குடிபோதையில் கார் ஓட்டி 10 டூவீலர்களை இடித்து சேலம் கடைவீதியை அலற விட்டவர் கைது !
குடிபோதையில் கார் ஓட்டி 10 டூவீலர்களை இடித்து சேலம் கடைவீதியை அலற விட்டவர் கைது !
சேலம்.
14.05.2023..
சேலம் கடை வீதியில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர் கைது
சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் 10 த்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
சேலம் ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவர் குடும்பத்துடன் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன கடைவீதி பகுதியில் பொருட்கள் மற்றும் துணிகள் வாங்குவதற்காக காரில் வந்துள்ளார்.
குடும்பத்தினரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு நமச்சிவாயம், குடிபோதையில் இருந்த நிலையில், தனது காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
அதனால், சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மீது மோதிய அவர் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியதால் வாகனங்கள் சேதமடைந்தது.
வாகனங்கள் மோதியதால் கார் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றது.வாகனங்கள் மீது மோதியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிபோதையில் இருந்த ஓட்டுநரை வெளிய வருமாறு கூச்சலிட்டனர் .
தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த சேலம் நகர காவல் துறையினர் குடிபோதையில் இருந்த நபரை காரில் இருந்து இறங்குமாறு வெகு நேரம் கேட்டும் அவர் இறங்க மறுத்த நிலையில் காரை திறந்து வலுக்கட்டாயமாக நபரை இழுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஆள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதியில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்று குடிபோதையில் கார் ஓட்டுவது மேலும் அஜாக்கிரதையாக வாகனத்தை ஆபத்து ஏற்படுத்தும் விதமாக ஓட்டுவது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இரவு முழுவதும் சேலம் டவுன் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நமச்சிவாயம் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் யாரும் நடமாடாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– சோழன்தேவ்