிகள் பயிற்சிகளை ரிஸ்க்குகளை எடுக்காமலே அவர் பெறும் வெற்றியை எண்ணி பொறாமைப்படுவது தவறு.
நிலையில்லாமை ஒன்றே நிலையானது வெற்றி தோல்வி இரண்டுமே நிலையில்லாதது.
நமது பங்கு இதில் சிந்திப்பது செயலாற்றுவது உழைப்பது முயற்சிப்பது மற்றது எதுவும் நம் கையில் இல்லை.
வெற்றிக்குள் தோல்வி என்பது அது தரும் செருக்கு.
தோல்விக்குள் வெற்றி என்பது அது தரும் கற்றல்
வெற்றிக்குப் பிறகு செருக்கு கொள்பவனை தோல்வி அடைகிறது. தோல்வி மூலம் கற்பவனை வெற்றி கை கொள்கிறது.
இவ்வளவே வாழ்க்கை நான் கடந்து வந்துள்ள சிறு வாழ்வில் நான் பெற்றுள்ள சிற்றறிவின் மூலமும் சிற்றனுபவம் மூலமும் கண்டுள்ள உண்மை யாதெனில் ஒரு வெற்றியை விட வெற்றிக்கான பயணம் முக்கியமானது. அதற்கான போராட்டமும் உழைப்பும் தியாகமும் அதனை விடவும் முக்கியமானது.
ஒரு தோல்வியை விட அந்தத் தோல்வி மூலம் பெற்ற ஞானம் பெரிது.
தோல்வியால் கைவிட்ட அகந்தை நல்லது.
தோல்வி மூலம் மாறிய பயணத்தின் கோணம் தேவையானது.
செருக்கை தரும் வெற்றியை விட ஞானம் தரும் தோல்வி நன்று.
ஒரு வெற்றியில் அனைத்தும் முடிந்துவிடுவதில்லை.
ஒரு தோல்வியிலும் கூட அனைத்தும் முடிந்துவிடுவதில்லை.
நம் மனம் நோக்கும் எண்ணத்தைப் பொருத்தே தோல்வியும் வெற்றியும் அமைகின்றன.

சிலர் எத்தனை வெற்றியிலும் அகந்தை கொள்வதில்லை.
சிலர் எத்தனை தோல்வியிலும் பொறுமை இழப்பதில்லை.
அவர்கள் வெற்றியில் துள்ளிக்குதிப்பவர்களும் அல்லர்.
தோல்வியில் துவண்டு விடுபவர்களும் அல்லர்.
சமர் முடியும் வரை தொடர்ந்து சண்டை செய்பவர்கள் அவர்கள்
பரீட்சை முடியும் வரை தொடர்ந்து எழுதுபவர்கள் அவர்கள்
பயணம் முடியும் வரை தொடர்ந்து நடப்பவர்கள் அவர்கள்
அவர்களில் ஒருவனாகவே நானும் இருக்க விரும்புகிறேன்
பூலோகம் தோறும் நடந்து திரியும் பயணிக்கு
பூக்கள் சொறிந்த சோலை தரும் இன்பமும் சரி
கற்கள் நிறைந்த பாலை தரும் துன்பமும் சரி
இரண்டும் தற்காலிகமானவை நிலையற்றவை என்று தெரியும்.
அந்தப் பயணி போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
வெற்றியோ, தோல்வியோ இரண்டும் முக்கியமே இல்லை.
நாம் கடந்து வரும் பயணமே முக்கியம்
வெற்றியோ தோல்வியோ இரண்டும் முக்கியமே இல்லை
இவை இரண்டுக்குப் பின்னும்
நாம் காக்கும் கண்ணியமே முக்கியம்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை








Comments are closed, but trackbacks and pingbacks are open.