அடுத்த குறி ஆ.ராசாவுக்கா?
அடுத்த குறி ஆ.ராசாவுக்கா?
2ஜி வழக்கு, நண்பர் சாதிக் பாஷாவின் மர்ம மரணம் என பெரும் சோதனைக்கு உள்ளானவர் முன்னாள் மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா. ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி வழக்கை அடிப்படையில் வழக்குரைஞரான ஆ.ராசா தனது வாதத்திறமைகளால் தவிடுபொடியாக்கி விடுதலையானது தனி வரலாறு. 2ஜி வழக்கை தான் எதிர்கொண்ட அனுபவத்தை தனி நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜூன் 19 ஆம் தேதி தனது பாதுகாவலர்கள் புடை சூழ, வரிசையாக ஏழு கார்கள் பயணிக்க பூலாம்பாடி பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர் என்பவர் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் என்ன விவாதிக்கப் பட்டது என்பதெல்லாம் இரகசியமாகவே இருக்கிறது.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் அடுத்தடுத்து ஐ.டி. ரெய்டு, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது எல்லாமே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பூலாம்பாடி மற்றும் வேப்படி பாலக்காடு பகுதிகளில் முகாமிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், ஆ.ராசா நடத்தியிருக்கும் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.